🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பதக்கவேட்டையாடும் கம்பளத்தார் - ஒலிம்பிக் போட்டிக்கு செல்வாரா?

தடகள பயிற்சிக்கு சென்றவர், ஒருநாள் விளையாட்டாக துப்பாக்கி சுடும் பயிற்சிபெறும் நண்பரிடம் துப்பாக்கியை வாங்கி சுட்ட சம்பவம் அவரின் வாழ்க்கையையே மாற்றி, துப்பாக்கி சுடுவதில் பதக்கங்களை வாரி குவித்து வரும் சுவாரஸ்யமான தகவல். இது குறித்த விவரம் வருமாறு,

தமிழ்நாடு வேளாண்துறையில் வேளாண் அலுவலாராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் திரு.கா.சுப்பையா. இவரது சொந்தவூர் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள ஆத்திகுளம் கிராமம். 

தனது இளமைக் காலங்களில் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தில் இருந்த பல மூத்த தலைவர்களோடு இணைந்து பணியாற்றியிருப்பவர் சுப்பையா.

இவரது மகன் சு. திருநாவுக்கரசு சட்டப் படிப்பு முடித்து, பின் தொழிலாளர் மேலாண்மையில் முதுநிலை பட்டம் பெற்று, உயர்நீதி மன்ற மதுரை கிளை மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் ஜூனியராக பணியாற்றி, தற்போது விருதுநகர் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கறிஞராக உள்ளார்.

சிறுவயது முதலே தடகள போட்டியில் ஆர்வமுள்ள திருநாவுக்கரசு, தான் படித்துவந்த பள்ளியின் சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டு, பல வெற்றிகளின் மூலம் பதக்கங்களைக் குவித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தவர். 

இதனையடுத்து பள்ளி படிப்பு முடிந்தவுடன் பட்டப்படிப்பு படிப்பதற்காக மதுரை கல்லூரி ஒன்றில் சேர்ந்த திருநாவுக்கரசு, அங்கும் தடகள பயிற்சி பெற்று வந்தார். 

ஒருநாள் தற்செயலாக துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுவரும் நண்பர்களிடம் சென்றவர், அவர்களிடம் விளையாட்டாக துப்பாக்கியை வாங்கி சுட்டார். முதல் குண்டே சரியான இடத்தில் அடிக்க, ஏதோ குருட்டுவாக்கில் சாரியாக அடித்ததாக நண்பர்கள் நினைத்துக் கொண்டனர். ஆனால் தான் குறிபார்த்து சுட்டது சரியான இடத்தில் விழுந்ததாக நம்பிய திருநாவுக்கரசு தொடர்ந்து இரண்டு மூன்றுமுறை முயற்சித்தார்.  அனைத்தும் சரியான இடத்தில் விழ நண்பர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். இதனைத் தொடர்ந்து திருநாவுக்கரசை துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட நண்பர்கள் வலியுறுத்தினர்.

இதனை ஏற்றுக்கொண்டு முறைப்படி பயிற்சி ஈடுபட்ட திருநாவுக்கரசு, துப்பாக்கி சுடுதலில் உள்ள நுணுக்கங்களை விரைவாக கற்றுத் தேர்ந்தார்.

இந்நிலையில் கோவையில் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கல்லூரியின் சார்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார் திருநாவுக்கரசு.  இதை சரியாக பயன்படுத்திக்கொண்டவர்,  10 மீட்டர் எர் ரைபிள் பிரிவில் (0.22) பங்கேற்று முதல் வாய்ப்பிலேயே வெண்கலப் பதக்கம் வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 

இதன் தொடர்சியாக, 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற 31 வது மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் ஆண்கள் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று ஊக்கம் பெற்றார்.

தொடர்ந்து அடுத்த ஆண்டும் (2006) 32 வது மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் பொதுப்பிரிவில் இரண்டு வேறு போட்டிகளில் கலந்துகொண்டு,  அன்றைய தமிழக காவல்துறை ஐ.ஜி யை இரண்டாம் இடம் தள்ளி இரண்டு பதக்கங்களை வென்றார் திருநாவுக்கரசு.

இதன்மூலம் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதிக்கமுடியும் என்ற நம்பிக்கையை பெற்ற திருநாவுக்கரசு, பெரும் பொருட்செலவு செய்து பயிற்சி பெற்றார். பல மாநிலங்களில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றியின் விளிம்புவரை சென்று வெற்றி வாய்ப்பினை தவறவிட்டார். இருந்தும் சோர்ந்துவிடாமல் போராடி 2018-இல் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

கல்லூரி படிப்பு முடிந்தும், வழக்கறிஞர் பணிக்கு மத்தியிலும் தொடர்ச்சியாக துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டுவரும் திருநாவுக்கரசு, கடந்த ஜூன் மாதம் மதுரையில் நடைபெற்ற 48-வது மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் தனி நபர் பிரிவில் வெள்ளிப் பதக்கதை கைப்பற்றியதோடு, மூன்று நபர் குழுவினருடன் இணைந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்று சாதனை படைத்தார்.

இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 14-வது தெண் மண்டல (கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா) துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று வெண்கலப்பதக்கம் வென்றதின் மூலம் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார் திருநாவுக்கரசு. 


44-வயதில் சாதிக்க துடித்துக் கொண்டிருக்கும் திருநாவுக்கரசுக்கு, தி.தமிழரசி என்ற இணையரும், தி. உதயவேந்தன், தி.தயாளவேந்தன் என்ற இரண்டு வேந்தர்களின் தந்தையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

துப்பாக்கி சுடுதலில் மட்டுமின்றி சு.திருநாவுக்கரசு B.A., B.L., M.L.M., வழக்கறிஞர் / நோட்டரி பப்ளிக் வழக்கறிஞராக தொழிலாளர்கள் நலன் சம்மந்தமான வழக்குகளில் ஆஜராகி பல சாதகமான தீர்ப்புகளைப்பெற்று அங்கும் வெற்றிக்கொடி நாட்டிவருகிறார் என்பது பாராட்டுக்குறியது.

பிள்ளைகள் சாதிப்பதை பார்க்கும் தந்தையாக இல்லாமல், சாதிக்கத்துடிக்கும் தந்தையாகவுள்ள திருநாவுக்கரசு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved