🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சப்தரிஷிகளில் ஒருவரான காசிபர் யாகத்தை காத்த கந்தன்!

காசிபர், காசியபர் அல்லது காசியப்பர் (Ksahyapa) இந்து தொன்மவியல் அடிப்படையில் சப்தரிஷிகளுள் ஒருவராவார். இவர் மரீசி முனிவரின் புதல்வர். இவர் அதிதி, திதி, கத்ரு, வினிதா, தனு, முனி, அரிட்டை, சுரசை, சுரபி, தாம்ரா, குரோதவசை, இரா மற்றும் விஸ்வா என்ற பிரஜாபதி தட்சனின் பதிமூன்று மகள்களையும், பதங்கி, யாமினி ஆகியோரையும் மணந்தவர்.

காசியபர்- அதிதி தம்பதியருக்கு பிறந்த பன்னிரண்டு மக்களும் ‘பன்னிரு சூரியர்கள்’ எனப்பட்டனர். அதிதியின் பிள்ளைகள் என்பதால் ‘ஆதித்தியர்’ என்றும் அழைக்கப்பட்டனர். இந்த பன்னிருவர்களில் முதல்வனான விசுவான் தான், இப்போது உலகை பிரகாசிக்கச் செய்யும் சூரியன் என்று மற்றொரு புராண வரலாறு கூறுகிறது.

ஆதித்தியர் என்பவர்கள் தேவர்கள் என்றும், இரண்டாவது மனைவியான திதி என்பவள் மூலம் பிறந்தவர்கள் அனைவரும் அசுரர்கள் குறிப்பிடப்படுகின்றனர். பிறப்பால் சகோதரர்கள்! ஆனால் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே எப்போதும் யுத்தம் தான். தந்தை காசிபரோ இந்தச் சகோதர சண்டையில் தனக்கு ஏதும் தொடர்பே இல்லை என்பதுபோல் தவம், தியானம் என்று ஒதுங்கி விடுவார். சண்டையில் அசுரர்களோடு தங்களால் தனித்துத் தாக்குப்பிடிக்க முடியாது என்று தேவர்கள் ஒத்தாசைக்கு திருமாலிடம் ஓடினார்கள். தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி திருமால் பாற்கடலை கடைந்து மோகினி ரூபத்தில் தேவர்களுக்கு அமிர்தத்தை வழங்கி அசுரர்களை அடியோடு அழித்த கதை எல்லோருக்கும் தெரிந்ததே.

தனது அசுர புத்திரர்களை இழந்து தவித்த திதி, கணவர் காசிபரை அணுகிக் கதறினாள். "சுவாமி! என் புத்திரர்களுக்கு நேர்ந்த கதியைப் பார்த்தீர்களா? என் பெயர் சொல்ல ஒருவன் கூட இல்லாத மகாபாவி ஆகிவிட்டேனே. நீவிர் கருணை கூர்ந்து சந்ததி வளர ஒரு புதல்வனைத் தந்தே ஆகவேண்டும்" என்று மன்றாடினாள். மனைவி திதியின் நிலைகண்டு காசிபருக்கும் பரிதாபமாக இருந்தது. "திதி! நீ கவலைப்படாமல் செல். உன் விருப்பப்படி குலவிருத்தி செய்ய ஒரு புதல்வனைத் தருவேன்" என்று வாக்குதந்தார். பின்பு குமாரக் கடவுள் அருள்பாலிக்கும் அறுபத்து நான்கு திருத்தலங்களில் ஒன்றான "புத்திரகாமம்" என்னும் புனித ஷேத்திரத்தை அடைந்து அங்கு யாகம் செய்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார்.

முதலில் யாகசாலை அமைக்கத் தேவையான தூய இடத்தைத் தேர்ந்து எடுத்து தாம் எந்தப் பலனை வேண்டி யாகம் செய்கிறோமோ அதற்கு ஏற்ற இலக்கணப்படி யாகசாலை நிறுவி ஹோம குண்டங்களையும் விதிப்படி அமைத்தார். நல்ல நேரம் பார்த்து மறை முறைப்படி சிவாகம மந்திரங்களை ஓதி யாகத்தை ஆரம்பித்துச் செய்து வந்தார்.

காசிபர் செய்யும் இந்த யாகம் தடை ஏதுமின்றி இனிதே முடிந்தால் அவர் மனைவி திதியின் வயிற்றில் கர்ப்பமுண்டாகும். இதனையறிந்த தேவேந்திரனுக்குப் பெரும் கவலை வந்துவிட்டது. திதி கர்ப்பமுற்று அவளுக்குப் புத்திரன் பிறந்தால் அவள் வயிற்றில் எப்பேர்ப்பட்ட அசுரன் பிறப்பானோ, மறுபடியும் தேவர்களுக்குத் தலைவலிதானே என்று அஞ்சி திருமாலிடம் சென்று காசிபர் யாகத்தைக் குலைக்க என்ன செய்யலாம் என்று வினவினான்.

முனிவர் ஒருவர் செய்யும் யாகத்தைத் தடை செய்து அதை உருக்குலைக்க வேண்டும் என்றால் அது அசுரர்களால் மட்டுமே முடியும். அதற்கு அசுரர்கள் தயவு இப்போது தேவர்களுக்குத் தேவைபட்டது!

காசிப முனிவருக்கோ என்ன செய்வது என்று தெரியவில்லை. தேவேந்திரன் செய்யும் அபிசார வேள்வியிலிருந்து தப்பிக்கத் திருமாலை நாடலாம் என்றால் அவரே தேவேந்திரனுக்கு உதவியாய் நிற்கிறார். என்ன செய்வது? உடனே அவருக்கு அக்னி வடிவான சுப்ரமணியரின் நினைவு வந்து குமாரக் கடவுளிடம் தஞ்சம் புகுந்தார்.

"அடியேனையும் என் யாகத்தையும் காத்தருளும் தேவாதி தேவா! உம்மையே அடைக்கலம் புகுந்து நிற்கிறேன். சுப்ரமணியோம்! அடைக்கலம் அடைக்கலம்'' என்று பெருங்குரலெடுத்து சுப்ரமணியரைத் துதித்து நின்றார் காசிப முனிவர்.

சேயின் குரலைக் கேட்ட தாய்போல் அருள்சுரந்து பால வடிவத்துடன் வேலாயுதம் தரித்த கரத்தினராய் முருகன் முனிவர் முன் தோன்றி, "முனி சிரேஷ்டரே! கவலை வேண்டாம். நீவிர் யாகத்தைத் தொடர்ந்து செய்யும். யாம் காவல் காத்து அருள்வோம்! என்று முருகவேள் முனிவருக்கு அபயக்கரம் நீட்டினார்.

காசிபரும் இந்த கந்த சகஸ்ரநாம அர்ச்சனை செய்து சோடச ரூப தியானம் செய்து யாகத்தைத் தொடர்ந்தார். இதற்கிடையே தேவர்கள் செய்த அபிசார வேள்வியிலிருந்து மலையன், மாரன் என்னும் இரு பெரும் அசுரர்கள் தோன்ற, அவர்களை காசிபரின் வேள்வியைக் குலைக்க அனுப்புகிறான் தேவேந்திரன். அந்த அசுரர்கள் "ஓ" வென்று பெருங்குரலெடுத்து ஆரவாரித்து முனிவரையும் யாகப்பொருள்களையும் விழுங்க ஓடிவந்தார்கள். ஆனால் யாகசாலை வாயிலில் காவலனாய் நின்ற குமரவேளின் வேல் அந்த அசுரர்களைப் பொடிப்பொடியாகத் துவம்சம் செய்தது. யாகமும் தொடர்ந்து இனிதே நிறைவேறியது. யாகத்தை முடித்து காசிப முனிவர் அந்த இடத்தில் முருகவேளை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அதுவே புத்திரப்பேற்றை அளித்ததால்" புத்திரகாமம்" என்றும் பெயர்பெற்றது.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved