கடினமாக உழைத்தார்கள்- வானுயர உயர்ந்தார்கள்...
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் அருகேயுள்ள N.ஜெகவீரபுரம் கிராமத்தில் ஏழை விவசாயக்கூலி தம்பதிகளான சர்க்கரை நாயக்கர்-அப்பம்மாள் தம்பதியினருக்குப் பிறந்த ஐந்து பிள்ளைகளில் ஒருவராக, 18.05.1986-இல் பிறந்தவர் சுரேஷ்குமார். சுரேஷ்குமாருக்கு பத்துவயது இருக்கும்பொழுது, தந்தையார் சர்க்கரை நாயக்கர் மிகக்கொடிய தீராத நோயாக அன்றைய காலகட்டத்தில் பார்க்கப்பட்ட காசநோயால் (டி.பி) பீடிக்கப்பட்டிருந்தார்.
குழந்தைத் தொழிலாளர்கள் கொடிகட்டிப்பரந்த காலகட்டம் அது, வயசுக்கு வந்ததும், வராததுமா இருக்கிற பொம்பளைப் பிள்ளைங்க, தீப்பெட்டி கம்பெனியில வேலை செஞ்சு கொண்டு வர்ற காசுலதான் குழந்தைகளையும், நோயுற்ற கணவரையும் காப்பாற்ற அப்பம்மாளுக்கு இருந்த ஒரே வரும்பிடி. இரண்டு வருட காலம் நோயோடு போராடிவந்த சர்க்கரை நாயக்கர், சுரேஷ்குமார் ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது காலமாகிவிட்டார். மூன்று தமைக்கைகளோடும், ஒரு இளவளோடும் பிறந்த சுரேஷ்குமாரின் கல்விக்கு அன்றே முடிவுகட்டியாகி விட்டது.
அப்பா இறந்த கையோடு குடும்பத்தைக் காக்கும் பொறுப்பு ஆண்பிள்ளை சுரோஷ்குமாரின் தோள்களுக்கு மாற்றப்பட்டது. தந்தை புதைக்கப்பட்ட குழிமேட்டில் புல்முளைக்கும் முன்பே, மைத்துனர் இறப்பிற்கு வந்த தாய்மாமனோடு கோயமுத்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டான் 12 வயது பாலகன் சுரேஷ்குமார். கோவை, கவுண்டம் பாளையத்திலுள்ள தாய்மாமன் மளிகைக்கடையில் கண்ணீரும், கம்பலையுமாக புதிய வாழ்க்கையைத் தொடங்கிய பாலகனுக்கு இரவில் அழுகையும், பகலில் வேலையுமாக கழிந்தது. மாமன் வீட்டில் வயிறு நிறைய சாப்பிடும் போதெல்லாம் வீட்டு ஞாபகம், அக்காமாருக பாதுகாப்பா இருக்காகளா? வேலை எல்லா நாளும் கிடைக்குதா? தம்பி சாப்பிட்டுருப்பானா என்று நினைத்து நினைத்து கண்கலங்கிய காலங்களை இப்போது நினைத்தாலும் அழுகை வருகிறது என்று அந்தக்கால நினைவுகளைச் சொல்லி அசைபோடும் சுரேஷ்குமார், மாமா நமக்கு சோறு போடுறாரு, வயசுக்கு வந்த பொம்பளைப் புள்ளைக மூனு பேரு, தம்பி அஞ்சாம் வகுப்பு படிக்கிற சின்னப்பையன், நாலு ஜீவன்களை வெச்சிட்டு அம்மா கஷ்டப்படுவாளே.... மாமா காசு கொடுத்த பரவாயில்லை, சோறுதான போடுறாரு. தாய் மாமன்கிட்ட கேட்கவா முடியும்?
விளாத்திக்குளம் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நாயுடு, ரெட்டிமார்கள் மெட்ராசுக்குப்போய் கடைகள்ல வேலை செஞ்சு, இன்னைக்கு சொந்தமா மளிகைக் கடைக போட்டு நல்ல வசதி வாய்ப்பா இருக்காங்க. அவுங்க கடைகள்ல வேலை செய்யறதுக்கு கமுதி, விளாத்திக்குளம் பசங்களத்தான் கூட்டிகிட்டுப் போய் வேலைக்கு வெச்சிருக்காங்க. தங்கிக்க ஃப்ரியா ரூம், சாப்பாடு போட்டு ஐநூறு ரூபாய் சம்பளம் கொடுக்கிறாங்க. இப்படி இங்கிருந்து பசங்கள கடைகளுக்கு அனுப்ப புரோக்கர்கள் நிறையாப்பேரு விளாத்திக்குளத்தில இருக்காங்கன்னு, ஊருக்கு வந்திருந்த சுரேஷ்குமாருக்கு கிடைத்த தகவல்.
மாமா கடைல ஒருவருசம் வேலை செஞ்சாச்சு, எதுக்கும் புரோக்கர்ட்ட பேசிப்பார்ப்போம் என்று முடிவெடுக்கும் துணிச்சலை கோவை நகரில் ஒருவருடம் பணியாற்றிய அனுபவம் சுரேஷ்குமாருக்கு கைகொடுக்கிறது. மெட்ராஸ் பாடியில் இருக்குற ரெட்டியார் கடைக்கு ஆள்தேவைப்படுது... ரூம், சோறு-தண்ணியெல்லாம் ஃப்ரியா போட்ருவாரு.. ஐநூறு சம்பளம் கொடுப்பாரு.., கோயமுத்தூர்ல மளிகைக்கடையில வேலை செஞ்ச அனுபவம் இருக்கின்னு சொல்ற... ரெட்டியார்கிட்ட பேசி நூறு ரூவா சேத்தி அறநூறு ரூவா கொடுக்கச் சொல்றோம்ல.., நம்ம ஊர்க்காரர் தான், நல்ல மனுஷன், நல்லா பார்த்துக்குவாங்க, வீட்ல கேட்டு வந்து சொல்லு...இது புரோக்கர்.
வீட்ல எல்லாம் சொல்லி சரி பண்ணிக்கிறண்ணே.... எப்போ வரலாம்னு கேட்டுச் சொல்லுக, நான் ரெடியா வர்றண்ணே... இது சுரேஷ்குமார். மாமன்கிட்ட சொன்ன சத்தம்போடுவாரு... மெட்ராஸ் போயிட்டு சொல்லிக்கலாம் என்ற மனக்கணக்கோடு, இரண்டாவது அத்தியாயத்தை தொடங்க 2000-இல் மெட்ராஸுக்கு கிளம்புகிறான் 14 வயதை நெருங்கும் விடலை. முதல்முறை மெட்ராஸ் பயணிக்கும்போது கோடம்பாக்கம், சினிமாக்காரங்க, ஜெயலலிதா வீடு, ரஜினிகாந்த் வீடு என்று கிராமங்களில் பேசிப்பேசி மெட்ராஸ் குறித்து மரபணுவில் கட்டமைக்கப்பட்ட பிம்பம் சுரேஷ்குமாரின் கனவிலும் வந்து வந்து சென்றாலும், முதல்மாசம் அறநூறு ரூவா சம்பளத்தை வாங்கி எண்ணிடோனும்ங்கிற என்ற ஆவலே அன்றிரவு முழுவதும் பேருந்து பயணத்தில் மேலோங்கி இருந்தது.
அதிகாலை மெட்ராஸ் கோயம்பேடு பேருந்துநிலையம் வந்திறங்கிய சுரேஷ்குமாருக்கு முதல் டீ, உளுந்து வடையை புரோக்கர் தன் செலவில் வாங்கிக்கொடுத்து, ஒருசில கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பாடியிலுள்ள ரெட்டியார் கடைக்கு அழைத்துச் செல்கிறார். பையன் வெடிப்பா இருக்கான்.. நாயக்கமாரு வீட்டுப்பையன்... அப்பா இல்லை... எந்த கெட்ட பழக்க வழக்கமும் இல்லைண்ணே... ஒழுங்கா இருப்பான்... நல்லா பார்த்துக்கங்கண்ணே என்று புரோக்கரின் அறிமுகத்தையடுத்து, கடைக்கு பக்கத்துலதாம்லே தங்கறக்கு ரூம் இருக்கு... அங்கபோய் பேக்கையெல்லாம் வெச்சுட்டு, குளிச்சுட்டு வா... டிபன் சாப்ட்டு கடையில் வேலைய ஆரம்பிக்கலாம்னு சொல்லி அனுப்புகிறார் ரெட்டியார்.
ரெட்டியார் காட்டிய அன்பிலும், ஆதரவிலும் நாட்கள் ஓடியதே சுரேஷ்குமாருக்கு தெரியவில்லை. வியாபாரம் நல்லா நடக்கு, எல்லாம் சுபமா போயிட்டிருக்கு, அழகுப்பாண்டி வேற பள்ளிக்கூடம் போகமாட்டீங்கறான்.. அவனையும் மெட்ராஸுக்கு கூட்டிகிட்டு வந்து கடையில போட்டாலும் தொழில் பழகிக்குவான், எதுக்கும் ரெட்டியார்கிட்ட ஒரு வார்த்தை கேட்கலாம்னு சுரேஷ்குமாருக்கு யோசனை வந்தபொழுது, மூன்று வருடம் எந்தவித குறையுமின்றி முதலாளியின் நம்பிக்கையைப் பெற்றிருந்தவன் கேட்கும்பொழுது ரெட்டியார் வேண்டாமென்றா சொல்லப்போகிறார்?.
தம்பியையும் கண்பார்வையிலேயே கொண்டு வந்தாச்சு...ஒருவருசமா அவனும் ஒழுங்கா இருக்கான், எப்படியோ பொழச்சுக்குவான்,. ரெட்டியார் நல்லவிதமாத்தான் வெச்சுக்றாரு, இருந்தாலும், அக்காமார்களுக்கெல்லாம் கல்லாணம் பண்ணனும் ... நமக்கு நிறைய செலவிருக்கல்ல... சம்பளம் கொஞ்சம் சேத்திக்கெடச்சா பரவாயில்லை... சம்பளம் சேத்திக்கேட்டு ரெட்டியாரை சங்கடப்படுத்த வேண்டாம்... அட்வான்ஸ் கேட்டாலும், தம்பிக்கும் சேத்தி ஒரு அட்வான்ஸ் தான் கெடைக்கும்... அது காணாது... வேற எங்காவது சம்பளம் கொஞ்சம் சேத்தி கிடைச்சா போகலாம்னு ஒருயோசனை இருக்குன்னு நண்பர்களிடம் சொல்லி வைக்கிறார் சுரேஷ்குமார் .
கன்னிகைப்பேர்ல இருக்கிற நாடார் கடைக்கு ஆள்வேணுங்கிற தகவல் ஒருசில மாதங்களில் வருகிறது. சொல்றாங்க ... மெட்ராஸ்ல இருந்து 30 கிலோமீட்டர் தூரம்... அவுட்டர்தான்... நண்பர் மூலமே சம்பளத்தை உறுதி செய்கிறார். ரெட்டியார்கிட்ட எப்படி சொல்றது?.. என்ற தயக்கம். ஒருவழியாக, அண்ணே... அக்காள்களுக்கெல்லாம் கல்லாணம் பண்ணனும்னு அம்மா சொல்றாபள.... பொண்ணு கேட்டு மாப்ள வீடெல்லாம் வருதாம்... அதனால... .. என்னலே, அதனாலன்னு இழுக்கிற என்று வார்த்தையை முடிக்கும் முன்பே குறுக்கிட்ட ரெட்டியார், அட்வான்ஸ் வெணும்னா போட்டுக்குலாம்லே,போயி வேலையைப் பாரு என்கிறார்.
சரி ஒடச்சு பேசிட வேண்டியது தான். இல்லண்ணே...அழகுபாண்டி இங்கிட்டே இருக்கட்டும், நான் கொஞ்ச நாளைக்கு வேற இடத்துல வேலைக்கு போலாம்னு இருக்கண்ணே என்ற சுரேஷ்குமாரிட் நான்காண்டுகாலம் ரெட்டியாரின் வலதுகரமாகவே ஆகிப்போன சுரேஷ்குமாருக்கு விருப்பமின்றியே விடைகொடுத்தார் ரெட்டியார்.
ரெட்டியாரோ, நாடாரோ சாதி எதுவாக இருந்தாலும், சுரேஷ்குமாரின் வேலையில் எந்தவித பாகுபாடும் இல்லை. கடின உழைப்பு, மளிகைக்கடைக்கு தேவையான நம்பிக்கையை வந்த சில நாட்களிலிலேயே க நாடாருக்கு நிரூபித்த சுரேஷ்குமாரிடம், கடையின் முழுபொறுப்பையும் ஒப்படைத்தார். இதன் மூலம் பாரீஸ் கார்னரிலுள்ள மொத்த விற்பனை கடைகளுக்கு சென்று தேவையான பொருட்களை வாங்குவது, கணக்கு வழக்குகளை முறையாக ஒப்படைப்பது என்று தொழிலுக்கு உண்டான அடிப்படைத் தகுதிகளை கற்றுக்கொண்டார். இதெல்லாம் திட்டமிட்டு செய்யப்பட்டதல்ல என்றாலும், இதனெதிரொலியாக மார்க்கெட்டில் சுரேஷ்குமார் குறித்தான நல்லெண்ணம் உருவாக பேருதவியாக இருந்தது. வேறுகடைக்கு மாறியிருந்தாலும் பாடியிலுள்ள ரெட்டியார் உடனான உறவையும் நல்ல முறையிலேயே பேணிக்காத்து வந்தார்.
சம்பாதிக்கனும் என்பது தவிர எதுவும் திட்டமிட்டு செய்யவில்லை என்றாலும், உரிய காலம் வந்ததும் உண்மையும், உழைப்பும் வேர்விட்டு துளிர்க்கத் தொடங்கியது. நாடாரிடம் வேலைக்கு சேர்ந்து நான்காண்டுகளுக்கும் மேல் ஆகியிருந்த நிலையில், சொந்தமாக கடை வைக்கச்சொல்லி நண்பர்களின் வற்புறுத்தல். பாரீஸ் மார்க்கெட்டிலும் இதற்கான ஆதரவு இருந்தது. தனியாக தொழில் தொடங்குவது குறித்து சில மாதங்களாக யோசித்து வந்த சுரேஷ்குமார், ரெட்டியாரிடமும் ஒரு வார்த்தை கேட்டு முடிவெடுக்க தீர்மானித்தார். ரெட்டியாரிடம் தன் யோசனையை சொன்னபொழுது, அண்ணன்-தம்பி இருவரையும் பத்தாண்டுகளாக பார்த்து வருபவர், நானே முதல் போடறேன்ல... நீங்க ரெண்டு பேரும் கடைய பாத்துக்குங்க என்று ரெட்டியார் சொல்லவும், தயக்கமே இல்லாமல் சரிண்ணே... அப்படியே செய்யலாம் என்கிறார் சுரேஷ்.
ரெட்டியாரின் பார்ட்னர்ஷிப்போடு 2010-இல் கோயம்பேடு பிரதான மார்க்கெட் வளாகத்தில் பலசரக்கு கடை துவங்கப்பட்டது. பத்தாண்டு உழைப்பிற்குப்பின் முதலாளி என்ற அந்தஸ்த்திற்கு உயர்ந்த சுரேஷ்குமார், ஒருபோதும் தன்னை முதலாளியாக நினைத்துக்கொண்டதே இல்லை. அண்ணன்-தம்பி இருவரும் தொழிலாளியாகவே வாழ்க்கையைத் தொடர்ந்தனர். கடையின் கணக்கு வழக்குகளையெல்லாம் பாடியில் இருந்த ரெட்டியார் பார்த்துக்கொள்வார். 2015-வரை தொடர்ந்த இந்த கூட்டணியை ரெட்டியார் முடித்துக்கொள்ள விரும்பிய பொழுது, சந்தையில் தனக்கிருந்த நற்பெயரின் துணையோடு, பாரீஸ் வியாபார நண்பர்களின் ஒத்துழைப்போடும் 2016-இல் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" என்ற பெயரில் தனியாக பலசரக்கு கடையை தொடங்கினர் சுரேஷ்குமார் சகோதரர்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை மெல்லமெல்ல விரிவுபடுத்திய அதேவேளையில், விளாத்திக்குளம் பகுதியில் இருந்த சமுதாய இளைஞர்களை சென்னைக்கு அழைத்து வந்தனர். ரெட்டியார் பாணியிலேயே தங்குவதற்கு இடமும், உணவும் வழங்கினர். தினமும் அவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு அதிகாலை செல்லும் சுரேஷ்குமார், ஏலே... வேலை மட்டும் செஞ்சா போதும்னு இருக்காதிக... கடையில கஸ்டமர்கிட்ட எப்படி பேசனும்..., பொருள் நம்மகிட்ட இல்லைண்ணா, இல்லைன்னு சொல்லி அனுப்பக்கூடாது... வெயிட் பண்ணுங்க.. பையன் பக்கத்தில போயிருக்கான்.. குடோன்ல இருந்து எடுத்துட்டு வர்றேன்னு... பக்கத்தில வாங்கி கொடுக்கனும். கோயம்பேடு சந்தை பெரிய சந்தை... ரௌடிப்பசங்க அதிகம், அவுககிட்ட சவகாசம் வெச்சுக்கக்கூடாது.. நான் இல்லாத நேரத்தில யாராவது மாமூல் கேட்டா எப்படி சமாளிக்கனும் போன்ற தொழில் பயிற்சியையும் சேர்த்தே வழங்கினர்.
வண்டியில் பூட்டப்பட்ட காளைகளாக , அண்ணன் தம்பிகள் இருவரும் 2016-இல் தொடங்கிய அதே வேகத்தில் ஓய்வில்லாமல் ஓடியதின் விளைவாக, ஒவ்வொரு ஆண்டும் முடியும் முன்பும் புதிய பாண்டியன் ஸ்டோர்ஸ் களை திறந்துகொண்டே வந்தனர். அரசியல் செல்வாக்கு, சாதிய பின்புலம், ரௌடியிசம் கொடிகட்டிப்பறக்கும் ஆசியாவின் மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு பெரியார் மார்க்கெட்டிலுள்ள காய்கறி வளாகத்தில், தம்பி அழகுப்பாண்டிக்கு தனியாக ஒரு கடை, தனக்கொரு கடை, கோயம்பேடு தானிய மார்க்கெட்டில் தம்பி அழகுப்பாண்டிக்கு ஒரு கடை, தனக்கொரு கடை என தனித்தனியாக தொடங்கினாலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் என்பது இருவரின் டிரேட் மார்க் ஆகிப்போனதால் பொதுப்பெயரிலேயே கூட்டாக நடத்தி வருகின்றனர் சுரேஷ்குமார் சகோதரர்கள்.
பெரிய அளவில் கல்வி அறிவு, பொருளாதார பின்புலம், பாரம்பரியம் ஏதுமில்லாத நிலையிலும் ஆசியாவின் மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டில் தனிக்கொடி நாட்டியுள்ள சுரேஷ்குமாரின் உழைப்பு, சாதிக்கத்துடிக்கும் இளைஞர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்றால் மிகையல்ல. அதேவேளையில், விடலைப்பருவத்தில் குடும்பத்திற்காக உழைக்கத் தொடங்கிய சுரேஷ்குமார், அடிப்படை ஒழுக்கத்தை சிறிதும் சிதற விடாமல், சமுதாய இளைஞர்களை அழைத்து வந்ததோடு மட்டுமல்லாமல், தொழில்நுணுக்கங்களையும் சொல்லிக்கொடுத்து, இதுவரை ஆறுக்கும் மேற்பட்டவர்களுக்கு சென்னை சுற்றுவட்டாரங்களில் கடைகளை அமைத்துக் கொடுத்துள்ளார்.
தான் மட்டும் வளராமல் சமுதாயத்தையும் சேர்ந்து வளர்க்கும் எண்ணம் கல்வியாளர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் வராதா சிந்தனை, சாமானியனான சுரேஷ்குமாரிடம் இருந்ததே பாண்டியன் ஸ்டோர்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் ஆணிவேர். நல்லொழுக்கத்தாலும், நற்சிந்தனையாளும் நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக பாண்டியன் ஸ்டோர்ஸை வளர்த்தெடுத்து வரும் சுரேஷ்குமார், சமீபத்தில் பாண்டியன் ஸ்டோரின் ஐந்தாவது கிளையை சென்னை, குன்றத்தூரில் தொடங்கியுள்ளார்.
திருமணமாகி மனைவி காளீஸ்வரி, மகன்கள் ஹரீஷ் பாண்டி, ஹர்த்திக் பாண்டி ஆகியோரோடு சென்னை நெற்குன்றத்தில் வசித்து வரும் சுரேஷ்குமார், சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் வர்த்தகப்பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். தான் மட்டும் சமூகத்தை வளர்த்தால் போதுமானதல்ல, சங்கம் மூலமும் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கமுள்ளவர், சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பர்பிள் கிளப் (ரூ.இரண்டு லட்சம்) நன்கொடையாளர் என்பதும், உயர்ந்த எண்ணமும், லட்சிய வேட்கையும் உள்ள சுரேஷ்குமார் போன்றவர்களை உறுப்பினர்களை பெற்றிருப்பதே வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் வெற்றிக்கு காரணம் என்றால் மிகையல்ல.