வெற்றி ஒன்றே இலக்கு ! - உழைத்தார்கள்-உயர்ந்தார்கள்!
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகேயுள்ள இராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி இராமசாமி, மனைவி முத்தம்மாள். இத்தம்பதிகளின் இரு மகன்களில் மூத்தவர் அன்பரசன். 1977-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் ஒன்றாம் நாள் பிறந்த அன்பரசு, உயர்நிலைப்பள்ளி வரை இராசிபுரம் அருகேயுள்ள வடுகம் ஊராட்சியில் அமைந்துள்ள அரசுப்பள்ளியில் பயின்றார்.
அன்பரசனின் தந்தையார் இராமசாமி திடீரென மாரடைப்பால் காலமாகியது, அதுவரை எந்தவிதக்குறையுமின்றி பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த அன்பரசனின் குடும்பத்தை நிலைகுலையச் செய்தது. போக்குவரத்து வசதியில்லாத 70-களில், சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து அறுபது கிலோமீட்டர் தூரத்திலுள்ள இராசிபுரம் வந்து மகள் முத்தம்மாளையும், இரு பிள்ளைகளையும் அடிக்கடி வந்து கவனித்துக் கொள்ளமுடியாது என்பதால், மகளையும், இரு பெயரன்களையும் அந்தியூருக்கே அழைத்துக்கொண்டு சென்று விட்டார் அன்பரசனின் தாத்தா.
பத்தாம் வகுப்பு முடித்த கையோடு அந்தியூர் சென்ற அன்பரசன், தாய் மாமன் ஆதரவோடு கோவையிலுள்ள இராமகிருஷ்ணா தொழில் பயிற்சி நிறுவனத்தில் ஐ.டி.ஐ. படித்தார். படித்து முடித்த கையோடு கோவையில் புகழ்பெற்ற பிரிக்கால் நிறுவனத்தில் ப்ராடக்ட் டெவெலப்மென்ட் இஞ்சினியரிங் பிரிவில் பணியமர்த்தப்பட்டார். உயர் கல்வி படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் குடும்ப சூழல் காரணமாக உடனடியாக வேலைக்கு செல்ல ஒப்புக்கொண்ட அன்பரசுக்கு எப்படியாவது பொறியியல் பட்டம் பெற வேண்டும் என்ற வேட்கை மட்டும் தணியாமல் இருந்து வந்தது.
பெரிய நிறுவனத்தில் வேலை, கை நிறைய சம்பளம், குடும்பத்தில் அம்மா, தம்பி, ஆதரவளித்து வளர்த்த மாமா என எல்லோருக்கும் மகிழ்ச்சி என்றாலும், ஐந்தாண்டு கடந்தும் இன்னும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் குறையாத அன்பரசுவிற்கு, வட இந்திய குடும்ப நண்பர் ஒருவரின் அறிமுகத்தால் இராஜஸ்தான் மாநிலத்தில் பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் வாய்ப்பு கிடைத்தவுடன், பிரிக்கால் வேலையை உதறித்தள்ளிவிட்டு இராஜஸ்தான் பறந்தார். அங்கு பிடெக் படிப்பை நிறைவு செய்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பிய அன்பரசுவிற்கு பிரிக்கால் நிறுவனத்தின் கதவுகள் திறந்தே இருந்தன. ஒருசில ஆண்டுகள் அங்கு பணியாற்றியவர் “சுஸ்லான்” என்ற காற்றாலை மின் உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனத்தில் பணியமர்ந்தர்.
1995 முதல் 2010 வரை கார்ப்ரேட் நிறுவனங்களில் பணியாற்றி வந்த அன்பரசனுக்கு சுயதொழில் தொடங்க வேண்டும் என்பது விருப்பம். அடிமட்டத்திலிருந்து வாழ்க்கையை தொடங்கியவர், ஐ.டி,ஐ முடித்து ஸ்பேனர் பிடித்த கையோடு வளர்ந்தவர், விரும்பிய பொறியியல் படிப்பையும் படித்து முடித்து நிறைவோடு பணியாற்றி வந்தவருக்கு சுயதொழில் தொடங்க எல்லாத் தகுதியும், அனுபவமும் இருந்தது.
2010-ஆம் ஆண்டு கோவையை தலைமையிடமாகக்கொண்டு அன்ராஜ் ப்ராடக்ட்ஸ் (Anraj Products) என்ற பெயரில் நிறுவனம் தொடங்கிய அன்பரசன், கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான இயந்திரங்கள், அழியக்கூடிய பேப்பர் தயாரிப்புகள், விவசாய தொழிலுக்கான கருவிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றார்.
இத்தோடு, மேலும் கிடைத்த சில வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு 2014-முதல் வேறு நிறுவனத்துடன் இணைந்து நகராட்சி, மாநகராட்சி, வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தண்ணீர் சுத்திகரிப்பு, கழிவு நீர் மேலாண்மை, சாயப்பட்டறை கழிவு நீர் சுத்திகரிப்பு போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றார். இந்நிறுவனத்தின் சார்பில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா,ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் 400-க்கும் மேற்பட்ட திட்டங்கள் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆறாண்டுகள் கூட்டாக பணியாற்றிய அனுபவ பின்புலத்தோடு, கடந்த ஆண்டு (2021) முதல் செஞ்சுரி டெக்னாலஜிஸ் என்ற பெயரில் தனியாக நிறுவனத்தைத் தொடங்கியுள்ள அன்பரசன், 2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு நூறு கோடி அளவில் வர்த்தக பரிவர்த்தனை செய்யும் நிறுவனமாக உயர்த்துவதை இலக்காக நிர்ணயித்து பணியாற்றி வருகிறார்.
திரு.அன்பரசன் அவர்கள் விரும்பும் இலக்கை விரைவில் விஞ்சி மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்.