🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உழைத்தார்கள்- உயர்ந்தார்கள்! சாதிக்க ஏது தடை?

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள வேமாண்டாம்பாளையம் - கரட்டுப்பாளையம் கிராமத்தில் விவசாயப் பெற்றோர்களான திரு.இராமசாமி - திருமதி.சரோஜினி ஆகியோருக்குப் பிறந்த மூன்று குழந்தைகளில் மூத்த மகனாக 14.11.1971-ல் பிறந்தவர் திருமூர்த்தி. ஆரம்பக்கல்வியை முடித்து நடுநிலைக் கல்வியை எட்டியபொழுது கல்விக்கு விடைகொடுத்தார்.

பூர்வீக சொத்துக்களை பிரித்துக்கொள்வதில் உறவினர்களோடு ஏற்பட்ட மனக்கசப்பு, தானோ, குடும்பத்தினரோ இனி இந்த மண்ணில் இருப்பது சுயமரியாதைக்கு இழுக்கென்று, ஏதாவது கூலிவேலை செய்தாவது பிழைத்துக்கொள்ளலாம் என்று சொந்த ஊரிலிருந்து வெளியேறுகிறார் இராமசாமி. மனைவி, பிள்ளைகளோடு கோவைக்கு வந்தவர், பட்டேல் சாலை அருகேயுள்ள வாடகை குடிசை ஒன்றில் குடியேறுகிறார். தங்கள் வாழ்நாளில் அருகிலுள்ள டவுனுக்கே சென்றிருக்காதவர்கள் கிராமங்களில் நிறைந்திருந்த காலத்தில், முன்பின் அறிமுகமில்லாத இல்லாத ஊரில், விவசாயம் தவிர எந்தவேலையும் தெரியாத ஏழை விவசாயி இராமசாமிக்கு கட்டிட வேலை தவிர வேறு கதியில்லை.


இன்றுபோல் தொழிற்சாலைகள் பெரிய அளவில் ஏதுமில்லாத 80-களில், விவசாயம் சாராத ஏழை எளிய மக்களின் பசி தீர்ப்பதில் கட்டிட வேலை மட்டுமே பிரதானமானது. இன்று கட்டிட வேலைகள் பரவலாக எல்லா இடங்களிலும் நடைபெறுவதுபோல் 80-களில் இல்லை. அதனால் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த  பெரும்பாலான கூலித் தொழிலாளர்கள் கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூர், பெங்களூர் போன்ற இடங்களுக்கு கட்டிட வேலைக்கு செல்வது வழக்கம். வாகனப் போக்குவரத்து வசதி இல்லாத காலம், குடியிருக்கும் இடத்திலிருந்து வேலைக்காக வெகுதூரம் செல்லமுடியாது. ஆதலால் வீட்டிற்கு அருகிலேயே வேலை தேட வேண்டுமென்பதால் தினந்தோறும் வேலை கிடைப்பது குதிரைக்கொம்பு. மாதத்தில் பாதிநாட்கள் கிடைக்கும் வேலையின் வருமானத்தை வைத்து மூன்று குழந்தைகளை பராமரிப்பதும், வீட்டு வாடகை கொடுப்பதும் இராமசாமிக்கு சிரமமாக இருந்தது. 


குடும்பத்தின் நிலையறிந்த 13 வயது நிரம்பியிருந்த மூத்த மகன் திருமூர்த்தி, தந்தையின் சுமையை தானும் சேர்ந்து சுமக்க தயாராகிறான்.  தலைமகனை பிரிவதற்கு எந்தத்தாய் தான் சம்மதிப்பாள்? இல்லை தாயை விட்டுப்பிரிவதற்கு எந்தக்குழந்தைதான் சம்மதிக்கும். உதாசிணம் செய்த உறவினர்கள் முன் வாழ்ந்தாக வேண்டிய வைராக்கியம் தாயின் கண்முன் நிழலாடுகிறது. நல்லவேளை குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம் இரண்டாண்டு கழித்துத்தான் அறிமுகமாகியது. இல்லையேல் இன்னமும் சிரம்மப்பட்டு போயிருக்கும் சிறுவனின் குடும்பம்.  பதின் வயதை எட்டிடாத பாலகனாய்  தினக்கூலி வேலைக்கு திருப்பூர் செல்வது அடிமைச்சமூகங்களின் அந்திமக் காலம். தாய் படும் பாடும் சேய் படும் பாடும் ஒருபுறமிருக்கட்டும், பிறந்ததிலிருந்து அண்னன் முகம்பார்த்து, கைகோர்த்து விளையாடிய தம்பி, தங்கை மனம் என்ன பாடுபட்டிருக்கும்.

பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பதுபோல வேலைக்கு சேர்ந்த பதினைந்து நாளில் பனியன் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது. இதனால் ஏமாற்றத்தோடு கோவைக்கு பெற்றோர்களிடம் திரும்புகிறான் சிறுவன். பிள்ளையைப்பிரிந்து  ஏங்கித்தவித்த தாயுக்கும், அண்ணனை பிறந்திருந்த தம்பி, தங்கைக்கும் பதினைந்து நாளில் அண்ணன் திரும்பி வந்ததில் எவ்வளவு மகிழ்ச்சி. தந்தைக்கு மட்டுமென்ன ஏக்கம் இல்லாமல இருக்கும்? ஊரில் பட்ட காயத்தின் முன் பாசம் வைத்து என்ன செய்ய. எப்படியாவது மகனை வேறு வேலைக்கு அனுப்பியாக வேண்டிய கட்டாயத்தில், ஏதாவது வேலையில் சேர்த்துவிடுவதில் குறியாக இருந்தார் இராமசாமி.


ஒருவழியாக கோவையிலேயே கிரைண்டர் ஒர்க்ஷாப் ஒன்றில் மகனை தினக்கூலியாக சேர்த்து விடுகிறார் இராமசாமி. கிரைண்டர் ஒர்க்ஷாப்பிற்கு வேலைக்கு சென்றுகொண்டிருந்தாலும், சிறுவனுக்கோ திருப்பூருக்கு செல்லவேண்டும் என்பதிலேயே விருப்பம் இருந்தது. அதற்கான வாய்ப்பு கிடைக்காததால் கிரைண்டர் கம்பெனியில் அரைமனதோடு வேலையில் தொடர்கின்றான். மூன்றாண்டுகள் கிரைண்டர் கம்பெனியில் வேலை பார்த்தும் சம்பளத்தில் பெரிய மாற்றமில்லை, தினக்கூலி என்ற நிலையிலும் மாற்றமில்லை, எனவே தொடர்ந்து அந்த வேலைக்கு செல்வதில் திருமூர்த்திக்கு அவ்வளவாக விருப்பமில்லை. சிறுவனாய் இருந்தவன் தற்பொழுது  பதினாறு பதினேழு வயது நிரம்பிய இளைஞன். ஏற்கனவே திருப்பூர் செல்லவேண்டுமென்று நினைத்திருந்த இளைஞனுக்கு, இது தான் சரியான தருணமென்று பெற்றோர்களிடம் அனுமதி பெற்று திருப்பூர் செல்ல துணிந்து விட்டான்.

மூன்றாண்டு இடைவெளிக்குப்பின் 1987-இல் மீண்டும் திருப்பூர் வந்தடைந்த இளைஞனுக்கு மெசின் ஆப்ரேட்டரின் உதவியாளர் பணி கிடைத்தது. கிடைத்த வேலையைச் செய்தாலும், பனியன் கம்பெனி வேலையில் எந்த வேலைக்கு அதிக சம்பளம், கிராக்கி உள்ளது என்பதையும் கவனித்துக்கொண்டிருந்தான். இதற்குள் ஓராண்டாகியிருந்தது. இந்த ஒரு வருட காலத்தில் மெசின் ஆப்ரேட்டராக ஆகியிருந்தான். கட்டிங் மாஸ்டருக்கு இருக்கும் கிராக்கியை தெரிந்துகொண்டு, மெசின் ஆப்ரேட்டர் வேலையை உதறிவிட்டு கட்டிங் மாஸ்டர் வேலைக்கு சென்றான். 

கட்டிங் மாஸ்டராக சென்ற சில நாட்களிலேயே கான்ட்ராக்ட் முறையில் ஆர்டர் பெற்று ஆட்களை வைத்து வேலை செய்ய தொடங்குகிறான். கட்டிங் மாஸ்டர் வேலையிலும் மூன்றாண்டுகள் ஓடிவிட்டது. சொந்தமாக தொழில் செய்ய வேண்டுமென்ற ஆசை திருமூர்த்திக்கு இருந்தாலும், வயதும், முதலீடும் பெரும் தடையாக இருந்தது.  இதற்கிடையே, சென்றமுறைபோல் இல்லாமல்  திருப்பூரிலேயே மகன் தொடர்ந்து வேலை செய்வதை எண்ணி மகிழ்ந்த பெற்றோர், எப்படியும் பிழைத்துக்கொள்வான் என்ற நம்பிக்கையில் திருமண செய்து வைக்க முடிவெடுத்தனர். பெற்றோர் விரும்பியதுபோலவே திருப்பூரிலேயே மணப்பெண் கிடைக்க அமைய 21 வயதில் திருமூர்த்திக்கு திருமணம் நடைபெறுகிறது.


ஜெயந்தி என்பவரை 1992-இல் மணமுடித்த திருமூர்த்தியின் வாழ்க்கையில் ஜெயமும் தொடங்கியது. திருமணம் முடிந்த பிறகும் கட்டிங் மாஸ்டராகவே பணியில் தொடர்ந்தாலும், சொந்தமாக ஏதாவது தொழில் செய்யவேண்டும் என்ற எண்ணம் திருமூர்த்தியின் மனதில் மேலோங்கிக்கொண்டே இருந்தது. அதற்கேற்ற சுழல் ஓராண்டு காலத்திற்குள் அமைந்தது. புதிய பொருளாதாரக்கொள்கை, தாராள மயமாக்களுக்கு இந்தியாவின் வாசல் திறந்துவிடப்பட்ட நேரம், திருப்பூர் பனியன் தொழிலில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்கிறது. 

இதற்கிடையே இல்லற வாழ்வில் திருமூர்த்தி-ஜெயந்தி தம்பதிகளுக்கு ஜெயப்பிரியா,மைதிலி, சுபிகா என்று மூன்று பெண்பிள்ளைகள். ஜெயந்தியோடு ஜெயப்பிரியாவும் சேர்ந்துகொள்ள திருமூர்த்தியின் நீணடநாள் கனவும் ஜெயமாகியது. 1993-இல் முதல் மகள் பிறந்தபொழுது மளிகைக்கடை தொடங்கியவர், இரண்டாவது மகள் மைதிலி பிறந்தபொழுது மைதிலி பைனான்ஸ் நிறுவனத்தை தொடங்கியிருந்தார். மூன்றாவது மகள் பிறந்தபொழுது பாலாஜி ரியல் எஸ்டேட் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தையும் தொடங்கினார் திருமூர்த்தி. 

இந்த தொழில்களில் எல்லாம் திருப்தி தரத்தக்க வருமானம் இருந்தாலும், தான் முதன்முதலில் அடியெடுத்து வைத்த பனியன் தொழிலில் சாதிக்கவேண்டும் என்ற ஏக்கம் திருமூர்த்தி அவர்களுக்கு இருந்துகொண்டே இருந்தது. ஏற்கனவே மெசின் ஆப்ரேட்டராகவும், கட்டிங் மாஸ்டராகவும் இருந்த அனுபவம், பதினைந்து ஆண்டுகாலம் கழித்து 2008-இல் சுபேகா டெக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கும் தைரியத்திற்கு அடித்தளமாக இருந்தது. சுபிகா டெக்ஸ் நிறுவனத்தை மெல்ல மெல்ல வார்த்தெடுத்த திருமூர்த்தி அவர்கள், லவ்லி ஹோம் என்ற பெயரில் லேடீஸ் டாப், பனியன் போன்றவற்றை தயாரித்து டெல்லி, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு அனுப்பி வருகிறார். 


திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்களுக்கு உள்ளூரில் எத்தனை கோடிகளில் வர்த்தகம் செய்தாலும் தங்கள் நிறுவன தயாரிப்பு ஏற்றுமதியாகி வெளிநாடுகளுக்குச் செல்லவேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும். அந்த விருப்பம் திருமூர்த்திக்கும் இல்லாமல் இல்லை. 2017-இல் அதுவும் நிறைவேறியது. ஹரிதாஸ் எக்ஸ்போர்ட் என்ற பெயரில் ஏற்றுமதி நிறுவனத்தை தொடங்கி ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். 

பலதொழில்களை வெற்றிகரமாக நடத்தும் அதேவேளையில், தொழிலுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை குடும்பத்திற்கும் கொடுப்பவர் திருமூர்த்தி. பட்டம் ஏதும் பெறாமலே வெற்றியை வசப்படுத்திய திருமூர்த்தி, தனக்குக் கிடைக்காத கல்வியை மகள்களுக்கு வழங்கினார். தொழிலில் ஓயாமல் ஓடி உழைத்தபொழுதும் ஜெயப்பிரியா, மைதிலி  இருவரையும் குன்னூரிலுள்ள புகழ்பெற்ற செயின்ட் ஜோசப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். உறவினர்களும், நண்பர்களும் பெண்பிள்ளைகளை எதற்கு இவ்வளவு செலவு செய்து படிக்க வைக்கின்றாய் என்றபொழுது அக்கருத்தை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் இரு பெண்களையும் மருத்துவராக்கி மகிழ்ந்தார். கடைக்குட்டி சுபிகா பி.எஸ்.சி  ஐடி  படித்து வருகிறார். 

மூத்தமகள் மருத்துவர் ஜெயப்பிரியா, சாரா க்ளினிக் என்ற பெயரில் திருப்பூர், பாரதி நகரில் மருத்துவமனை தொடங்கி சர்க்கரைநோய் சிறப்புநோய் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரின் கணவர் சரத்குமார் திருப்பூர் சரண் ஹாஸ்பிட்டலில் மருத்துவராக உள்ளார். இளையவர் மைதிலி திருப்பூரிலுள்ள சுலோக்சனா மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார்.


நாற்பதாண்டுகாலம் கடின உழைப்பைத்தவிர வேறெந்த பொழுதுபோக்கும் திருமூர்த்தி அவர்கள் கண்டிராத ஒன்று. உழைப்பதும்,உதவுவதுமே இரு கண்கள். எதையும் மிக எளிதாக எடுத்துக்கொள்ளும் திருமூர்த்தி அவர்கள், சினிமாத்துறையிலும் தனது அதிஷ்டத்தை சோதித்துள்ளார். களவானி மாப்பிள்ளை என்ற படத்தின் இணை தயாரிப்பாளராக திரைத்துறையிலும் தடம் பதித்தார்.

தொழில்துறையில் சாதிக்க விரும்புபவர்களுக்கு முதலீடாக தேவைப்படுவது கடின உழைப்பு, கற்றுக்கொள்ளும் ஆர்வம், அர்ப்பணிப்பு எண்ணம், உரிய பயிற்சி இருந்தால் யாரும் தொழில் தொடங்கலாம் என்று கூறும் திருமூர்த்தி அவர்கள், பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உழைப்பை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார். எந்த சூழ்நிலையிலும் நம் பெற்றோர்கள் பெண் பிள்ளைகளை படிக்க வைப்பதற்கு தயங்கக்கூடாது. நம் சமுதாய பெண்களின் கல்வியை உறுதி செய்வதை இயக்கமாக முன்னெடுக்கவும், சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு வழிமுறைகளையும், உதவிகளையும் வழங்கிட என்றென்றும் தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved