🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இராஜ கம்பளத்தாரில் ஒரு அண்ணாமலை - தொழிலதிபர்.திரு.M.மாதையன்

திரு.M.மாது (எ) மாதையன் அவர்கள் 30.03.1965-இல், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம், நாமக்கல் தாலூகா, தானத்தம்பட்டி கிராமத்தில் திரு.முத்துசாமி – திருமதி.பொம்மாயி அம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். பால் மனம் மாறாத தனது 8-ஆவது வயதில் தாயாரை இழந்த திரு.மாதையன் அவர்கள், தன் பாட்டனார் திரு.குப்ப நாயக்கர், பாட்டி திருமதி.நாகம்மாள் ஆகியோரின் அன்பிலும், அரவணைப்பிலும் வளர்ந்தார். தொடக்கப்பள்ளி வரை மட்டுமே பயின்றவர், தந்தையாருக்கு உதவியாக விவசாயப்பணியில் ஈடுபட்டார். இவருக்கு திருமணமாகி திருமதி.M.இராஜேஸ்வரி என்ற மனைவியும் திரு.M.பிரபு.B.E. மற்றும் M.சதீஷ்.B.E, என்ற இரு மகன்களும் உள்ளனர்.


விவசாயம் தவிர பத்துக்கும் மேற்பட்ட கறவை மாடுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளையும் தன் தோட்டத்தில் வளர்த்து வந்தார் திரு.குப்ப நாயக்கர். 1980-களில் ஏற்பட்ட கடும் வறட்சியால் சரியான தீவனமின்றி கால்நடைகள் தத்தளிக்க, மறுபுறம் கோழிகளைத் நோய்தாக்கி அழித்தது. இந்த இருமுனைத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திரு.குப்ப நாயக்கர் குடும்பம் தத்தளித்தது. அதுவரை வறுமையின் வாசத்தைக்கூட அறியாதவர்களுக்கு, வறுமை வாயிற்படியேறி வாசல் கதவைத் தட்டியது தான் கொடுமை. பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடிக்கும், மனஉளைச்சலுக்கும் ஆளானது திரு.குப்ப நாயக்கர் குடும்பம். துன்பம் வருகையில் அதனுடன் ஒட்டிவருவது அவமானமும் சேர்த்துதானே? உயிரை விட மானமே பெரிதென வாழ்ந்தவர்கள் கம்பளத்தார்களென வரலாறு முழுக்கப்பார்க்கலாம். திரு.குப்ப நாயக்கரை நேரடியாக வெல்ல முடியாத இயற்கை, முதலில் அவருக்கு பாதுகாப்பாயிருந்த கால்நடைகளையும், கோழிகளையும் பறித்த பின்னர், மனவேதனையிலிருந்த திரு.குப்ப நாயக்கர்-திருமதி.நாகம்மாள் தம்பதியினரையும் விரைவில் பறித்துக்கொண்டது. அவர்களின் அடுத்தடுத்த மரணத்தால் சிறகொடிந்த பறவையானர் மாதையன்.

மாடு மேய்த்துக்கொண்டும்,கோழிகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டுமிருந்த மாதையன் அப்பொழுது பதினைந்து, பதினாறு வயதே கடந்திருந்தார். முதலெட்டில் பாலூட்டி வளர்த்த அன்னையில்லை,இரண்டாம் எட்டில் தோளில் சுமந்த தாத்தாவுமில்லை, தாய் மடியாயிருந்த பாட்டியுமில்லை. சோகம் சூழ்ந்த இருளில் மாதையனுக்கு விடியலைத் தரும் ஒளியெங்கே? நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளெங்கே? கடந்துபோக பாதைகள் எங்கே?. தாய்-தகப்பன் வளர்த்த பிள்ளைகளே தறிகெட்டு, சந்தி சிரித்துக்கிடக்கையில், தாத்தா-பாட்டி வளர்த்த பையன் எப்படி இருப்பான்?. அன்றைய தேதியியில், சேலம் மாவட்டத்தில் மாதையன் வயதையொட்டிய இளைஞர்கள் கள்ளச்சாரம் காய்ச்சுவதிலும், கோழி குண்டு, சூதாட்டங்களிலும் பொழுதைப்போக்கிக் கொண்டிருக்கையில், தாயில்லாப்பிள்ளையை புகைபிடிக்கும் பழக்கம் கூட அண்டவிடாத அளவில் பெயரனை நல்லொழுக்கத்துடனும், நற்பண்புடனும் வளர்ந்திருந்தனர் தாத்தாவும்,பாட்டியும். துயரங்கள் சூழ்ந்தபொழுதும், ஆறுதல் படுத்திக்கொள்ள ஆளில்லாமல் போனபொழுதும், வேதனைகள் நெஞ்சை வாட்டியபொழுதும், சகவயதினருடன் சேர்ந்து மனதை தேற்றிக்கொள்ள போதை வஸ்துக்களை நாடாமல், சுய ஒழுக்கத்தில் சுடர் விட்டொளிந்தார் திரு.மாதையன். தாத்தா-பாட்டி மண்ணை விட்டு மறைந்த போதிலும் தன் பெயரனுக்கு ஒழுக்கம் என்ற ஒளியினை ஏற்றித்தான் சென்றிருந்தனர். மெத்தப்படித்தவனல்ல, மாடு மேய்க்கும் சிறுவன் தான், தீய பழக்கங்கள் சீக்கிரமே சிம்மாசனம் போட்டிருக்கும். ஆனால் ஒழுக்கம் எனும் ஒளிவெள்ளம் முன் அவை என்ன செய்திட முடியும்?. அதுவே மாதையனுக்கு இருளை நீக்கி, பாதையைக் காட்டியது.

ஐந்தாம் வகுப்புக்கூட தாண்டாத பையனுக்கு என்ன பெரிய ஆபீசர் வேலையா கிடைத்து விடப்போகிறது? புதிய வாய்ப்புகளைத்தேடிய மாதையன் முன் தேர்ந்தெடுக்க இருந்த வாய்ப்புகள் ஒருசில மட்டுமே. தொழில்துறை வளராத 1980-களின் துவக்கத்தில், தொழில் வாடையே அறிந்திராத சமுதாயத்தில், அதிகபட்சம் விவசாயக்கூலியாகவோ அல்லது ஒர்ஷாப் வேலைக்கோ செல்லலாம் அவ்வளவே. மழை மறைவுப்பிரதேசமான நாமக்கல்லில், விவசாயப்பணிக்கு சென்றால் ஆண்டு முழுவதும் வேலை இருக்காது என்பதால், 1983-ல் முரட்டு இளைஞனாக வளர்ந்திருந்த மாதையன், பால் எடுக்கும் ஒருவரிடம் தினக்கூலியாகச் சேர்ந்தார். தினமும் 5 ரூபாய் கூலி, பாலெடுக்கும் பணியில் விடுமுறைக்கே வாய்ப்பில்லை என்பதால் எப்படியும் மாதம் 150 ரூபாய் கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அத்தொழிலை தேர்ந்தெடுத்தார். 1983-இல் தேசிய நெடுஞ்சாலைகள் கிடையாது, தார் சாலைகள் கிடையாது, தெருவிளக்குகள் கிடையாது, டைனமோ வைத்த சைக்கிள் கிடையாது, கறவை மாடுகள் அதிகம் கிடையாது, இதிலெல்லாம் உச்சமாக பால் எடுக்க கேன்கள் கூட கிடையாது, பித்தளை குடங்கள் மட்டுமே. ஆனால் குடும்ப வறுமை, கடன் சுமை, குடும்பத்தைத் தூக்கிநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த மாதையனுக்கு, இந்த தடைகளெல்லாம் ஒரு பொருட்டாகவே இல்லை. வேலையில் சேர்ந்தாகிவிட்டது, ஒரு சைக்கிளுடன், பித்தளைக்குடங்களையும், மண்ணெண்ணை (அரிக்கேன்) விளக்கையும் திரு.மாதையனிடம் கொடுத்த முதலாளி, பால் எடுக்க வேண்டிய தோட்டங்கள் பட்டியலில் 25-30 எருமைகளையும் ஒதுக்கியிருந்தார். 

முதலிரண்டு எட்டுகளில் இழந்தது அதிகம். மூன்றாம் எட்டின் துவக்கத்தில், ஒரு முன்னிரவு 11 மணிக்குத் துவங்கியது மாதையனின் புதிய பயணம். அரிக்கேண் விளக்கின் ஓளியில் ஒழிந்துகொண்டு வழிகாட்டினர் தாத்தாவும்-பாட்டியும். அப்பொழுது தெரியாது இந்தப் பயணமும்,பாதையும் தன்னை எங்கே கொண்டு சென்று நிறுத்துமென்று!. மாறாக குடும்பத்தின் கடன்சுமையை கனவில் சுமந்தபடி மிதிவண்டியை மிதிக்கலானார். முன்னிரவின் தொடக்கத்தில் முதல் தோட்டத்தை வந்தடைந்த பால்காரரின் முரட்டுக் கரத்தின் அழுத்தத்தில் ஒலிப்பான் ஒலிற, புதிய ஓசையை புரிந்துகொண்டு, விவசாயிக்கு முன் விழித்துக்கொண்டு பதில் ஓசை எழுப்பி வரவேற்றது கன்றுக்குட்டி. ஆம், பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல், பசியோடு இருக்கும் கன்றுக்குட்டிக்குத் தெரியாதா? இந்த பால்காரரின் பசி. அலுமினியப் பாத்திரத்தோடு அருகே செல்ல, எழுந்து நின்று வரவேற்றது எமதர்மராஜனின் வாகனம் எருமைமாடு. முரட்டு இளைஞனின் கரங்கள் கன்றுக்குட்டியை வருடியபொழுது, அவன் கால்களை நாக்கால் எச்சில் செய்து பாசத்தைக்கட்டியது கன்றுக்குட்டி. எட்டி விடும் தூரம் தான், ஆனால் ஓடிச்சென்று தாய் மடிபுகுவது கன்றுகளின் இயல்பு. அது தனி அழகு. கன்றுக்குட்டியின் துள்ளலை பால்காரர் ரசித்தபடி இருக்க, கன்றின் முட்டலில் துள்ளலை அறிந்தது தாய் எருமை. கன்றுக்குட்டியை ரொம்ப நேரம் பால் குடிக்க விட்டா, எதை உனக்கு ஊத்துறது என்று எரிச்சலோடு பின்னாலிருந்து சொல்லிக்கொண்டே அருகில் வந்தார் குடியானவன். ஓ, தம்பி புதுசா?.. கன்றுக்கு பாலை அளவாவிடு தம்பி என்றவருக்கு, குடிக்கட்டும்ணே… என்றார் பால்காரர். குடியானவனுக்கு கோபம் தான், சரி முதலில் பாலைக் கறக்கட்டும் என்று அமைதிகொண்டார். எப்பொழுதும் கறவையின்போது சேரும் சகதியுமாக உள்ள இடத்தில் நின்று கொள்ளும் எருமை, இன்று பால்காரர் அமர வசதியான இடம் கொடுத்து நின்றது. பாத்திரத்திலுள்ள தண்ணீரைக் காம்புகளில் பீச்சியடிதபின், சுரந்து நின்ற கம்புகளை சுத்தப்படுத்த, வருடிய இளைஞனின் கரங்களின் ஸ்பரிசத்தில் சேயின் துள்ளலின் காரணத்தை உணர்ந்தது தாய்ப்பசு(எருமை). முதல் இழுப்பில் எருமை மாட்டுக் காம்புகளின் முரட்டுத்தனத்தை உணர்ந்துகொண்டார் பால்காரர். முரட்டு இளைஞனின் ஸ்பரிசத்தில் லயித்த எருமை சற்று நெகிழ்ந்து கொடுக்க,  முன்னிரண்டு காம்புகள் கறந்து முடிந்த நிலையில், பாத்திரத்தை எட்டிப்பார்த்த குடியானவன் கோபம் சற்றே தனிய மெல்ல நகர்ந்துகொண்டார். பின்னிரண்டு காம்புகளில் தொடர்ந்த பால்காரர், கன்றின் மீது கருணை கொண்டு சீக்கிரமே எழுந்துவிட்டார். எப்பொழுதும் கன்றுக்கு பாலை அடக்கிக்கொள்ளும் எருமைக்கு, இன்று அந்த நினவு வரும்முன்னே, கன்று மீண்டும் தாய் மடி புகுந்தது.  பாத்திரத்தை வாங்கிய குடியானவன், என்னப்பா… பாலை சுண்டக் கறந்துட்டபோல, கன்னுக்குட்டிக்கு கொஞ்சம் விட்டுருக்கலாமல்ல என்று கருணை காட்டினார். பாலை அளவு லிட்டரில் ஊற்றிக்கொண்டே ஒரு கை அதிகமாத்தான் கறந்துட்ட போல என்று, தன் கணக்கில் வழக்கத்தைவிட அரை லிட்டர் அதிகமாக குறித்துக்கொண்டு சென்றுவிட்டார் குடியானவன்.


முதல் கறவையை முடித்தவுடன், கனவுகள் (கஷ்டங்கள்) மீண்டும் நினைவுக்குத் திரும்ப, யோசித்தபடியே ஒவ்வொரு தோட்டங்களாக கறவையைத் தொடரத் தொடர, பித்தளைத் தவளைகள் நிறம்பிய வண்ணம் இருந்தது. இப்படி ஒவ்வொரு தவளையாக பால் நிரம்ப நிரம்ப திரு.மாதையனின் மனதில் நிரம்பியிருந்த கவலைகள் கலையத்தொடங்கியது. ஆம், குண்டும் குழியுமான மண் சாலையில், வாய்க்கால் வரப்புகளைத் தாண்டிச் செல்லச்செல்ல, பித்தளைத்தவளையிலுள்ள பால் ததும்பாமல் மிதிவண்டியை செலுத்தவேண்டிய காரணத்தால், நினைவு முழுக்க தவளையிலிருக்க, மனதிலிருந்த கவலைகள் ததும்பி தப்பிச்சென்றது. தனது இறுதி தோட்டத்தை (கறவையை) அதிகாலை நான்கு மணிக்கு முடித்துக்கொண்டு, நாமக்கல்லிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சேலத்தை நோக்கி மிதிவண்டியை செலுத்தலானார் திரு.மாதையன். அங்கு தான் பால் கொள்முதல் நிலையம் இருந்தது. அதிகாலை 4 மணிக்கு நாமக்கல்லில் துவங்கிய பயணம் குண்டும் குழியுமான தார்சாலைகளில் சுமார் 5 மணிநேர தொடர் பயணத்திற்க்குப்பின் காலை 9 மணிக்கு நிறைவு பெற்றது. சேலம் நகரின் தெருவோரக்கடைகளில் காலை டிபனை முடித்துக்கொண்டு, காலை 10 மணி வாக்கில் புறப்பட்டு மதியம் 3 மணிக்கு நாமக்கல்லை அடையும் முன், மாலை நேரக்கறவைக்கு செல்லும் மாற்று நண்பரிடம் சைக்கிளைக் கொடுக்க வேண்டும். சிறிது ஓய்வு பால்காரருக்குத்தானே தவிர மிதிவண்டிக்கு கிடையாது. மதியம் சில நேரம் தந்தையும், சிலவேளைகளில் தானே சமைத்துண்ட பின், மாலை 4 மணிக்கு உறங்கச் செல்லும் முன், இரவு 9 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளத்தான் வேண்டும். ஆம், சரியான நேரத்திற்கு எழுப்ப வீட்டில் ஆளில்லை, அலாரமில்லை, சிணுங்கி எழுப்பிடும் செல்போன் இல்லை, சுயநினைவு தான் எழுப்ப வேண்டும். எப்படி முடியும்? 25-க்கும் மேற்பட்ட எருமை மாடுகளில் பால் கறந்து, 100-கிமீ தூரம், 10 மணிநேரம் மிதிவண்டி ஓட்டியவனுக்கு நான்கு மணிநேர உறக்கம் போதுமா? உறங்கும் வேளையில் உறங்காப்புலி ஒன்று உள்ளுக்குள்  இருந்தால் மட்டுமே சாத்தியம். உறங்காப்பிலியாக கடன் இருந்து கடையாற்ற, அதிகபட்சம் 4 முதல் 5 மணி நேர உறக்கத்திற்குப்பின், மீண்டும் பணிக்குச் செல்ல சைக்கிள் (மிதிவண்டி) வந்ததும், அடுத்த சைக்கிள் (சுழற்ச்சி) தொடங்கும். 

ஆனால்,பால்காரரின் சிறந்த ஒழுக்கத்தையும், கடின உழைப்பையும் யார் கவனித்தார்களோ இல்லையோ புல்லப்பநாயக்கனூர் சின்னுசாமி அவர்கள் கவனித்துக்கொண்டே தான் இருந்தார். ஏனென்றால் அவரின் செல்லமகள் இராஜேஷ்வரி அப்பொழுது தான் பூப்பெய்திருந்தார். வழக்கமாக பெற்றோர்கள் மகளுக்கு படித்த மாப்பிள்ளை, பணக்கார மாப்பிள்ளை பார்க்கையில், சின்னுசாமி மட்டும் உழைக்கும் மாப்பிள்ளையை மகளுக்குப் பார்த்தார். வீட்டுக்கு விளக்கேத்த ஆள் வேண்டாமா? என்ற உறவுகள் சொல்லத்தானே செய்யும். ஒத்தை மகனை வைத்துக்கொண்டு, ஒத்தையில் வாழும் முத்துசாமி அவர்களுக்கு ஒப்புக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை. மகன் படும் வேதனையை தினம் தினம் பார்ப்பவர் இல்லையா? ஒருவேளை சாப்பாடாவது மகன் மாதையன் ஒழுங்காக சாப்பிடட்டுமே என்று தானே அவர் நினைத்திருக்க முடியும். ஒருவேளை கஞ்சி, காப்பித் தண்ணியாவது தகப்பனுக்கு நல்ல முறையில் கிடைக்கட்டுமே என்று தானே மாதையனும் சம்மதித்திருக்க முடியும். இப்படித்தான், எதிர்கால திட்டங்கள் திட்டமிடப்படாத நிலையிலேயே, மாதையனுக்கு 19-ஆவது வயதில் 1984-இல் திருமணம் செய்துவைக்கப்பட்டது.


நான்கு மணி நேரமே துங்குவதற்கு காலாவகாசம் இருக்கையில், எதிர்காலத்திட்டம் பற்றி சிந்திக்க மாதையனுக்கு வேண்டுமானால் நேரமில்லாமல் இருக்கலாம், ஆனால் ஆணிருவர் வாழும் வீட்டில், இருண்டுபோன வாழ்வில் ஒளிவிளக்கேற்ற வந்தவருக்கு திட்டம் இருக்கத்தான் செய்தது. அப்பொழுதெல்லாம் என்ன செல்போனா இருந்தது? கணவரைப்பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள. ஆனால் அந்த இளம் வயதிலும் தன் பொறுப்புகளை நன்றாகவே உணர்ந்திருந்தார் திருமதி.இராஜேஷ்வரி. ஆம், இவர்கள் வேண்டுமானால் கஞ்சிக்கும்,காப்பித்தண்ணிக்கும் கல்யாணம் செய்து வைத்திருக்கலாம்.  ஒருபுறம் இளம் வயதிலேயே தாயை இழந்த கணவன், மறுபுறம் இளம் வயதிலேயே மனைவியை இழந்து காடு-கரை, மாடு-கன்றைத் தவிர ஏதுவும் தெரியாத மாமனார். தந்தையும், மகனும் ஏங்குவது அன்புக்காக மட்டும்தான். இந்த பதினைந்து வயதுக்காரிக்கு எத்தனை பாத்திரம் தான் போங்கள். கணவருக்கு தாரமாக இருந்து தாயாக வழிநடத்தினார். மகள் இல்லாத மாமனாரின் குறையை மருமகளாயிருந்து போக்கினார் இராஜலட்சுமி. தந்தையும் மகனுக்கும் இது மட்டுமே போதுமானதாக இருந்தது. ஆனால் திருமதி.இராஜேஷ்வரியைப் பொறுத்தவரையில், அவர்களிருவரின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்திருந்தார் அவ்வளவே. இதுமட்டுமே குடும்பத்திற்கு போதாதல்லவா? கணவரின் வாழ்வில் இருளை நீக்கி ஒளியை ஏற்ற வேண்டுமல்லவா? அதற்கான திட்டங்களும் இந்த படிக்காத மேதையிடம் இல்லாமல் இல்லை. 

பாட்டியின் சொல்லுக்கே மறுப்பு சொல்லாதவர், தாரத்தின் சொல்லுக்கா மறுப்பு சொல்லப்போகிறார்? திருமணம் முடிந்த கையோடு மிதிவண்டியையும், பித்தளை குடங்களையும் சொந்தமாக வாங்கி, அதே தொழிலை கணவருக்கு சொந்தமாக்கிக் கொடுத்தவர், சேலம் சென்று விநியோகம் செய்யாமல், சுற்றியுள்ள கிராமங்களிலுள்ள தேநீர் கடைகளுக்கும், ஹோட்டல்களுக்கும் விற்பனை வாய்ப்பை ஏற்படுத்தி தந்தார். அதாவது மாதையனைப் பொருத்த அளவில் அதே தொழிலைத் தொடர்ந்தார், முதலாளி மட்டும் மாறி இருந்தார் அவ்வளவே. திருமதி.இராஜேஷ்வரி அவர்களின் தந்தையார் எப்படி திரு.மாதையனின் ஒழுக்கத்தையும், உழைப்யையும் பார்த்தாரோ, அதேபோல் திருமதி.இராஜேஷ்வரியும் கணவரின் ஒழுக்கம், உழைப்புடன் , நேர்மையையும் கண்டுகொண்டார். தன் கணவர் தொழிலில் கடைபிடித்த நேர்மையை சந்தைப்படுத்த திட்டம் வகுத்தார். மாதையன் வழங்கிய தரமான பால் தங்களுக்கு அதிக லாபத்தைக் கொடுத்தபடியால்,உள்ளூரில் பால்விற்பனை சூடிபிடித்தது. தகவல் தொடர்பு வசதியில்லாத அந்தக்காலத்தில் பால்காரர் வீடு தேடிச்சென்று தான் ஆர்டர் கொடுக்க வேண்டியிருந்தது. இதன் மூலம் திருமதி.இராஜேஷ்வரி அவர்களுக்கு புதிய அறிமுகமும், பாலின் தேவையையும் அறிந்துகொள்ள முடிந்தது. ஒருசில மாதங்களிலேயே பால் எடுக்க சம்பளத்திற்கு ஆட்களை பணியமர்த்தி, புதிய வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்தார் திருமதி.இராஜேஷ்வரி. முதலில் ஒன்று, இரண்டு எனத் தொடங்கி, பின்னர் 15-20 பேர் வரை பணிக்கு அமர்த்தியவர், பால்காரக் கணவருக்கு பதவிஉயர்வு அளித்து மார்க்கெட்டிங் மேனேஜர் ஆக்கினார். விவசாயிகளுக்கு கறவை மாடு வாங்க முன்பணம் கொடுப்பது, புதிய கறவை மாடுகளையும், சந்தை வாய்ப்புகளையும் அடையாளம் காணுவது என மார்க்கெட்டிங் துறையை கணவருக்கு அறிமுகம் செய்துவித்தார். ஒருபுறம் விற்பனை வளர வளர, நிர்வாகத்திறனையும் சேர்த்தே வளர்த்திக்கொண்டார் திருமதி.இராஜேஷ்வரி அவர்கள். ஒரு கட்டத்தில் நாமக்கல் அருகே புதன்சந்தை சுற்றுப்பகுதியிலுள்ள கடைகள் முழுவதற்கும் சப்ளை செய்தவர், மீதி பாலை நீல்கிரீஸ் நிறுவனம் பெற்றுக்கொண்டது. மூன்றாம் எட்டின் துவக்கத்தில் அரிக்கேண் விளக்கில் ஏற்றிய ஒளியை, அது முடியும் தருவயில் ஒளிவெள்ளமாய் மாற்றியிருந்தார் திருமதி.இராஜேஷ்வரி.


நான்காம் எட்டிலிருந்து திரு.மாதையனின் முழுவாழ்வும், வளமும் திருமதி.இராஜேஷ்வரியின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. நான்காம் எட்டின் துவக்கம் 1988-89, ஒரு அதிகாலைப்பொழுதில் விலையுயர்ந்த கார் ஒன்று தன் வீட்டின் முன் வந்து நின்றதை மாதையன் தம்பதியினர் ஆச்சர்யத்துடன் எட்டிப்பார்த்தனர். காரில் இருந்து இறங்கி வந்தவரை வரவேற்ற தம்பதியினரிடம், ஆரோக்கியா பால் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் என்று சுயஅறிமுகம் செய்து திரு.மாதையன் தம்பதியினருக்கு அதிர்ச்சி அளித்தார். திரு.மாதையனின் நேர்மையும், ஒழுக்கமும், உழைப்பும் போய்ச்சேரவேண்டியவர்களின் காதுகளுக்கு சென்றுகொண்டேயிருந்ததை, ஆரோக்கியா நிறுவனதின் உரிமையாளரின் பேச்சில் உறுதியானது. தங்கள் வீடுதேடி வந்து, தன் நிறுவனத்திற்கு கண்டிப்பாக பால் அனுப்ப வேண்டும் என்ற வேண்டியவரை வெறும் கையுடன் அனுப்ப மனமில்லாத  தம்பதியினர், விரைவில் நல்ல முடிவை தெரிவிப்பதாக நம்பிக்கை அளித்து வழி அனுப்பி வைத்தனர். வெறும் வார்த்தைகளுடன் நின்றுவிடாமல் அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்ட தம்பதியினர், ஒருசில வாரங்களுக்குள் 2000-லிட்டர் பாலை ஆரோக்கியா நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர். இதோடு நில்லாமல், தாங்கள் மட்டும் பிழைக்க வேண்டுமென நினைக்காமல், உடனிருந்த 15-20 பால்கார நண்பர்களுக்கும் ஆரோக்கியா நிறுவனத்தில் வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்தனர். ஆரோக்கியா நிறுவனத்தில் முதல் எட்டில் போடப்பட்ட மாதையனின் நேர்மை, தரம் எனும் விதை முட்டிக்கொண்டு முளைவிட சுமார் பதினான்கு ஆண்டுகள் ஆனது.


திரு.மாதையன் அவர்களின் நான்காம் எட்டையும் ஐந்தாம் எட்டையும் ஆரோக்கியாவில் அர்பணித்த திருமதி.இராஜேஷ்வரி அவர்களின் நீண்ட பொறுமைக்கும், காத்திருப்புக்கும் உரிய அங்கீகாரமும், பரிசும் காத்திருந்தது. ஐந்தாம் எட்டை கடக்கும் தருவாயில் 2003-ஆம் ஆண்டு இறுதிவாக்கில், மீண்டும் ஆரோக்கியா நிறுவனம் திரு.மாதையன் தம்பதியினரைத் தொடர்பு கொண்டது. ஏதாவது கூடுதலாக பால் சப்ளை செய்யக்கோருவார்கள் என்ற நினைத்தபொழுது, அவர்கள் திட்டம் வேறு மாதிரி இருந்தது. அப்பொழுது ஆரோக்கியா நிறுவனம் வளர்ந்திருந்தது, தன் நிறுவனம் மட்டும் வளர்ந்தால் போதாது, தான் கேட்டபொழுது உதவிய தம்பதிகளும் வளர வேண்டும் என்று நினைத்த ஆரோக்கியா நிறுவனத்தின் உரிமையாளர் திரு.சந்திரமோகன் அவர்கள், பால் எடுத்துச்செல்லும் ஏ.சி.கன்டெய்னர் பொருத்திய டாரஸ் டேங்கர் லாரியை திரு.மாதையன் தம்பதியினர் இயக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரின் எண்ணத்திலும், செய்கையிலும் இருந்த ஆரோக்கியம் தான் நிறுவனத்தின் பெயரிலும் வெளிப்பட்டிருக்கும் போல. டாரஸ் டேங்கர் வாகனத்தின் அன்றைய சந்தை மதிப்பு 7-லட்சம். ஆனால், வாகனப்போக்குவரத்து துறையில் முன் அனுபவம் ஏதுமில்லாததால் அந்த வாய்ப்பை ஏற்கத் தயங்கிய திரு.மாதையன் தம்பதினருக்கு, ஊக்கமளித்து, நம்பிக்கை அளித்தார் குடும்ப நண்பர் திரு.முத்துசாமிக் கவுண்டர் அவர்கள். வாய்ப்பைத் தவறவிடாதே உரிமையுடன் கோபித்துக்கொண்டவர், தேவைப்பட்டால் வாகனத்திற்கு முன்பணமும் தாமே கொடுக்க முன்வந்தார். வழக்கமாக திரு.முத்துசாமிக் கவுண்டரின் வார்த்தைகளை மறுப்பவரல்ல திரு.மாதையன், அனுபவமின்மையாலேயே தயங்கினார். ஆனால் யார் இறுதி முடிவெடுக்க வேண்டிமோ, அவர் தீர்க்கமாக துணிந்து முடிவெடுத்துவிட்டார். திருமதி.இராஜேஷ்வரி அவர்களின் முடிவுக்கு மறுப்பு சொல்ல முடியாத திரு.மாதையன், ஆரோக்கியா நிறுவனத்திடம் சம்மதத்தை தெரிவித்தார்.

ஆரோக்கியாவிடம் சம்மதம் தெரிவித்தாகி விட்டது. அடுத்து உரிய நிதியை ஏற்பாடு செய்யவேண்டுமே. பேலன்ஸ் சீட் இல்லை, பேங்க் வரவு-செலவு பட்டியலை வாங்கியதில்லை,வங்கியில் கடன் வாங்கிய அனுபவமில்லை. ஆனால் சுற்றுவட்டாரங்களில் திரு.மாதையன் தம்பதினர் சேர்த்து வைத்திருந்த நன்மதிப்பை, தொழில் நாணயத்தையும் உத்தரவாதமாக உள்வாங்கிக்கொண்டு, உதவிக்கரம் நீட்டியது சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம்.அந்நிறுவனத்தின் உதவியுடன் TN-28 3137 பதிவு எண்கொண்ட புதிய டாரஸ் டேங்கர் வாகனம் ஒன்றை வாங்கி, 2003-இல் ஆரோக்கியா நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்கத் துவங்கினர் திரு.மாதையன் தம்பதியினர். இந்த வாகனத்தின் வரவு செலவுகளை மட்டும் சிறப்புக்கவனம் செலுத்தி கவனித்திக்கொண்டார் திருமதி.இராஜலட்சுமி அவர்கள்.  ஒருசில மாதங்களிலேயே அதன் போக்கை உணர்ந்து கொண்ட நிலையில், ஆரோக்கிய நிறுவனம் வளர வளர, வாகனத் தேவையும் வளர்ந்து கொண்டே வந்தது. ஓராண்டு பூர்த்தியாகும் முன் ஆரோக்கியா நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு வாகனம் தேவைப்பட, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல, ஒருசில மாதங்களிலேயே திரு.மாதையன் தம்பதியினரின் வாகன சேவையிலும் திருப்தியுற்ற அந்நிறுவனம், அந்த வாய்ப்பையும் அவர்களுக்கே கொடுத்தது. மனைவியின் நேரடி நிர்வாகத்தில் திரு.மாதையனுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருந்த காரணத்தால் திருமதியாரைக் கேட்காமலே ஆரோக்கியா நிறுவனத்திடம் ஓகே சொல்லிவிட்டாலும், அதை மறைத்து புதிய வாகனம் தேவைப்படுவதாக திருமதியாரிடம் சொல்லித்தான் ஒப்புதல் பெற்றார் என்பது இரகசிய தகவல்.


இரண்டாவது வாகனம் வாங்க முடிவு செய்யப்பட்டதும் தனது துணைவியார் என்பதைத் தாண்டி, சாதாரண பால் எடுக்கும் தொழிலாளியாக இருந்த தன்னை, பலருக்கு முதலாளியாக்கி முகவரி கொடுத்த தன் முதலாளியின் பெயரில், அவரை பங்குதாரராகக் கொண்டு “ராஜேஷ் டிரான்ஸ்போர்ட்” என்ற நிறுவனத்தை தொடங்கி ஆரோக்கியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டார் திரு.மாதையன். 2003-இல் வாங்கப்பட்ட கடன் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே, 2006-ஆம் ஆண்டு மூன்றே ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. அதிலிருந்து திரு.மாதையன் வாழ்வில் எட்டுக்கள் ஏற,ஏற “ராஜேஷ் டிரான்ஸ்போர்ட்”டின் வாகனங்களின் எண்ணிக்கையும் ஏறுமுகத்தில் ஏறிக்கொண்டே செல்கிறது. 2010-இல் ஏ.சி. கண்டெய்னர் மற்றும் டேங்கர் லாரிகள எண்ணிக்கை 15 ஆகப் பெருகியிருந்தது. திரு.மாதையனின் ஏழாம் எட்டின் இறுதியில் (2020) தற்பொழுது ராஜேஷ் டிரான்ஸ்போர்ட் வசம், ஏ.சி. கண்டெய்னர் வாகனங்கள் வரிசையில், தலா ரூ. 50 லட்சம் மதிப்புடைய 14 சக்கர வாகனம், தலா ரூ.45 லட்சம் மதிப்புடைய 12 சக்கர வாகனம், தலா ரூ.40 லட்சம் மதிப்புடைய 10 சக்கர வாகனம், டேங்கர் வாகனங்கள் வரிசையில், தலா ரூ.38 லட்சம் மதிப்புடைய 12 சக்கர வாகனம், தலா ரூ.30 லட்சம் மதிப்புடைய 10 சக்கர வாகனம், தலா ரூ.25 லட்சம் மதிப்புடைய 6 சக்கர வாகனம் என 100 க்கும் மேற்பட்ட வாகனங்கள், இந்தியா முழுவதிலுமுள்ள மிகப்பிரபலமான பல்வேறு பால்நிறுவனங்களில் ஓடிக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எத்தனை வாகனம் வந்தபொழுதும் வாழ்வளித்த TN-28 3137 வாகனம் தான் இத்தம்பதினருக்கு ஸ்பெசல். அதற்கேற்றாற்போல் 17-ஆண்டுகள் கடந்தும் அதே புதிய பொழிவுடன் இன்றுவரை இயங்கிக்கொண்டுள்ளது அந்த டேங்கர் லாரி என்பது சிறப்பம்சம்.

இதில் திரு.மாதையன் தம்பதினரின் சிறப்பம்சம் என்னவென்றால், தான் மட்டுமே வளராமல், தன்னை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நண்பர்களுக்கு வழிகாட்டியாக இருந்து, அவர்களுக்கு வங்கிகளில் நிதியுதவி பெற்றுத்தந்து டேங்கர், கண்டெய்னர் லாரி உரிமையாளர்களாக்கி, அவர்களின் வாகனங்களுக்கும் அந்நிறுவனங்ககளில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுத்து தொழிலதிபர்கள் ஆக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி கூட்டாக வளர்வதின் மூலம் 500-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுனர்களும், கிளீனர்களும் பயன்பெறுவது போக, கண்டெய்னர், டேங்கர், பாடி கட்டும் நிறுவனங்கள், லாரி ஒர்க்ஷாப்கள், பஞ்சர் கடைகள், டயர் கடைகள், வாகன உதிரிப்பாகங்கள் விற்பனையாளர்கள், வங்கிகள், ஹோட்டல்கள் என ஒரு மினி நகரமே உருவாகி, பல்லாயிரக்கணக்கானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெற அடித்தளமாக இருந்தது, திரு.மாதையன் அவர்களின் கடின உழைப்பு, கடைபிடித்த ஒழுக்கமும்,நேர்மையும், திருமதி.இராஜேஷ்வரி அவர்களின் துணிச்சலான முடிவும், நம்பிக்கையும் என்றால் மிகையல்ல.


இது தவிர, சொந்த நிலத்தில் விவசாயப்பணிகளிலும் கவனம் செலுத்தும் தம்பதியினர், தென்னை வளர்ப்பு, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு பயிரிடுவதில் அதிக ஆர்வமிக்கவர்கள். எத்தனை பணிகள் இருந்தாலும், தோட்டத்திற்கு தினமொரு முறையாவது செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாமக்கல் அருகேவுள்ள காமராஜர் பள்ளியிலும், காமராஜர் கல்வியியல் கல்லூரியில் இயக்குநராகவும் உள்ளார் திரு.மாதையன் அவர்கள். நாமக்கல் நகரில் வணிக வளாகம் மற்றும் குடியிருப்பு வளாகங்களை உருவாக்கி வாடகைக்கு விட்டுள்ளனர் திரு.மாதையன் தம்பதியினர். டேங்கர் மற்றும் கண்டெய்னர் லாரி போக்குவரத்தில் தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ள இராஜேஷ் டிரான்ஸ்போர்ட்,  திரு.மாதையன் அவர்கள், மிகுந்த வற்புறுத்தலுக்கிடையே நாமக்கல் மாவட்ட பால் டேங்கர் மற்றும் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளராக பொறுப்பு வகிக்கின்றார் என்பது சிறப்பம்சம்.

தொட்டிய நாயக்கர்-இராஜகம்பளத்தார் சமுதாயத்தில் மிகப்பெரிய டிரான்ஸ்போர்ட்டர் என்றால் அது திருமதி.இராஜேஷ்வரி அவர்கள் பங்குதாரராகவுள்ள இராஜேஷ் டிரான்ஸ்போர்ட் மட்டுமே என்றால் மிகையல்ல. தொழில்துறையில் சுமார் 30-ஆண்டுகள் பின்தங்கியுள்ள சமுதாயத்தில், இன்றைய காலகட்ட கல்வித் தகுதியை கருத்தில் கொண்டால் திரு.மாதையன் தம்பதினரின் கல்வித் தகுதி ஒன்றுமே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இருந்தபோதிலும் தொழில்துறையில் வெற்றிபெற “உண்மை, உழைப்பு, உயர்வு”, “கடின உழைப்பிற்கு ஈடுஇணை ஏதுமில்லை” என்ற புகழ்மிக்க வாசகங்கள் நினைவுக்கு வரும். கலப்படம் என்றால் மக்களுக்கு உடனடியாக நினைவுக்கு வருவது பாலில் செய்யப்படும் கலப்படம் என்பது எதார்த்தம். ஆனால் அந்தத் தொழிலில் தன் நேர்மையை நிரூபித்து, நேர்மையில் தாய்ப்பாலை விட சுத்தமானவர் என்று திரு.மாதையன் நிரூபித்தார் என்பதைக்காட்டிலும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்றெடுத்தார் என்பது தான் குறிப்பிடத்தக்கது. அந்த நம்பிக்கையும், நேர்மையும் தான் ஆரோக்கியா நிறுவனத்தின் உரிமையாளரை வீடுதேடி வரவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேர்மை தான் இந்த சாமானியனை சரித்திரத்தின் பக்கங்களில் இடம்பெறச் செய்துள்ளது.

எட்டாவது எட்டில் அடியெடுத்து வைக்கும் திரு.மாதையன் அவர்களை, அவருக்கு உற்ற துணையாகவும், வழிகாட்டியாகவும் விளங்கும் திருமதி.இராஜேஷ்வரி அவர்கள் யாரும் எளிதில் எட்டமுடியாத புகழேணியின் உச்சத்த்தில் அமர்த்துவார் என்பதில் எந்த ஐயமும் இல்லை. திரு.மாதையன்-திருமதி.இராஜேஷ்வரி தம்பதியினரின் இல்லற வாழ்வும், தொழில் சாதனையும், சாதிக்க நினைக்கும் இளைய சமுதாயத்திற்கும், திருமண உறவில் முரண்பட்டு நிற்கும் தம்பதிகளுக்கும், பிள்ளைகளுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்களுக்கும் பாடமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. தானும், உறவுகளும் மட்டுமே வளரவேண்டும் என்ற நினைப்பில் சமூகம் பயணித்துக்கொண்டிருக்கும் தருணத்தில், சாதி,மொழி,மதம்,இனம் கடந்து எல்லோருக்கும் வாய்ப்பளித்து வளரச்செய்யும் திரு.மாதையன் தம்பதியினரின் பண்பு நலனில் சமுதாயம் பெருமைகொள்கிறது. இத்தம்பதியினர் வரும் காலங்களில் மேலும் பல சாதனைகளைச் சொந்தமாக்கி இன்னும் பல எட்டுகளைக் கடந்து வாழ்வாங்கு வாழ ஒட்டுமொத்த சமுதாயத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved