🔴 LIVE | முப்பெரும் விழா 2023


திமுக வெற்றிக்கு கைகொடுத்த தொட்டிய நாயக்கர் சமுதாய வாக்குகள்!-பகுதி-5

தொடர்ச்சி-5

ஈரோடு மாவட்டம் பெருந்துறை, அந்தியூர்,பவானி,பவானிசாகர் ஆகிய நான்கு தொகுதிகளிலும் தொட்டிய நாயக்கர் சமுதாய வாக்குகள் தலா 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வாக்குகள் உண்டு. இதுதவிர DNT சமூகங்களான வேட்டுவக்கவுண்டர், போயர் சமுதாயத்தினரும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர். அங்கு திமுக-வில் இச்சமுதாயங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை. சத்தியமங்கலம், அந்தியூர் ஒன்றியங்களில் அதிமுக உட்பட பிற கட்சிகளில் ஒன்றியச்செயலாளர் பதவிகளை தொட்டிய நாயக்கர் சமூகத்திற்கு வழங்கியுள்ளன. ஆனால் திமுக-வில் அப்பதவிகளை அந்த ஒன்றியங்களில் குறைந்த அளவேயுள்ள சமூகங்களுக்கு வழங்கியுள்ளது. பெருந்துறை ஒன்றியத்தில் சமீபத்தில் தொட்டிய நாயக்கர் சமூகத்தைச்சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் ஒன்றியப்பெருந்தலைவர் பதவி கம்பளத்தாருக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்பைக்கூட மாவட்ட நிர்வாகம் அப்போதைய ஆளும்கட்சியுடன் மறைமுக கூட்டணி அமைத்து பறித்துக்கொண்டதாக அப்பகுதி கம்பளத்தார்களின் மத்தியில் திமுக மீது அதிருப்தி உண்டு. அந்தியூரில் விடுதலைக்களம் சார்பில் நடைபெற்ற தொட்டிய நாயக்கர் அரசியல் எழுச்சி மாநாட்டின் மூலம் ஏற்பட்ட அரசியல் எழுச்சியை, திரு.நாகேஸ்வரன் போன்ற வலிமையான திமுக கட்சி பிரமுகர்களால், திமுக வேட்பாளருக்கு ஆதரவான வாக்குகளாக மாற்ற முடிந்தது. இதனால் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த திமுக வேட்பாளர் சொற்ப வாக்குகளில் வெற்றிபெற முடிந்தது. இதுவே மாவட்டம் முழுவதுமுள்ள தொட்டிய நாயக்கர் சமுதாய தலைவர்களுக்கு கட்சியில் உரிய அங்கீகாரமும், பொறுப்புகளும் வழங்கி, DNT, இடஒதுக்கீடு பிரச்சினையை கவனத்துடன் கையாண்டிருந்தால் பெருந்துறை, பவானிசாகர் தொகுதிகளை திமுக கூட்டணி வென்றிருக்கமுடியும்.

இதேபோல் 1700 வாக்குகளில் வெற்றிவாய்ப்பை தவறவிட்ட பொள்ளாச்சி சட்டமன்றத்தொகுதியில் கம்பளத்தார் சமூக வாக்குகள் 4000 வாக்குகள் உள்ளது. இதுதவிர DNT சமூகத்தைச்சேர்ந்த வேட்டுவக்கவுண்டர், போயர், தெலுங்குபட்டி செட்டியினர் வாக்குகளையும் சேர்த்தால் 10000 வாக்குகளை தாண்டும். இதேபோல் கவுண்டம்பாளையம் தொகுதியிலும் கம்பளத்தார் வாக்குகள் குறிப்பிடத்தக்க அளவில் உண்டு. இதை ஒருங்கிணைக்க திமுக வேட்பாளர் உரிய கவனம் செலுத்தியிருந்தால் உறுதியாக திமுக இத்தொகுதிகளை கைப்பற்றியிருக்கும். மேலும் உடுமலை, மடத்துக்குளம் போன்ற சட்டமன்றத் தொகுதிகளிலும் தொட்டி நாயக்கர் சமுதாய வாக்குகள் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யும் அளவில் உள்ளது. அப்படியிருந்தும் திமுக-விற்கு அந்த வாக்குகளை முழுமையாக பெறமுடியாததற்கு அதிகாரத்தை பிற சமூகங்களுக்கு பரவலாக்காததே காரணம். கட்சி அமைப்பிலுள்ள இதுமாதிரியான குறைகளை ஐபேக் போன்ற திமுக-விற்கு ஆலோசனை வழங்கிய அமைப்புகளும் கோட்டைவிட்டது பெருந்துறை, பவானிசாகர், மடத்துக்குளம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட ஆறு தொகுதிகளின் வெற்றிவாய்ப்பு பறிபோனது.

கொங்குமண்டல திமுகவின் அமைப்பு ரீதியான பலவீனங்களைத்தாண்டி குறிப்பிடத்தக்க அளவில் வெற்றிபெற்றதில் கம்பளத்தார்களின் வாக்குகள் மிகமுக்கியமானது. ஆட்சி பொறுப்பில் அமர்ந்துள்ள திமுக, கொங்குமண்டலத்தில் கட்சியை வலுப்படுத்த முயற்சி எடுக்கும்பொழுது தொட்டிய நாயக்கர், வேட்டுவக்கவுண்டர்,போயர் உள்ளிட்ட DNT சமூகங்களுக்கும், பெரும்பான்மை சமூகமல்லாத பிற சாதிகளுக்கும் கட்சியிலும், நிர்வாகத்திலும் உரிய பங்களிப்பை வழங்கினால், திமுக-வை அசைக்கமுடியாத சக்தியாக மாற்றலாம்.

(முற்றும்)

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved