வாழ்க்கை பாதையை மாற்றிய விபரீத ஆசை? - உழைத்தார்கள் உயர்ந்தார்கள்!
திருப்பூர், மகாபாரத காலத்தில் இருந்தே உள்ளதாக புராணங்களில் சொல்லப்பட்டாலும், சங்க காலத்தில் சேரர்களின் ஆளுகையை உறுதி செய்த மண். பழம்பெருமை வாய்ந்த இந்நகரின் அருகேயுள்ள மண்ணரையைச் சேர்ந்த ராஜூ அடிப்படையில் ஒரு விவசாயி. விவசாயக்குடியில் பிறந்து, விவசாயியாகவே வளர்ந்து வந்த ராஜு, திருப்பூர் நகரம் டாலர் சிட்டியாக உருவெடுக்கத் தொடங்கியபொழுது, அவரும் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள தயங்கவில்லை. விவசாயத்தோடு பனியன் கம்பெனியையும் தொடங்கியவருக்கு அன்பான துணையாக வந்தவர் ஜெயமணி. விவசாயம், தொழில் இரண்டும் குதிரையும், காளையும் பூட்டிய வண்டியாக இருந்தாலும் லாவகமாக கையாண்ட ராஜு அவர்களின் வாழ்க்கை சரியான திசையில், சரியான வேகத்தில் சுகமாக சென்றுகொண்டிருந்தாலும், பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த மகனின் படிப்பில் அவ்வளவு திருப்தியில்லை.
திரு.ராஜு - திருமதி.ஜெயமணி தம்பதிகளுக்கு மூத்தவன் மோகன்குமார், இளையவள் சுதா (எ) தமிழ்ச்செல்வி. எல்லா அப்பாக்களுக்கும் இருக்கும் பிரச்சினைதான் ராஜுவுக்கும். கடைக்குட்டி, மகள் சுதா படிப்பில் சுட்டி, அப்பாவுக்கு செல்லம். மகன் மோகனுக்கு பிரண்ட்ஸ் சவாகாசம் கொஞ்சம் ஜாஸ்தி, படிப்பு மந்தம். எல்லா வீட்டுப் பசங்களும் நல்லா படிக்கிறாங்க, இவனும் எப்படியோ ஒரு டிகிரி வாங்கிட்டாக் கூட போதும் என்ற அப்பாக்களின் எதிர்பார்ப்பு தான் அவருக்கும். மோகனுக்கு படிச்சு பாஸ் பண்ணியதைவிட, எட்டாம் வகுப்புவரை எல்லோரும் கட்டாய பாஸ் என்ற அரசின் கொள்கை முடிவு கொஞ்சகாலம் சௌகரியமாக இருந்தது. ஒன்பதாம் கிளாஸ்க்கு போன பிறகுதான், படிச்சாத்தான் பாஸ் பண்ன முடியும்போல என்பது மோகனுக்கே உரைத்தது. ஞானோதயம் திடீர்னு வரலாம், படிப்பு அப்படி வந்திடுமா என்ன? சரி போற வரைக்கும் போகட்டும் என்று மோகனுக்கும், பத்தாவது பாஸ் பண்ணிடுவானா என்ற கவலை அப்பாவுக்கும்.
மகன்கள் படிப்பு குறித்து எல்லா அப்பாக்களுக்கும் இருக்கும் கவலை தானே அவருக்கும். மோகனுக்கோ, பிரண்ட்ஸ்க எல்லாம் "யமாஹா பைக்" வாங்கீட்டாங்க...,
அம்மாகிட்ட சொல்லிட வேண்டியது தான்...
ஆம், மோகன் தயக்கப்படும் ரகமெல்லாம் கிடையாது.
அம்மாவிடம் சொன்னபொழுது, அவர் யோசிக்கவே இல்லை...,
நல்லா படிச்சு பத்தாங்கிளாஸ் பாஸ் பண்ணு, அப்பாகிட்ட சொல்றேன்னு,
அவங்களே "பட்"ன்னு சொல்லீட்டாங்க...
இதெல்லாம் நடக்கிற கதையா என்பது மோகனுக்கு தெரிந்தாலும்,அம்மாவை எப்படியாவது சமாதானம் செஞ்சாதானே பைக் வாங்க முடியும்?...
இப்படி அம்மாவுக்கும், மகனுக்கும் மல்லுக்கட்டு நடந்து கொண்டிருந்தபொழுதே பத்தாம் வகுப்பு "ரிசல்ட்" வந்துவிடுகிறது.
முடிவு மோகனுக்கு தெரிஞ்சது தானே!..
அதுக்குத்தான் ரிசல்ட் வருவத்ற்கு முன்னமே பைக் வாங்கிறம்னு முயற்சி செஞ்சாப்ல..,
படிக்கிறப்பவே தெரியும், இருந்தாலும் அரைகுறை ஆசையில் எதிர்பார்த்துக் காத்திருந்த பெற்றோர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான்.
மோகனுக்கு ரிசல்ட் குறித்தெல்லாம் எந்தக் கவலையும் இல்லை. "யமஹா பைக்"கில் தான் முழுசிந்தனையும்.
இனி மகன் படிப்பான் என்ற நம்பிக்கையில்லை.
எதுக்கு தேவையில்லாமல் "பைக்" வாங்கிக்கொடுக்கனும். வேணும்னா பத்தாவது பாஸ் பண்ணச்சொல்லு... இல்லைன்னா,
அவனையே சம்பாரிச்சு வாங்கிக்க சொல்லு..
எல்லா அப்பாக்களும் சொல்லும் வசனத்தைத்தான் ராஜூ அவர்களும் கட் அன்ட் ரைட்டா சொல்லிவிட்டார்.
படிப்பதை என்றுமே சுமையாக நினைத்த மோகனுக்கு இது வசதியாக போய்விட்டது. நானே வேலை செஞ்சு சம்பாதித்து "யமாஹா பைக்" வாங்கிக்கிறேன் என்ற முடிவை அம்மா வழியாக அப்பாவின் காதுக்கு கொண்டு சேர்த்தாச்சு.
வீட்டிலேயே உட்கார்ந்து சாப்பிட வசதி இருக்கு.
அப்பா கம்பெனியை பார்த்துட்டாலும் கூட போதும்.
ஆனால், கடைசியில் அப்பாகிட்டத்தான் கையேந்தி நிக்கணும்.
இதெல்லாம் சரிப்பட்டு வராது... திருப்பூர்ல இல்லாத கம்பெனிகளா..., வேற பக்கம் வேலைக்கு போகலாம் என்ற முடிவில் மோகன்.
வேலைக்கு போயிட்டேவாவது படிச்சு பத்தாவது பாஸ் பண்ணச்சொல்லு என்பது அம்மா வழியாக அப்பா வைக்கும் ஒற்றை கோரிக்கை.
சரி, பாத்துக்கலாம்... மோகனுக்கும் அரைகுறை விருப்பம் தான், ஆனால் படிப்பு வந்து தொலையமாட்டீங்குதே...
எப்படியோ, பெற்றோருக்கும் மகனுக்கும் நீடித்து வந்த பனிப்போர் ஒருவழியாக முடிவுக்கு வந்தாகிவிட்டது.
திருப்பூர்ல வேலைக்கு என்ன பஞ்சமா?
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரைக்கும் யாருக்கு வேலை இல்லனாலும் நம்பி வர்ற ஊரு. உள்ளூர்காரனுக்கு வேலையில்லாம போகுமா?
இங்கு குழந்தை தொழிலாளர்கள் இங்கு பணியமர்த்தப்படலைன்னு எல்லா கம்பெனி, கடைகள்ல தொங்கற போர்டு தான் இங்கேயும் தொங்கியது.
15 வயசு ஆயிடுச்சில்ல... அதெல்லாம் சமாளிச்சிக்கலாம்...,
ஷேல்ஸ் மேன் வேலை...காலையில 8.30 மணிக்கு கடை திறந்தா, நைட் 10 மணிக்கு மூடுவோம்.
நம்மளது சின்ன ஷோரூம் தான்...
ரெண்டாயிரம் ரூபாய் சம்பளம். லீவ் போடாம கரெக்ட்டா வேலைக்கு வரணும்.
ஓகேன்னா நாளைக்கே வேலைக்கு வா.. என்றார் ஷோரூம் ஓனர்.
பள்ளியில் தான் வாத்தியார் எப்படி சொல்லிக்கொடுத்தாலும் கணக்கு பாடம் மோகன் மண்டையில் ஏறவேயில்லை. ஆனால், ஷோரூம் ஓனர் ரெண்டாயிரம் என்றவுடன், ஒன்பது மாதம் வேலை செய்யனும் என்ற மனக்கணக்கு போட்டாகிவிட்டது. ஆம், 2000-ஆம் ஆண்டில் யமாஹா பைக் விலை பதினெட்டாயிரம்.
மண்ணரை டூ ஷோரூம் தூரம் ஏழு கிலோ மீட்டர். திருப்பூரில் காலை வேளைகளில் பேருந்துகளில் கூட்டம் அலைமோதும்.
பஸ்ல போறதெல்லாம் வேலைக்கு ஆகாது... சைக்கிள்ளையே போயிட வேண்டியது தான்...
அடுத்தடுத்த நொடிகளில் வேகமாக வேளை செய்தது மோகனின் மூளை.
காடு கரை இருக்கு.., கம்பெனி இருக்கு.., தினமும் சைக்கிள மிதிச்சுட்டு அவ்வளவு தூரம்... ஏழரைக்கே வீட்டை விட்டு கிளம்புனா நைட்டு பதினோறு மணிக்கு வர்றயே, ஒத்த புள்ள, உனக்கென்ன ராசா தலையெழுத்தா? என வழக்கமாக கம்பளத்தார் வீட்டு தாய்க்குலங்கள் கேட்கும் கேள்வியை அம்மா ஜெயமணி ஒரு நாளும் மோகனிடம் கேட்கவே இல்லை. அப்பாவும், அம்மாவும் தனியா பேசிக்கொள்வார்களே தவிர, ஒரு நாளும் மகன் காதுபட பேசியவர்கள் இல்லை. மோகனும் இதுகுறித்தெயல்லாம் கவலை கொண்டதும் இல்லை.
என்ன மாப்ளே... எட்டு மாசம் ஆகிப்போச்சு..,
இன்னும் ஒரு மாசந்தான மாப்ளை பாக்கி இருக்கு...,
வண்டிய "புக்" பண்ணிடலாம் மாப்ளே.. என்றது நண்பர்கள் வட்டாரம்...,
ம்...ரெண்டு வருசமா கனவு, வீட்ல சொல்லிட்டு எடுத்திடலாம் மாப்ளே...,
அம்மா, பைக் வாங்கிலாம்னு பசங்க சொல்றாங்க...
பொறுடா... அப்பா வந்தவுடன் நல்ல நாள் என்னைக்குன்னு பஞ்சாங்கத்தில பார்த்துச் சொல்றேன்...
மோகன் இப்பெல்லாம் அடம்பிடிக்கிறதில்லை..., அம்மா சொன்னா காதுகொடுத்து கேட்கிற சமத்துப் பிள்ளை..
மகன் மாதா மாதம் சம்பளம் வாங்கி கொண்டு வந்து கொடுத்து வைத்திருந்த பணத்தை, அன்றுதான் பீரோவைத் திறந்து ஒருசேர அள்ளி மகனிடம் கொடுக்கிறார் அம்மா. உழைச்சு சம்பாதிச்ச காசில்ல என்ற பெருமிதம் மோகனுக்கு. அப்பாவுக்கும் தகவல் போயிருக்கும். என்ன அந்த பத்தாம் வகுப்பை பாஸ் பண்ணி தொலைஞ்சிருந்தா இன்னும் சந்தோசப்பட்டிருப்பார்.
முதல் சவாரி, அம்மாவா? தங்கச்சியா?...
டேய்.. அவள கூட்டிகிட்டு ஒரு ரவுண்டு வா... என்றார் அம்மா.
இல்லை இல்லை... நீயே மகன் கூட முதல் ரவுண்ட் போயிட்டு வாம்மா...
எப்படியோ, மகன் படிக்கலைன்னாலும் பொழைச்சுக்குவான் என்ற நம்பிக்கையில் சேரில் அமர்ந்து நடப்பதை மெல்லிய புன்னகையோடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் ராஜூ.
பைக் வாங்கனும்கிற கனவுவோடு விளையாட்டா வேலைக்கு போனாலும், அந்த ஆசை நிறைவேறிடிருச்சு, இனி விவசாயத்தை பார்த்துக்கலாம், அப்பா கம்பெனிய பார்த்துக்கலாம் என அத்தோடு வேலைக்கு "டாடா " எல்லாம் காட்டவில்லை மோகன். எட்டு மாத வேலை, உடன் பணியாற்றிய நண்பர்கள், சந்தித்த எத்தனையோ வாடிக்கையாளர்கள் என புதிய அனுபவம் மோகன் வாழ்க்கையில் ஒரு ஒழுங்கையும், பிடிப்பையும் உருவாக்கியிருந்தது. படிக்கும் போது பைக் வாங்கனும்கிற ஆசை எப்படி இருந்ததோ, அதேபோல் இப்பொழுது தொழில்ல கண்டிப்பா சாதிக்கனும்ங்கிற எண்ணம் மோகனிடம் வளர்ந்திருந்தது. இது தொழில், எனவே கொஞ்சம் பொறுமையா இருக்கலாம் என்ற எச்சரிக்கையோடு, ஷேல்ஸ்மேன் வேலையிலேயே மூன்றாண்டுகள் நகர்கிறது.
தனியா கடை போடுன்னு அப்பா சொல்றார், என ஒருநாள் மோகன் சொல்ல...,
அதுக்கு என்னப்பா நானே கடைவெச்சுத்தாறேன்..,
நீ அந்தக் கடைய பார்த்துக்கோ... பார்ட்னர்ஷிப்லயே சேர்ந்து செய்யலாம் ஓனர் சொல்ல...,
மோகனுக்கு உடனடியாக என்ன சொல்வதேன்றே தெரியவில்லை. கடையில் மோகனை விட சீனியர் பலபேர் இருக்காங்க, இதுக்கு முன்னால பல பேர் வேலைய வீட்டு போயிருக்காங்க. அப்பெல்லாம் எதுவும் சொல்லாத ஓனர் மோகனுக்கு மட்டும் பார்ட்னர்ஷிப் தர்றாருன்னா, மோகன் அப்படி நம்பிக்கையா வேலை செஞ்சிருக்காப்ள என்று சக ஊழியர்களின் வயிற்றெரிச்சலும், புகழ்ச்சியும் காதுகளில் கேட்கத்தான் செய்கிறது.
2005-ஆம் வருடம் ஒரு சுபயோக சுப தினத்தில், முதலாளியோடு இணைந்து புதிய ஷோரூம் ஒன்றை திறக்கிறார் மோகன். தொழில் நுணுக்கத்திலும், கஷ்டமர்கிட்ட பேசுவதிலும் மோகன் கில்லாடி. அப்படி இல்லைண்னா பார்டனர்ஷிப் போடுவாறா முதலாளி.? நிக்கிறதுக்கு நேரமில்லை, பேசறதுக்கு நேரமில்லை. இந்தியா முழுக்க கஷ்டமர் நெட்வொர்க். பள்ளிக்கூடம் போறப்பெல்லாம் படிப்பு வரலை. இப்போ என்னடான்னா, மோகனுக்கு இங்கிலீஷ் வருது, ஹிந்தி வருது, உருது வருது, தெலுங்கு, மலையாளம் எல்லா மொழியும் சரளமா நாக்கில் நர்த்தனமாடுகிறது. நாலு வருசஷமா பிஸ்னஸ் பிச்சுட்டுப் போகுது.
அப்பொழுது இந்த ஜிஎஸ்டி எல்லாம் கிடையாது. மாதா மாதம் வாங்கியது, விற்றது கணக்குப் பார்த்து, தாமதமானதற்கு பெனால்டி கட்டுவது எல்லாம் கிடையாது. கடன் ஒருபக்கம் போகும், கேஸ் அன் கேரி ஒருபக்கம் நடக்கும். மாதா மாதம் ஆடிட்டர் ஆபீஸ்ல இருந்து ஒருத்தர் வந்து பில்புக்கை எல்லாம் பார்த்து குறிப்பெடுத்துக்கொண்டு போவார். வந்தவரிடமே ஒரு செக்கை கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டால் அவர்களே ஃபைல் பண்ணிக்கொள்வார்கள்.
இதற்கிடையே பார்ட்னர் புதுசா ஒரு பில்டிங்க் கட்டபோறதா சொல்லிவிட்டு, மோகனிடம் எல்லா பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டு, வரவு, செலவை மட்டும் தன் பொறுப்பில் வைத்துக்கொண்டார். வியாபாரம் நல்லா போயிட்டிருக்கு. அம்மா, தங்கச்சிக்கு ஏதாவது செய்யனும், நல்ல வீடு கட்டனும்னு பார்த்தா கையில மட்டும் காசு தங்கமாட்டீங்குது. மனதிற்குள் அவ்வப்பொழுது இந்த எண்ணம் வந்து சென்றாலும், பிஸினஸ் சூடா போயிட்டிருக்கு, இப்போ பார்க்கலாம், அப்போ பார்க்கலாம்னு தள்ளிப்போயிட்டே இருக்கு என்ற கவலை மோகனுக்கு வராமலில்லை.
டேய், என்னடா ஓடிகிட்டே இருக்கே..., ஏதுவும் வாங்கிப்போட்ட மாதிரி தெரியலையே... பதிலே சொல்லாமல் இருந்தா எப்படி?.. என அம்மா ஒரே தொந்தரவு.
அம்மா கேட்கிறதும் சரிதான்... எப்படியாவது நேரம் ஒதுக்கி உட்கார்ந்து கணக்கு பார்த்துவிட வேண்டும்.
ஒருவழியாய் பார்னரிடமும் இதுகுறித்து பேசியாகிவிட்டது.
இதுவரை போனது வந்ததெல்லாம் ஆடிட்டரிடம் கேட்டு கணக்குப்பார்த்து முடித்தால் ஒருகோடியே முப்பத்தைந்து லட்சம் கடன்.
வேலைக்கு போனபொழுது எட்டு மாதத்தில் ஒரு பைக் வாங்க முடிந்தது. நாலு வருசமா ஓடி ஓடி ஒழைச்சு ஒன்னரைக்கோடி கடன்.
"ஒரு யமாஹா பைக்"க்கு ஆசைப்பட்டது, கடைசியில் கடன்காரன் ஆக்கிருச்சே!..
இப்படியெல்லாம் ஒன்றும் எமோஷனல் ஆகிற பார்டியல்ல மோகன்.
படிக்கிறப்போ கிளாஸ்ல கடைசி மார்க் வாங்கினாலே சோர்ந்துபோனது இல்லை. கடன் தானே, என்ன செய்யப்போகிறது.
பார்ட்னர் இந்தக் கடையே நீங்களே பார்த்துக்குங்க... நான் வேற பார்த்துக்கிறேன்.
அவ்வளவு தான் டீலிங் முடிந்தது. ஒரு பஞ்சாயத்து இல்லை, பைசல் இல்ல. நல்லாத்தானே பிஸ்னஸ் போச்சு... ஏன் கடன் ஆச்சு? எங்க காசு போச்சு? இப்படியெல்லாம் யோசிக்கிற ரகம் மோகன் இல்லை.
ஏற்கனவே அறிமுகமாகியிருந்த பக்கத்து கட்டிடத்தில் 150 சதுரடியில் ஒரு கடை வாடகைக்கு இருந்தது. இப்பொழுது இருப்பதில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லை. பரவாயில்லை, கஸ்டமர் நம்ம கையில் இருக்காங்க.மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்.
"மோகன்ஸ் ஷாப்பி" என்று பரந்து விரியப்போகும் ஆலமரத்தின் சிறுவிதை அங்குதான் நடப்படுகிறது. ஏற்கனவே நான்கு ஆண்டு ஓடிய களைப்பே இல்லை. தற்பொழுது நவீனமயமாக்கப்பட்ட ஹைஸ்பீட் என்ஜின் போல் கூடுதல் வேகம் தான் மோகனிடம். இது தான் ஒரிஜினல் மோகனின் குணம். தொடர் ஓட்டத்திற்கு மத்தியில் தங்கையின் திருமணத்தின்போது சிறுது ஓய்வையும், உற்றார் உறவினர்களையும் சந்தித்தது தான், மற்றபடி, குடும்பம், திருமணம் என்று எதைப்பற்றியும் சிந்திக்க நேரமில்லாமல், இரவு பகலாக உழைப்புதான்.
A to Z அடிப்படையில் அனைத்துவிதமான ஆடைகளையும் மொத்தமாக கொள்முதல் செய்து டெல்லி, பெங்களூர், கல்கத்தா, மும்பை, சென்னை, ஹைதராபாத் என நாட்டின் அனைத்து முன்னனி நகரங்களுக்கும் சந்தையை விரிவுபடுத்திக்கொண்டே வந்தார். இதுதவிர, நாட்டிலுள்ள ஆறுக்கும் மேற்பட்ட பிரபல நிறுவனங்களின் ஆடைகளை நேரடியாக கொள்முதல் செய்து உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் மோகன், Brend, Tom David, Blendermen, Pullmen போன்ற பெயர்களில் சொந்த "பிராண்ட்" டில் குர்தி, வெஸ்டர்ன் டிரஸ், டி-சர்ட், ஜீன்ஸ் பேன்ட், சல்வர், சுடிதர் போன்ற ஆடைகளை தென் ஆப்ரிக்கா, துபாய், இலங்கை போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.
பத்தாயிரம் சதுரடிகொண்ட பிரமாண்ட கட்டிடத்தின் ஒரு மூளையில் 150 சதுரடியில் தொடங்கப்பட்ட "மோகன்ஸ் ஷாப்பி", சில ஆண்டுகளிலேயே 3000 சதுர அடிக்கு பரந்து விரிந்தது. முதலில் வேகமாக ஓடிய மோகன், நாட்கள் செல்லச்செல்ல விவேகத்தையும் சேர்த்துக்கொண்டார். வேகமும், விவேகமும் சேர்ந்துகொள்ள வெற்றியும் தானாக வந்து ஒட்டிக்கொண்டது. விதைத்த இடத்திலேயே விருட்சமும் முளைத்தது. அது 150, 3000 என தொடங்கி இன்று ஒட்டுமொத்த கட்டிடத்தையும் சொந்தமாக்கி பரவியுள்ளது "மோகன்ஸ் ஷாப்பி". தனது15-வது வயதில் ஓடத்தொடங்கிய மோகன், வாகனங்களின் எஞ்சின் மாடல்கள் மாறுவதுபோல், காலமாற்றத்திற்கேற்ப தன்னையும் மாற்றிக்கொண்டு, கால்நூற்றாண்டுகளுக்கும் மேலாக அதே உத்வேகத்துடன், நேற்றை விட இன்று, இன்றை விட நாளை என வேகமாக முன்னேறிக் கொண்டுள்ளார்.
21.04.1986-இல் பிறந்த மோகன்குமார் தனக்கு பழகிப்போன தொழிலில் மட்டும் சாதிப்பவரல்ல, எதில் இறங்கினாலும் வெற்றியை வசமாக்கும் மந்திரவாதி. அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் தங்கை வாக்கப்பட்டிருந்தாலும், அரசியல் குறித்து பேசுவதற்குக்கூட நேரமில்லாமல், வாக்குப்பதிவு நாளில் கூட தொழில்... தொழில்... என்று சுற்றுப்பயணத்தில் இருப்பவர் மோகன். 2021 சட்டமன்றத்தேர்தலில் கொங்கு மண்டலத்தை முழுமையாக இழந்திருந்த திராவிட முன்னேற்றக் கழகம், ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனது செல்வாக்கை நிரூபிக்க சாம,தான,பேத, தண்டம் அனைத்தையும் களமிறக்கிய தேர்தல் களம். தங்கையோ ஆட்சியை இழந்து எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக வேட்பாளர். தேர்தல் களம் கட்சிக்கு சாதகமாக இல்லை, தங்கையை வெற்றிபெறச்செய்தே ஆகவேண்டும்.
இதுவரை இப்படி தொழிலில் இருந்து ஒருசில தினங்கள் கூட விலகி இருந்ததாக இருபதாண்டு வரலாற்றில் இல்லை. தங்கையின் வெற்றிக்காக 25 ஆண்டுகளுக்குமுன் தான் சுற்றித்திரிந்த கிராமங்களின் தெருக்களில் மீண்டும் காலடி வைத்தார். ஆளும் கட்சியின் அசுரபலத்தை எதிர்கொண்டு திருப்பூர் மாநகராட்சியின் 33-வது வார்டில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட தன் தங்கையை வெற்றிபெறச் செய்து, அரசியலிலும் தன்னால் சாதிக்க முடியும் என்று நிரூபித்தார் மோகன். ஆம், திருப்பூர் மாநகராட்சியில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளர் ஒருசிலரில் தமிழ்ச்செல்வியும் ஒருவர்.
மோகன் குறித்து நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்கலாம் என்று முயன்றோம். ஆரம்பப்பள்ளியில் தொடங்கி பத்தாம் வகுப்புவரை மோகனோடு படித்த பள்ளிக்கால தோழர் நாகேந்திரனிடம், மோகன் குறித்து ஒரே வரியில் கூறுங்கள் என்றோம். நாற்பது வயதிற்குள்ளே மோகன் வாழ்க்கையை ஒரு வரலாறாகவே எழுதலாம், இருந்தாலும் ஒற்றைவரியில் சொல்வதென்றால் உழைப்பு, சாதுரியம், கருணை இவற்றின் வடிவம் மோகன் என்றார்.
தொழில்மீது இருக்கும் அதே பற்றும், பாசமும் சமூகத்தின் மீதும் கொண்டிருப்பவர், இளைஞர்கள் பெருமளவில் தொழில்துறையில் சாதிக்க முன்வரவேண்டும் என்று விரும்புகிறார். திருப்பூர் கூலிபாளையத்தைச் சேர்ந்த ரூபா என்பவரை மணமுடித்துள்ள மோகன்குமார், தொடர்ந்து தொழில்துறையில் சாதித்து, இன்னும் பல வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம்