கலைமாமணி விருதுவென்ற கம்பளத்தாருக்கு வாழ்த்து!

இந்திய அளவில் புகழ்பெற்ற கலை, இலக்கியவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து ஆகச்சிறந்த ஆளுமைகளாக உருவாக்கியதில் எட்டயபுரம் சமஸ்தானத்தின் பங்களிப்பு மகத்தானது. திருநெல்வேலி சீமையில் இருந்த மிகப்பெரிய பாளையங்களில் ஒன்றான எட்டயபுரம் சமஸ்தானம் மகாகவி பாரதி, வீரன் அழகுமுத்துக்கோன், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துச்சாமி தீட்சிதர் போன்ற பல வரலாற்று நாயகர்களை உருவாக்கிக் கொடுத்த பெருமை உண்டு.
இராஜகம்பள சமுதாயத்தினருக்கே உரித்தான தேவராட்டக்கலையை அழியாமல் பாதுகாத்ததோடு மட்டுமல்லாமல், இன்றைய நவீன காலத்திற்கேற்ப மாற்றியமைத்து, மெருகூட்டி, அரசு விழாக்கள் தோறும் தவறாமல் இடம்பெறச் செய்ததற்கான முழுப்பெருமையும் எட்டயபுரம் சமஸ்தானத்திற்குட்பட்ட கோடாங்கிபட்டி கிராமத்தைச் சார்ந்த கம்பள சமுதாய மக்களையே சாரும்.
கம்பளத்தார்கள் ஆட்சி செய்த பாளையங்கள்தோரும் தேவராட்டக்கலை ஆடப்பட்டு வந்திருந்தாலும், பாளையக்கார ஆட்சிமுறை மறைந்து, பாளையக்காரர்களின் வம்சாவளியும் சிதைந்துவிட்ட பிறகு தேவராட்டக்கலையை மட்டும் அழிந்துபோகாமல் பாதுகாத்ததில் ஜமீன் கோடாங்கிபட்டியின் பங்கு மகத்தானது.
சக்கதேவி கிராமிய கலைக்குழு என்ற புதிய வடிவம் கொடுத்த ஜமீன் கோடாங்கிபட்டி பள்ளி ஆசிரியரான குமாரராமன் அவர்களுக்கு ஏற்கனவே கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது தமிழக அரசு. அவருக்கு உற்றதுணையாக இருந்த கண்ணன் குமார், சுபசுப்பையா உள்ளிட்டோர் தேவராட்டக்கலையை பாதுகாத்ததோடு, நாடெங்கும் விரிவுபடுத்தி அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சென்றதில் இவர்களின் பங்களிப்பு வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.
இவர்களோடு இணைந்து தனது கலைத்தாகத்தை போக்கிக்கொண்டவர் ரஞ்சிதவேல் பொம்மு. 70-வயது நிரம்பிய, ஜமீன் கோடாங்கிபட்டி கிராமத்தைச் சேர்ந்த எளிய விவசாயியான ரஞ்சிதவேல் பொம்மு உடுக்கை வாசிப்பில் கெட்டிக்காரரர் எனப்பெயரெடுத்தவர், பல அறிஞர்களாலும் பாரட்டப்பெற்றவர். ஆசிரியர் குமாரராமனின் மகன் பிரம்மஞான முத்துபாரதி நடத்திவரும் கலைமாமணி குமாரராமன் கலைக்குழுவின் அங்கமாக நாடெங்கும் பயணித்து தேவராட்டக்கலையை பட்டிதொட்டியெங்கும் பரப்பிவருபவர் ரஞ்சிதவேல் பொம்மு. இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி பெருமை சேர்த்துள்ளது தமிழக அரசு. கடந்த வாரம் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் துணைமுதல்வர், அமைச்சர் பெருமக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கலைமாமணி விருதுபெற்றார் ரஞ்சிதவேல் பொம்மு.
இதன் தொடர்ச்சியாக ஜமீன் கோடாங்கிபட்டி கிராமத்தில் பிறந்த நெல்லை மணிகண்டன், தமிழ்நாடு அரசு கவின், கலைக் கல்லூரியில் பட்டம்பெற்று நாட்டுப்புறக் கலைகளை ஒருங்கிணைத்து தமிழக முதல்வர் பங்கேற்கும் அரசு விழாக்களிலும், சென்னை சங்கமம் உள்ளிட்ட நிகழ்சிகளில் பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் கலைமாமணி விருது வென்ற ரஞ்சிதவேல் பொம்மு அவர்களுக்கும், கலைமாமணி விருதுக்கு ரஞ்சிதவேல் பொம்மு அவர்களைத் தேர்வு செய்த தேர்வுக் குழுவினருக்கும், தமிழக முதல்வருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் செ.இராதாகிருஷ்ணன் வாழ்த்துகளும் , நன்றியும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.