உழைப்பால் உயர்ந்த உத்தமர்- தொழிலதிபர். வலசை.திரு.V.கண்ணன்
வலசை.திரு.V.கண்ணன் அவர்கள் 21.07.1972-ல் தென்காசி மாவட்டம் (முன்பு திருநெல்வேலி மாவட்டமாக இருந்தது), கடையநல்லூர் அருகேயுள்ள வலசை எனும் கிராமத்தில் திரு.வேலுச்சாமி நாயக்கர் – திருமதி. சண்முகத்தாய் அம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். தென்காசியிலுள்ள தொழில்நுட்ப கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் (DEE) பட்டயம் பெற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.K.கவிதா என்ற மனைவியும் K.ப்ரியதர்ஷினி மற்றும் K.சுபஸ்ரீ என்ற இரு மகள்களும் உள்ளனர்.
பட்டயப்படிப்பை முடித்து, இராஜபாளையத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் இரண்டாண்டுகள் பயிற்சி பெற்றவருக்கு, புகழ்பெற்ற ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்புகிட்டியது. அந்நிறுவனத்தின் எலக்ட்ரிக்கல் துறையில் மேற்பார்வையாளராக (சூப்பர்வைசர்) பணியமர்ந்தவர், தன் கடுமையான உழைப்பால் படிப்படியாக அடுத்தடுத்த நிலைகளுக்கு பதவி உயர்வு பெற்றார். மேற்பார்வையாளராக பதவியேற்ற சுமார் இரண்டாண்டுகளுக்குள்ளாகவே திட்டப் பொறியாளர் (ப்ராஜெக்ட் இன்ஜினியர்) அந்தஸ்திற்கு உயர்ந்தார். ஸ்டெர்லைட் ஆலையில் நான்காண்டுகள் பணியாற்றிய நிலையில், தானே ஒரு நிறுவனத்தை சொந்தமாக தொடங்கி நடத்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த எண்ணங்களுக்கு வண்ணம் தீட்டி, நெஞ்சில் சுமந்த ஆசைக்கனவை உயிர்ப்பிக்கும் முனைப்பில் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறினார்.
2004- ஆம் ஆண்டு விக்னேஷ் எலக்ட்ரிக்கல்ஸ் என்ற நிறுவனத்தை துவங்கியவர், எந்த நிறுவனத்தில் தன்னை முழுமையான பொறியாளராக செதுக்கிக்கொண்டாரோ, அதே ஸ்டெர்லைட் நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் துறையில் “சர்வீஸ் ஒப்பந்ததாரராக” உள்ளே மீண்டும் காலடி வைத்தார். இதிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர்,படிப்படியாக Chemical Plant, Water Treatment Plant, Effluent Treatment Plant, Sewage Treatment Plant, Solid Waste Management Plant, Electrical Equipment Supply, Thermal Power Plant என பல்வேறு பிரிவுகளிலும் தான் சாம்ராஜியத்தை விரிவுபடுத்திக்கொண்டார். முதலில் தடம் பதித்தார், நிலைநிறுத்திக்கொண்டார், விரிவுபடுத்திக்கொண்டார், அதனுடன் தரத்திலும் முத்திரை பதித்துக்கொள்ளவும் தவறவில்லை. ஆம், 2004-ல் ஸ்டெர்லைட் ஆலையில் விக்னேஷ் எலக்ட்ரிக்கல்ஸும் வேலை செய்கிறது என்ற நிலையில் தொடங்கி, குறுகிய காலத்திற்குள் விக்னேஷ் எலக்ட்ரிக்கல்ஸ் தான் செய்கிறது என்ற நிலைக்கு நிறுவனத்தை வளர்த்தெடுத்தார். ஒருகட்டத்தில் Material Supplying, Testing and Commissioning என்று ஒட்டுமொத்த ஸ்டெர்லைட் ஆலையின் ஏகோபித்த ஒப்பந்ததாரராக தன் வெற்றிக்கொடியை நிலைநாட்டினார்.
ஸ்டெர்லைட் தவிர விவி டைட்டானியம், ஸ்பிக் லிமிடெட், தூத்துக்குடி துறைமுகம் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களிலும் தடம்பதித்தவர், Coastal Energies Pvt Ltd என்ற நிறுவனத்திற்காக அனல் மின்நிலையங்களை (Thermal Power Plant) உருவாக்கிக்கொடுத்து, மின்சார உற்பத்தி மற்றும் பராமரிப்புபணிகளை மேற்கொண்டுவருகிறது இவரது நிறுவனம். தென்மண்டலத்தில், மின்சார உற்பத்தி ஆலைகளுக்கு தேவையான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள (அதாவது மின் உற்பத்தி ஆலைகளுக்கு, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதிலிருந்து (Detailed Project Report), ஆலைக்கான இடம் தேர்வு செய்வது, அரசின் ஒப்புதல் பெறுவது என, உற்பத்தியாகும் மின்சாரத்தை விற்பனை செய்வதுவரை) அரசின் அங்கீகாரம் பெற்றுள்ள தகுதிவாய்ந்த நிறுவனங்கள் ஒருசிலவற்றில், முதலிடத்தில் இருப்பது வலசை.திரு.கண்ணன் அவர்களின் ISO தரச்சான்று பெற்றுள்ள விக்னேஷ் எலக்ட்ரிக்கல்ஸ் என்பது நமது சமுதாயத்திற்கு பெருமை சேர்க்கக்கூடியதாகும்.
விக்னேஷ் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்திற்கு, மேலும் பெருமை சேர்க்கும் வகையில், சமீபத்தில், மத்திய அரசின் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான NLC யும் தமிழக அரசும் இணைந்து நடத்தும் கூட்டு நிறுவனமான NTPL க்காக 1000 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையத்தின் இயக்குதல்-பராமரித்தல் (Operation-Maintenance) பணிக்கான உலகம் தழுவிய டெண்டரில் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடியுள்ளார். இதுமட்டுமல்லாது, SPEC நிறுவனத்திற்காக 525 மெகாவாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரு.கண்ணன் அவர்களின் வெற்றிகள் எல்லாம் போகிற போக்கில் நடந்துவிடக்கூடியது அல்ல, என்பதை இன்றைய இளைஞர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது மிக முக்கியமானதாகும். மின்னுற்பத்தி துறையில், இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் உள்ள மிகப்பெரிய நிறுவனங்கள் மட்டுமே, இப்பணிக்காண ஒப்பந்தப் புள்ளிகளில் பங்கு பெற முடியும், உலகளாவிய போட்டியும், மிகப் பெரிய பாராசூரக் கம்பெனிகளும், சர்வதேச புரோக்கர்களும், உள்ளூர் அரசியல்வாதியிலிருந்து-உயர்மட்ட அதிகாரவர்க்கம் வரையிலான தலையீடுகளும், இப்போட்டியில் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இது போன்ற டெண்டர்களில் வெற்றி பெற வேண்டுமானால், கம்பெனியின் தரம், அனுபவம், நம்பகத்தன்மை, பொருளாதார வலிமை (தாங்கும் சக்தி), போன்றவை கவனத்தில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைக்கு தமிழ்நாட்டின் முதல் பத்து இடங்களின் வரிசையில் விக்னேஷ் எலக்ட்ரிக்கல்ஸ் இடம் பெற்று இருப்பது நமக்கு பெருமையான செய்தியாகும்.
திரு.கண்ணன் அவர்களின் கடின உழைப்பும், சிறந்த மதிநுட்பமுமே, அவரது நிறுவனத்தை சர்வதேச அளவில் தரம் உயர்த்தி இருக்கிறது. அந்த வகையில் தொழில்துறையில் சிறந்து விளங்கும் திரு.கண்ணன் அவர்கள், நமது சமுதாயத்தில் தொழில் ரீதியாக வெற்றி பெற்ற மனிதர் என்கிற பெருமையை அடைகிறார்.
திரு.கண்ணன் அவர்கள் தொழில்துறையில் கவனம் செலுத்துவது போல், சிறந்த சமுதாயப்பற்றாளராகவும் விளங்குகிறார், தனது விக்னேஷ் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தின் வேலைவாய்ப்பில், சமுதாய இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார். கடும் உழைப்பாளிகளாக மாற்று சமுதாயத்தினரின் நன்மதிப்பைப் பெற்றும் நம்மவர்கள், நமது சமுதாயத்தினரின் நிறுவனங்களில் அர்ப்பணிப்புடனும், முழுஈடுபாட்டுடனும் பணியாற்றுவதில்லை என்ற கசப்பான அனுபவங்களை பலதரப்பிலும் சொல்லப்படும் நிலையிலும், அதையெல்லாம் பொருட்படுத்தாது ஆர்வமுள்ள, திறமையுள்ள இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கத் தவறுவதில்லை. சிறந்த விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற திரு.கண்ணன் குடும்பத்தினர், தங்கள் சொந்த கிராமத்திலிருந்து தூத்துக்குடிக்கு இடம்பெயர்ந்துவிட்ட நிலையிலும், சொந்தங்களின் விருப்பத்திற்கிணங்க உள்ளூர் கோவிலை முன்மண்டபம் அமைத்து விரிவு படுத்தவும், திருவிழாக் காலங்களில் அன்னதானம், மாவீரன் பிறந்தநாளில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கியும் மகிழ்கின்றனர்.
த.வீ.க பண்பாட்டுக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்று சிறப்புடன் செயலாற்றி வருகிறார். மேலும் ,பல்வேறு சமுதாய அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, அவர்கள் நடத்தும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருங்கால சமுதாயத்திற்கு அறிவுரை வழங்கிடவும் தவறுவதில்லை. தவிர, பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலையத்தில் நடைபெறும் விழாக்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார் திரு.கண்ணன்.
பல்வேறு வேலைப்பளுவிற்கு மத்தியிலும் நீண்ட தூரம் பயணித்து சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாயம் நடத்தும் விழாக்களில் கலந்துகொள்பவர், அச்சங்கத்தின் கட்டுமானப்பணிகள் பொருளாதார ரீதியாக தடுமாறி தத்தளித்தபொழுது, மனமுவந்து உதவிய ஈகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இளம்வயதில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தி வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வரும் வலசை திரு.கண்ணன் அவர்களின் ஒவ்வொரு வெற்றியும் சமுதாயத்தின் வெற்றியாக பார்க்கப்படும், அவர் மேலும், மேலும் வெற்றியடைய வேண்டுமாய் வாழ்த்தி, சமுதாயத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டுகிறோம்.