🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தந்தையை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காத மதில்வீட்டு மகாராணி சிவானி!

கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம், சின்னப்பம்பாளையம் கிராமம் பெருநிலக்கிழாரும், மதில் வீட்டுக்காரர் என்றழைக்கப்பட்ட தம்பு (எ) நடராஜ் - கமல சரஸ்வதி ஆகியோரின் மூத்த மகனும், காலஞ்சென்ற திலகராஜ், கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்தூரைச் சேர்ந்த திரு.தங்கவேல்-திருமதி.விஜயலட்சுமி தம்பதியரின் மகள் திருமதி.கஸ்தூரி ஆகியோரின் இளைய மகள் செல்வி.சிவானி, 22.50 லட்சம் கல்வி உதவித்தொகையோடு பிரான்ஸ் நாட்டு பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்புக்கு தேர்வு செய்யப்பட்டு நேரடி வகுப்பில் இணைந்துள்ளார். இதுகுறித்த விவரம் வருமாறு,

ஆனைமலை வட்டாரத்தில் செல்வச்செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்த செல்வி.சிவானி குழந்தைப் பருவத்திலேயே விபத்தில் தந்தையை இழந்ததால், சித்தூருக்கு குடிபெயர்ந்து தாயார் திருமதி.கஸ்தூரியின் அரவணைப்பில் வளர்ந்தார். மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மூத்த மகள் கோகுல தீபிகா மற்றும் சிவானி ஆகியோரை பொள்ளாச்சி கோபாலபுரத்திலுள்ள எம்.எம்.எஸ். மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படிக்க வைத்தார் திருமதி.கஸ்தூரி. மகள்களுக்கு சிறந்த மேற்கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காக கல்லூரி விடுதியில் அவர்களை சேர்த்துவிட்டு மலேசிய நாட்டிற்கு வேலைக்குச்சென்ற திருமதி.கஸ்தூரி ஐந்தாண்டுகாலம் அங்கு பணியாற்றிவிட்டு நாடு திரும்பினார். 

மூத்த மகள் கோகுல தீபிகா பெங்களூருவிலுள்ள டெக் மகேந்திரா நிறுவனத்தில் தலைமைப்பொறியாளராக பணியாற்றி வரும் நிலையில், இளையமகள் சிவானி கோவை நேரு பொறியியல் கல்லூரியில் ஏரோனாட்டிக்ஸ் பிரிவில் இளங்கலை பட்டம்பெற்று பெங்களூருவிலுள்ள விமான எஞ்சின் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனமொன்றில் பணியமர்ந்தார்.பணியில் இருந்துகொண்டே கேரள அரசுப்பணிக்கு தேர்வெழுதி வந்த சிவானிக்கு பள்ளிப்படிப்பை தமிழகத்தில் பயின்றதால் கேரள அரசுப்பணிக்கு தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ஏரோனாட்டிக்ஸ்துறையில் மேற்படிப்பை தொடர விரும்பிய சிவானி, விமான உற்பத்தியில் புகழ்பெற்ற பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக பிரஞ்ச் மொழி பயின்று சான்றிதழ் பெற்ற சிவானி, நுழைவுத்தேர்விலும் வெற்றி பெற்றார். 

பிரான்ஸ் நாட்டில் புகழ்பெற்ற நான்டெஸ் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட அடென்ஸியா கல்லூரியில் எம்எஸ்சி ஏரோனாட்டிக்ஸ் பிரிவுக்கு தேர்வு செய்யப்பட்டதையடுத்து பிரான்ஸ் சென்றுள்ள சிவானி, அடென்ஸியா கல்லூரியில் நேரடி வகுப்புகளில் பங்கேற்கிறார். நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றதின் மூலம் சிவானிக்கு கல்வி உதவித்தொகையாக இந்திய மதிப்பில் ரூபாய் 22.50 லட்சம் பெறுகிறார். ஏற்கனவே சிவானி பணியாற்றி வந்த பெங்களூரு நிறுவனத்தில் 1.25 லட்சம் சம்பளம் பெற்று வந்த நிலையில், அதை உதறித்தள்ளிவிட்டு உயர்படிப்பிற்காக பிரான்ஸ் பறந்துள்ளார் சிவானி.

இதுகுறித்து தொட்டிய நாயக்கர்.காம் இணையதளத்திடம் பேசிய சிவானியின் தாயார் திருமதி.கஸ்தூரி, சாதாரண குடும்பத்தில் பிறந்து பெரும் நிலக்கிழார் குடும்பத்தில் மணம் முடித்து சில ஆண்டுகளிலேயே கணவரை விபத்தில் பலிகொடுத்துவிட்டு இரண்டு பெண்குழந்தைகளோடு நிற்கதியாய் நின்ற காட்சிகள் தன் கண்களில் நிழலாடுகிறது. பெண் குழந்தைகள் வளர வளர தேவைகளும், பொறுப்புகளும் வளர்ந்தபோது தோள் கொடுக்க வயதான தாய்-தந்தையரைத்தவிர யாருமின்றி தவித்த நாட்களை துணிச்சலோடு எதிர்கொண்டேன். எப்பாடுபட்டாவது குழந்தைகள் விரும்பும் படிப்பை படிக்க வைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு மலேசியா சென்று டெய்லரிங் வேலை செய்தேன். என் உழைப்பும், பெண் குழந்தைகளின் படிப்பும் எங்கள் குடும்பத்தை தலைநிமிரச்செய்துள்ளது. வாழ்க்கையை துணிவோடு எதிர்கொண்டால் எதுவும் சாத்தியமே என்கிறார் திருமதி.கஸ்தூரி. 

மலேசியாவில் இருந்து திரும்பிய திருமதி.கஸ்தூரி கேரள அரசுப்பள்ளி ஒன்றில் பேஷன் டிசைனர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் என்பதும், சுயமுயற்சியாலும், சம்பாத்தியத்தாலும் பத்து ஏக்கர் நிலம் வாங்கி, சிவானிக்கு பிரான்ஸ் செல்ல டெபாசிட் தொகையாக ரூபாய் 40 லட்சம் செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கையை தன்னம்பிக்கையோடு எதிர்கொண்ட திருமதி.கஸ்தூரி அவர்களுக்கும், தாயின் கனவுகளைச் சுமந்து, லட்சியங்களோடு உயரப்பறக்கும் சிவானிக்கும் கம்பளத்தாரின் மனமார்ந்த வாழ்த்துகள்.. 

நன்றி:சிவக்குமார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved