🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உழைத்தார்கள் உயர்ந்தார்கள்- சுகப்பிரியா S.இராமராசு

திரு.S.இராமராசு அவர்கள் 10.06.1958-ல், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகேயுள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில் திரு.சுந்தரப்ப நாயக்கர்- திருமதி.பெருமாளம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார்.  மேல்நிலைக்கல்வி வரை பயின்றவர், பெற்றோர்களுக்கு உதவும் பொருட்டு விவசாயப்பணிக்கு திரும்பினார். இவருக்கு திருமணமாகி திருமதி.R.ருக்மணிதேவி என்ற மனைவியும் R.சத்ய ஸ்ரீ என்ற மகளும் R.சத்ய நாராயணன் என்ற மகனும் உள்ளனர்.


விவசாயப்பணியில் திருப்தி அடையாதவர், சொந்தமாக தொழில்துவங்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதன் அடிப்படையில், 1980 ஆம் ஆண்டு சிவகாசி நகரில் தேனீர் (டீக்கடை) கடையை துவங்கினார். கடுமையான உழைப்பாலும், சிக்கனமான வாழ்க்கையாலும் ஓரளவு அதில் வெற்றி பெற்ற நிலையில், நகர வாழ்க்கை, அவருக்கு மாற்று சிந்தனையை ஏற்படுத்தியது. ஒரே தொழிலில் கடைசிகாலம் வரை வாழ்க்கையை ஓட்டவேண்டும் என்று நினைக்காமல், மாற்றுத் தொழிலும் கால்பதிக்க விரும்பினார். அதன்விளைவாக 1984-ஆம் ஆண்டில், சிவகாசி நகரை உலகளவில் புகழ்பெறச்செய்த பட்டாசு தொழிலில் தடம்பதித்தவர், கம்பி மத்தாப்பு பட்டாசுகளுக்குத் தேவையான கம்பிகளை உற்பத்தி செய்து, பெரிய தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்யும் நிறுவனத்தை தொடங்கினார். அதிலும் வெற்றிகண்டவர், அடுத்த மூன்றாண்டுகளில் சுகப்பிரியா மெடிக்கல்ஸ் என்ற பெயரில் மருந்து விற்பனை செய்யும் கடையை சிவகாசியில் தொடங்கினார். வெற்றி மீது வெற்றி சேர்ந்துவர , “சுகப்பிரியா” என்ற ப்ராண்டு பெயரும் புகழைப்பெற்றது. இந்த தொழில்களில் தன் முழுமையான கவனத்தைச் செலுத்த சிறிது காலம் எடுத்துக்கொண்டவர், சிவகாசி நகரின் எதிர்கால தேவையை உள்வாங்கிக்கொண்டு, 1996-ல் மீண்டும் அடுத்த பாய்ச்சலுக்கு தயாரானார். அதே ஆண்டில் சுகப்பிரியா மினரல் வாட்டர் என்ற நிறுவனத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் துவங்கி சிவகாசி நகருக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விநியோகம் செய்தார். 1996-ல் மினரல் வாட்டர் என்ற “கான்செப்ட்” பெருநகரங்களில் கூட பிரபல்யம் இல்லாதபொழுது, ஒரு மாவட்ட அந்தஸ்துகூட இல்லாத  சிவகாசி போன்ற “C” கிரேடு நகரில் நடைமுறைப்படுத்த துணிந்தது பெரிய நிறுவனங்கள்கூட முயற்சிக்காதது என்பது குறிப்பிடத்தக்கது. சிவகாசி முழுவதும் ஒரேமாதிரி சிந்தனைசெய்கையில், திரு.இராமராசு அவர்களின் சிந்தனை மட்டும் வேறுகோணத்தில் இருந்தது. சுகப்பிரியா நிறுவனத்திற்கு மினரல் வாட்டர் தொழில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. சுகப்பிரியா மினரல் வாட்டருக்கு, சிவகாசி நகரத்தை தாண்டி, சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களிலும் டிமாண்ட் ஏற்பட்டதால், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை அதிக அளவில் விற்பனை செய்திட “பாட்டில்”களின் தேவையும் அதிகரித்தது. அத்தேவையை சுயமாக பூர்த்திசெய்து கொள்ளும் பொருட்டு, 2005-ஆம் ஆண்டு சிவகாசி நகரில் சத்யா பெட் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெட்பாட்டில்கள் தயாரிக்கும் நிறுவனத்தை துவங்கினார்.

வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப்பெற்று வளர்ந்து வந்த சுகப்பிரியா நிறுவனத்தின் தலைவருக்கு, தன் வாடிக்கையாளர்கள் சுகப்பிரியா நிறுவனத்தின் தண்ணீரை மட்டும் வெறுமனே பருகினால் போதாது என்று நினைத்திருப்பார் போலும். ஆரோக்கியமாக எதையாவது உட்கொண்டபின் நீரைப் பருகினால் நன்றாக இருக்கும் என்று, 2016-ல் சுகப்பிரியா புட் பிராடக்ட்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி ரொட்டி,பன், ரஸ்க் போன்ற திண்பண்டங்களை தயாரித்து விநியோகம் செய்யத்துவங்கினார். அதிலும் திருப்தி அடையாதவர், மேலும் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, சுகப்பிரியா மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி ஆலையை நிறுவி, இயற்கை முறையில் தரமான எண்ணெய் தயாரித்து, தன் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறார். எந்த ஒருபொருளையும் தொடர்ந்து பயன்படுத்துகையில் அதிலிருந்து ஒரு மாற்றத்தை வாடிக்கையாளர்கள் விரும்புவது இயற்கை. சாதாரண மனிதனின் எளிய எண்ணங்களையும் உள்வாங்கியவராக, வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் பொருட்டு, தென்மேற்கு மலைத்தொடர்ச்சிகளில் உற்பத்தியாகும் புகழ்பெற்ற குற்றால அருவி ஓடும்பகுதியிலிருந்து சுவையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தயாரித்து விநியோகிக்க 2019-ஆம் ஆண்டு “குற்றால மினரல் வாட்டர்” என்ற நிறுவனத்தை துவங்கி   வெற்றிகரமாக நடத்திவருகிறார். தரத்தில் சுத்த தங்கமான சுகப்பிரியா நிறுவனம், ISO தரச்சான்று பெற்ற நிறுவனமாக மிளிர்கிறது.


பல்வேறு தொழில் நிறுவனங்களை துவங்கி நடத்துவதிலும், புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதோடும் அவரின் பணி நின்றுவிடவில்லை.  தன் தயாரிப்பு பொருள்சார்ந்த வாடிக்கையாளர்களின் நலனில் மட்டுமல்லாது, சமூகம் சார்ந்த மக்களின் நலனிலும் அக்கறையுடையவர் திரு.இராமராசு அவர்கள். அதை மெய்பிக்கும் வகையில் சிவகாசி சுற்றியுள்ள பல்வேறு பகுதி மக்களின் தேவைகளுக்கும் உதவி வருகிறார். தான் பிறந்த பிள்ளையார்நத்தம் கிராமத்திலுள்ள பள்ளியை உயர்நிலைப் பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த, அக்கிராம முக்கியஸ்தர்கள் முயன்றபொழுது, தன்னாலான எல்லா உதவிகளியும் செய்து, அதைவெற்றிகரமாக்கிட உதவினார். மேலும் அக்கிராமத்திலுள்ள ஆரம்ப பாடசாலையை தத்தெடுத்து, பாடசாலைக்கு தேவையான முழு உதவிகளையும் தானே செய்து வருகிறார்.  கிராம பள்ளிகளுக்கு தேவையான டேபிள் சேர், கழிவறை, சீலிங்க் பேன், குழாய் விளக்குகள் மற்றும் பராமரிப்பு பணிகளை இவர் நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தன் தொழிலில் எப்படி உக்திகளைக்கையாண்டு புதிய புதிய முயற்சிகளை மேற்கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளாரோ, அதில் சற்றும் குறைவில்லாமல் பொதுநலத்தொண்டிலும் அக்கறை கொண்டவர். சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக “ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி”யில்  உறுப்பினராக இணைந்து, அக்கிளப் செய்யும் பல்வேறு பொதுத்தொண்டுகளுக்கு தன் பங்கிற்குரியதை செய்துவருகிறார். தொழில், பொதுநல சேவை தவிர, ஆன்மீகத்திலும் அதிக நாட்டமுடையவரான திரு.இராமராசு அவர்களும், அவரின் குடும்பத்தாரும், கேரள மாநிலம், வடகரை சுவாமி சிவானந்த பரம்மஹம்சரின் தீவிர சீடர்கள் ஆவர். சுவாமி பரம்மஹம்சரின் அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்படும் சேவைகளுக்கு பெருமளவில் உதவி செய்வதில் அதிக நாட்டமுடையவராக இருந்து வருகிறார்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் சுகப்பிரியா மினரல் வாட்டர் கம்பெனியின் சார்பில் பிள்ளையார்நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் சுமார் மூன்று ஏக்கரில் கைப்பந்தாட்ட மைதானத்தை அமைத்து பராமரித்து வருகிறார். இந்த மைதானம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் வேடந்தாங்கலாக விளங்குகிறது என்றால் மிகையல்ல. இம்மைதானத்தில், மாவட்ட அளவிலான  பள்ளிகளுக்கிடையே கைப்பந்துப் போட்டிகளை வருடம்தோறும் லட்சக்கணக்கான பொருட்செலவில் நடத்துபவர், வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுப்பொருட்களையும் தன் சொந்த செலவில் வழங்கி வருகிறார். இதன்மூலம் அம்மாவட்ட மாணவர்களின் விளையாட்டுத்திறனை ஊக்கப்படுத்தவும், மேம்படுத்தவும் தவறவில்லை என்பது மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விசயம். பிள்ளையார்நத்தம் அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை-எளிய மாணவர்களள் ஐம்பதுபேர்வரை  தங்கும் விடுதி கட்டித்தர பள்ளிக்கல்வித்துறை நிதி ஒதுக்கீடு செய்து, விடுதிகட்ட நிலம் தேடி கையைப்பிசைந்து கொண்டிருந்த நிலையில், அதைக்கேள்விப்பட்டவர் தானாக முன்வந்து 32 சென்ட் நிலத்தை இலவசமாக வழங்கிய பெரும் ஈகையாளர் திரு.இராமராசு அவர்கள்.


தன் வாழ்நாளில் ஈட்டுவதை தன்னளவில் வைத்துக்கொள்ளாமல், பொதுமக்கள் சேவைக்கும் அள்ளிக்கொடுப்பதை வழக்கமாகக் கொண்டவருக்கு, தன் சமுதாயத்தினர் மீது அக்கறையின்றிப் போகுமா?. தன்னை நாடிவரும் பல்வேறு சமுதாய அமைப்புகளுக்கும், அவர்களின் சேவைக்கேற்ப, தன்னால் இயன்றதை வழங்கிடும் திரு.இராமராசு அவர்கள், சென்னை வீ.க.பொ இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் கட்டுமானப்பணிக்காக ரூபாய்.200000/-க்கும் அதிகமாக நன்கொடை வழங்கியோருக்கான “பர்பிள் கிளப்” உறுப்பினர் என்பது குறுப்பிடத்தக்கது. திரு.இராமராசு அவர்களை தொழிலில் யாரும் வெற்றிகொள்ளலாம், ஆனால் ஈகையால் வெல்வது கடினமே.

நமது சமுதாயத்திற்கெல்லாம் பெருமை சேர்த்திடும் வகையில் தொடர்ந்து தொழில்துறையில் பல்வேறு முயற்சிகளில் களம்கண்டு சாதித்து, கம்பளத்தார் சமுதாயத்தில் வெற்றிகரமான தொழிலதிபராக வளம் வரும் திரு.இராமராசு அவர்கள், புதிதாய் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியடைய வேண்டும், அவரின் சேவை சமுதாயத்திற்கு தொடரவேண்டும் என்று வேண்டி அன்புடன் வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved