🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அறிவுலகின் ஆயுதம் கவின் பிரசாந்த் - குவியும் வாழ்த்துகள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள மில்மேடு-காளிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் R.கவின் பிரசாந்த். வணிகவியல் துறையில் இளங்கலை பட்டம் (B.Com) பெற்ற விவசாயத் தம்பதிகளான திரு.R. இரவி - திருமதி R.இராஜேஸ்வரி தம்பதிகளின் மூத்த பிள்ளையான R.கவின் பிரசாந்த், நாடுமுழுவதுமுள்ள, புகழ்பெற்ற இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT) யில் சேர்வதற்காக நடத்தப்படும் JEE எனப்படும் நுழைவுத்தேர்வில், அகில இந்திய அளவில் 968-வது ரேங்க் பெற்று, சென்னையிலுள்ள ஐஐடிகல்லூரியில் இளங்கலை எந்திரவியல் (B.E., Mech) துறையில் படிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். 


உலகில் தலைசிறந்த கல்விநிறுவனங்களில் இந்திய அரசினால் நடத்தப்படும் ஐஐடி-யும் ஒன்று. சென்னை கிண்டியில் 620 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து அமைந்துள்ள இக்கல்லூரி, ஜவஹர்கலால் நேரு ஆட்சியில் 1959-இல் அன்றைய மேற்கு ஜெர்மனியின் நிதி உதவியோடும், தொழில்நுட்ப உதவியோடும் தொடங்கப்பட்டது. மேட்டுக்குடி மக்களுக்கான கல்வி நிறுவனம் என்று சொல்லப்படும் இக்கல்லூரியில் சேர்வதற்காக பலலட்சம் பேர் கலந்துகொண்ட நுழைவுத்தேர்வில் சாதாரண விவசாயக்குடும்ப பின்னனியோடு, கிராமப்புறத்தில் பிறந்து, வளர்ந்த கவின் பிரசாந்த் வெற்றிபெற்று, தகுதியும், திறமையுமுள்ள பிள்ளைகளுக்கு எதுவும் தடையில்லை என்பதை நிரூபித்துள்ளார்.


சத்தியமங்கலம் அருகேயுள்ள, அரியப்பம்பாளையம் ரேங்க் இன்டர்நேஷனல் சிபிஎஸ்சி பள்ளியில் மழலையர் வகுப்பிலிருந்தே படித்து வரும் கவின் பிரசாந்த், 8-ஆம் வகுப்பு முதலே பல்வேறு போட்டித்தேர்வுகளில் பங்கேற்று பரிசுகளை வென்று வருகிறார்.

கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீசாய் பவுண்டேசன் சார்பில் நடத்தப்பட்டு வரும் அறிவியல் திறனறிவு தேர்வில் (Science Talent Examination), 2017-ஆம் ஆண்டில் பள்ளியளவில் முதலிடமும், ஒட்டுமொத்த போட்டியில் மூன்றாம் இடமும் பிடித்தார். அதேபோல் 2018-19 ஆம் ஆண்டு மாநில அளவிலான தேர்வில் இரண்டாமிடமும்,  2020-இல் தேசிய அளவில் அங்லாசெம் (AglaSem) என்ற நிறுவனம் நடத்திய திறனறிவு தேர்வில்  மூன்றாம் இடமும் பெற்று வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுதவிர இந்திய விண்வெளி நிறுவனமான (ISRO) நடத்திய இளம் விஞ்ஞானிகளுக்கான தேர்வில் மூன்று லட்சம் போட்டியாளர்களில் 49-வது இடம் பெற்றதின் மூலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தை பார்வையிடவும், அறிவியல் பயிற்சி வகுப்பில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பினையும் பெற்றார். 


பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 500 க்கு 492  மதிப்பெண்களும், மருத்துவத்திற்கான நுழைவுத்தேர்வில் (நீட்) 720 க்கு 582 மதிப்பெண்களும் பெற்று எல்லாத்துறைகளிலும் ஒட்டுமொத்த சாம்பியனாக தன்னை நிரூபித்துள்ளார் கவின்பிரசாந்த். இவரது ஒரே சகோதரி தாரண்யா தற்போது பதினொன்றாம் வகுப்பில் படித்து வருகிறார். கவின் பிரசாந்த்  சாதனையை அறிந்து நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுன்னி ஐஏஎஸ். இளம் மாணவச்செல்வங்களுக்கு தன்னம்பிக்கை வளர்க்கும் விதமாக அமைந்துள்ள கவின் பிரசாந்த் வெற்றிக்கு, கல்வியாளரும், தாளாளருமான கே.என்.ரங்கராஜ், நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் மற்றும் கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாநலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், சத்தியமங்கலம் அம்மா பேரவை செயலாளர் என்.பவுல்ராஜ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved