🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உழைப்பால் உயர்ந்த உத்தமர் - தொழிலதிபர் - பெருந்துறை.திரு.P.பழனிச்சாமி.

திரு.P.பழனிச்சாமி அவர்கள் 17.12.1978-ல் ஈரோடு மாவட்டம், பெருந்துறை  அருகேயுள்ள சீனபுரம் கிராமத்தில் திரு.பழனிச்சாமி-திருமதி.மாரக்காள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார்.  மேல்நிலைப்பள்ளி இறுதியாண்டுடன் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தவர், நேரடியாக தொழில் துறையில் கால்பதித்தார். இவருக்கு திருமணமாகி திருமதி.P.அருணா என்ற மனைவியும் P.சவிஷ்னா என்ற மகளும் P.அபிஷேக் என்ற மகனும் உள்ளனர்.


சாதிக்க நினைப்பவர்களுக்கு கல்வித்தகுதி  ஒரு தடையல்ல என்று நிரூபித்தவர் திரு.பழனிச்சாமி அவர்கள். தன் உழைப்பின் மீது நம்பிக்கைகொண்டு தொழில்துறையில் களம்கண்டவர், தன் தமையன் திரு.P.கண்ணுசாமி அவர்களுடன் இணைந்து, தன் தந்தையார் நடத்திவந்த தேங்காய் பருப்பு உடைக்கும் தொழிலை விரிவு படுத்தினார். இராமனுக்கு ஒரு லட்சுமணன் போல் கண்ணுச்சாமிக்கு ஒரு பழனிச்சாமி என்று மெச்சத்தக்கவகையில் தங்கள் தொழிலில் நிதானமாக, அதேசமயத்தில் வலுவாக காலூன்ற அடித்தளமாக விளங்கினார். தன் தமையன் திட்டமிட்டால் அதை நடைமுறைப்படுத்தி, வெற்றிகரமாக மாற்றிக்காட்டும் வித்தை தெரிந்தவர் திரு.பழனிச்சாமி.  நமது சமுதாயத்தில் தொழில் செய்பவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல், நாம் முற்றிலும் விவசாயம் சார்ந்த சமூகம் என்பதே. தொழில்துறை நமக்கு முற்றிலும் புதியது, அதில் தடம் பதிக்கும் முதல்தலைமுறை இதுதான். இந்நிலையில் தொழில்துறையில் சாதித்த முன்னோடிகள் ஆலோசனை கேட்கக்கூட கண்முன் யாருமற்ற நிலையில், தொழில்துறையில் களம்காணுவது கத்திமேல் நடப்பதற்கு சமம். இவர்கள் தேர்ந்தெடுத்த இத்துறைக்கு கடின உழைப்பு மட்டுமல்ல, தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களுக்கு செல்லவேண்டியிருப்பதும், இங்கு தயாரிக்கப்பட்ட தேங்காய் பருப்புகளை நாடுமுழுவதும் சப்ளை செய்வதற்கும் பலமொழி அறிவும், தொழில் நுணுக்கங்களும் அவசியம் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. அந்த சவாலை ஏற்றுக்கொண்டு தனது நாற்பதாவது வயதிற்குள் வெற்றிகரமான தொழிலதிபராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளார்.


திரு.பழனிச்சாமி அவர்கள் தனது தமையனுடன் இணைந்து ஸ்ரீ மகாலட்சுமி  ஆயில் இண்டஸ்ட்ரீஸ், ஸ்ரீ மகாலட்சுமி ரிஃபைனரீஸ். ஸ்ரீ மகாலட்சுமி டிரேடர்ஸ், ஸ்ரீ மகாலட்சுமி டிரான்ஸ்போர்ட், ஸ்ரீ மகாலட்சுமி ஏஜென்சீஸ் என பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆலை நிர்வாகம், மோட்டார் வாகனத்துறையை கையாள்வதில் அனுபவம், பொருட்கள் வரத்து-சப்ளை தொடர்பில் கவனம், ஆபீஸ் நிர்வாகம், கலால்வரி சுங்கவரி, ஜிஎஸ்டி, ஆடிட்டிங், மார்க்கெட்டிங்க், தனசரி மார்க்கெட் நிலவரம், சப்ளை-டிமாண்ட் போன்ற பல்வேறு விசயங்களில் ஆழ்ந்த ஞானமுடைய திரு.பழனிச்சாமி அவர்களின் வெற்றியை, நமது சமுதாயத்தை சேர்ந்த ஒவ்வொரு இளைஞர்களும் தெரிந்துகொள்ள வேண்டியது  அவசியம். கடுமையாக உழைக்க முன்வருபவர்களுக்கு வெற்றியின் வாசல் என்றுமே வரவேற்க காத்திருக்கும் என்பதற்கு இவரின் வாழ்க்கை ஒரு சிறந்த  உதாரணமாகும்.

திரு.கண்ணுசாமி அவர்களின் தொழிலில் மட்டுமல்ல, அவரின் சமுதாயப்பணிக்கும் உற்றதோழனாக இருந்து ஆதரிப்பவர் திரு.பழனிசாமி அவர்கள். வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாவண்ணம் உதவிகள் செய்வதில் தன் அண்ணனுக்கு சற்றும் சளைத்தவரல்ல. இளம்வயதில் வெற்றிகரமான தொழிலதிபராக வலம்வரும் திரு.பழனிச்சாமி அவர்கள் மேலும் பல தொழில்களில் தடம்பத்திது பெற்றிபெற்று சமுதாயத்தை பெருமைகொள்ளச்செய்ய வேண்டுமாய் அன்புடன் வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved