🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உழைத்தால் கூலியும் கோபுரத்தில் அமரலாம்!

திரு.C.தங்கவேல் அவர்கள், 1984-ஆம் வருடம், நாமக்கல் மாவட்டத்திலுள்ள மல்லுமாச்சம்பட்டி கிராமத்தில் திரு.சின்னம நாயக்கர் – திருமதி. நாகம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். நடுநிலைப்பள்ளி வரை கல்வி பயின்றுள்ளவருக்கு, திருமணமாகி திருமதி.சுசீலா என்ற மனைவியும், T.கவின், T.கோபி என்ற இருமகன்களும் உள்ளனர்.

குடும்ப வறுமை காரணமாக, தனது 13-ஆவது வயதில் நாமக்கல்லில் உள்ள கட்டுமானப்பொருட்கள் விற்பனையகத்தில் கூலித்தொழிலாளியாக பணிக்கு சேர்ந்தார். இங்கு டீ வாங்கி வருவதில் தொடங்கி விற்பனையாளர் பணியில் தொடங்கி, சிமெண்ட், கம்பிகள் ஏற்றி, இறக்குவது போன்ற சுமைதூக்கும் வேலையானாலும், செங்கல், ஜல்லி, மணல் போன்ற கட்டுமானப் பொருட்களை டெலிவரி செய்யும் டெலிவரிபாய் உள்ளிட்ட அனைத்து வேலைகளிலும் எவ்வித சுணக்கமுமில்லாமல், செய்கின்ற வேலையில் முழுஈடுபாட்டுடன் செய்தார். 

இன்றைய எதார்த்த நிலையை உணராமல், பெரு விவசாயிலிருந்து தினக்கூலிகள் வரை, குழந்தைகளுக்கு உழைக்க கற்றுக்கொடுக்கும் சமூகமல்ல கம்பளத்தார் சமூகம். இன்னும் சொல்லப்போனால், குழந்தைகள் உழைக்க தயாராக இருந்தாலும் கூட, கெடுக்கும் தாய்மார்கள் நிறைந்த சமூகம். ஆனால் அதற்கு நேர்மாறாக, சிறு வயது முதலே பொறுப்புணர்ந்து, செய்கின்ற வேலையில் முழு ஈடுபாட்டுடன், பொய் வார்த்தைகளுக்கும், போலி கௌரவத்திற்கும் இடம் கொடுக்காமல் உழைத்தவர் திரு.தங்கவேலு. சுமார் பத்தாண்டுகாலம் ஒரே கடையில் முதலாளிக்கு விசுவாசமாகவும், நேர்மையாகவும் நடந்துகொண்டு, தொழில் நுணுக்கங்களை கற்றுக்கொண்டார்.

2010-ஆம் ஆண்டு நாமக்கலில் அன்னை ஹார்டுவேர்ஸ் என்ற வன்பொருள் நிறுவனத்தை தனியாக தொடங்கி, அனைத்துவிதமான கட்டுமானப்பொருட்களையும் விற்பனை செய்து வருகிறார். கடந்த பத்தாண்டுகளாக படிப்படியாக உயர்ந்து, இன்று நாமக்கல்லில் குறிப்பிட்டு பெயர் சொல்லும் வகையில் தன் நிறுவனத்தை உயர்த்தியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் 150-க்கும் அதிகமான கிராமங்களில் கம்பளத்தார் சமுதாய மக்கள் லட்சத்திற்கு அதிகமானோர் வசித்து வந்தாலும், ஹார்டுவேர் துறையில் கால்பத்து சாதித்த ஒரே கம்பளத்தார் திரு.தங்கவேல் மட்டுமே. இதன் மூலம் கம்பளத்தார்கள் தொழில்துறையில் எந்த அளவிற்கு பின்தங்கியுள்ளோம் என்று கூட சொல்லமுடியாது, தொழில்துறை என்று ஒன்று உள்ளது கூட இச்சமுதாயத்திற்கு தெரியுமா? என்று நமக்கு நாமே சுயபரிசோதனையை செய்துகொள்ள வேண்டிய தருணம்.

உண்மைகள், எதார்த்தநிலையும் கேட்பதற்கு கசப்பாகத் தான் இருக்கும், ஆனால் ஏதோ மேம்போக்காக சொல்லப்படவில்லை. பிற சமூகங்களோடு ஓப்பீடு செய்து முன்னேறும் வழிகளை ஆராய்வது அவசியம். ஒப்பீட்டளவில் கம்பளத்தார் சமுதாய மக்கள் தொகையுள்ள ஜெயின் சமூகத்தினர், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜெயின் சமூகத்தின் பங்களிப்பு 30%, நேரடி வரி செலுத்துவதில் இவர்களின் பங்கு 35%-க்கும் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது. அங்கிருந்து கம்பளத்தார் சமுதாயத்தை பார்க்கையில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், தொழில்துறைகளில் நாம் சாதிக்க வேண்டியது மலையளவு என்பது புரியும்.

கம்பளத்தார் சமுதாயத்தில் நாமக்கல் மாவட்டம் கல்வி, அரசியல், அரசுத்துறை என பல்வேறுதுறைகளில் பிற பகுதிகளுக்கு முன் உதாரணமாக உள்ளது. அந்தவகையில் தொழில்துறையிலும் எந்த பின்புலமும் இல்லாமல், சாதாரண கூலித்தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி, குறிப்பிடத்தக்க வகையில் சாதித்துள்ள திரு.தங்கவேல் அவர்களின் வாழ்க்கை, கடின உழைப்புக்கு ஈடு இணையேதுமில்லை என்ற பொன்மொழிக்கு அர்த்தம் கொடுத்துள்ளது. கம்பளத்தார் சமுதாய பெற்றோர்களானாலும், பெரியோர்களானாலும், குழந்தைப் பருவத்திலிருந்தே கடின உழைப்பின் அவசியத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். உழைக்கும் உணர்வை ஊட்டிவிட்டால் அவர்கள் உயர்வதற்கு கல்வியோ,பொருளாதாரமோ ஒருபோதும் தடையாக இருக்கப்போவதில்லை என்பதற்கு திரு.தங்கவேல் போன்ற பலர் எடுத்துக்காட்டாக இருப்பதை பார்த்து வருகிறோம்.

தன் முழுமையான அயராத உழைப்பால் உயர்ந்த திரு.தங்கவேல் அவர்கள், மேன்மேலும் வளர்ந்து கம்பளத்தார் சமுதாயத்திற்கு மேலும் பல தொழிலதிபர்களை உருவாக்கிட வேண்டுமாய் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved