உழைத்தார்கள்-உயர்ந்தார்கள்! கடின உழைப்பே வெற்றிக்கான பாதை!
திரு.A.துரைசாமி அவர்கள் 29.06.1968-இல் நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அருகேயுள்ள பெரியூர் கிராமத்தில் திரு.எர்ரப்பன் - திருமதி.பொம்மாயி அம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப்பிறந்தார். ஆரம்ப பள்ளிக்கல்வியை உள்ளூர் அரசுப்பள்ளியில் பயின்றவர், இராசிபுரத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் மாணவனாகத் தேர்ச்சிபெற்றார். இதனையடுத்து, மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து, முதல்தலைமுறை பட்டதாரியை உருவாக்க வேண்டும் என்ற குடும்பத்தினர் அனைவரின் விருப்பத்தையும் நிறைவேற்றும் பொறுப்புணர்ந்து, தனது மேற்படிப்பை தேர்வு செய்வதில் அதிக கவனமுடன் செயல்பட்டார். அன்றிருந்த நுழைவுத் தேர்வுகள் மூலம் பல் மருத்துவம், விவசாயப் பொறியியல், பொறியியல் ஆகியதுறைகளுக்கு தேர்வானபோதிலும், சூழலையும், வாய்ப்புகளையும் ஆராய்ந்தவர், பொறியியல்துறையை தேர்ந்தெடுத்தார். சேலம் பொறியியல் கல்லூரில் இயந்திரவியல் துறையில் (B.E.,-Mech) சேர்ந்து இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றார். இவருக்கு திருமணமாகி திருமதி.D.விஜயலட்சுமி B.Sc (Comp) என்ற மனைவியும், D.ஜனனி நாகஜோதி B.E., (Chemical Engineer) என்ற மகளும், D.பிரமோத் என்ற மகனும் உள்ளனர்.
1989-இல் இயந்திரவியல்துறையில் பொறியியல் பட்டம் பெற்ற திரு.துரைசாமி அவர்கள், தமிழகத்தில் புகழ்பெற்ற “பின்னி மில்ஸ்”சின் அங்கமான “பின்னி இஞ்சினியரிங்” என்ற நிறுவனத்தில் “ட்ரெயினி இஞ்சினியராக” சென்னையில் வாழ்க்கையைத் துவங்கினார். இந்நிறுவனத்தில் 94-வரை, சுமார் ஐந்தாண்டுகள் வரை பணியாற்றியவர், 1994-இல் குஜராத் மாநிலம், சூரத் நகரிலுள்ள L&T நிறுவனத்தில் பொறியாளராக சேர்ந்து, Reliance நிறுவனத்திற்காக Polimer Plant, Offshore Platforms ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளார். L&T நிறுவனத்தில் இரண்டாண்டு காலம் பணியாற்றியவர், 1996-இல் இங்கிலாந்தைச் சேர்ந்த John Brown என்ற நிறுவனத்தின் பெங்களூர் கிளையில் பணியமர்ந்தார். இந்நிறுவனம் இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் அனுமதிக்கப்பட்ட முதல் தனியார் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து 2000-ஆவது ஆண்டுவரை சுமார் நான்காண்டுகள் அந்நிறுவனத்தில் பணியாற்றியவர், Aker Kevener என்ற சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனத்திற்கு மாறினார். 2000-2004 வரை அந்நிறுவனத்திற்காக சிங்கப்பூரில் பணியாற்றியவர், 2004-2005 ல் Petrokon Engineering Consultancy என்ற நிறுவனத்திற்காக புருனே நாட்டில் பணியாற்றினார். அதன் பின் 2005-2006 வரை Thai Nippon Steel Engineering Corporation என்ற நிறுவனத்திற்காக தாய்லாந்து நாட்டில் இரண்டாண்டுகள் பணியாற்றினார்.
1989 முதல் 2006 வரை சுமார் பதினேழு ஆண்டுகள் பல்வேறு நிறுவனங்களில், பல்வேறு நாடுகளில் பணியாற்றியபொழுதிலும், சுயதொழில் துவங்க வேண்டுமென்ற ஆர்வம் திரு.துரைசாமியின் அடிமனதில் நீண்ட காலமாக இருந்து வந்தது. ஆனால் எதையும் நிதானமாகவும், பொறுமையாகவும் அணுகும் பண்புள்ளவர், சரியான வாய்ப்பிற்காகவும், சந்தர்ப்பத்திற்காகவும் காத்துக்கொண்டிருந்தார். தன்னுடைய குழந்தைகள் இந்திய சூழலில் வளரவும், படிக்கவும் வேண்டும் என்ற விருப்பமும் சேர்ந்துகொண்டபொழுது, 2006-இல் தாயகம் திரும்பி சென்னையில் குடியேறினார். தன்னுடன் பணியாற்றிய நண்பர்கள் ஐவருடன் இணைந்து VP Petro6 Engineers & Consultants Pvt Ltd என்ற நிறுவனத்தை 2006-ஆம் ஆண்டு இறுதியில் சென்னையில் துவங்கினார். அத்துறையில் மிகுந்த அனுபவமிக்கவர்களின் கூட்டணியாக, பெருமகிழ்ச்சியுடனும், எதிர்பார்ப்புகளுடனும் சர்வேதேச வணிகத்தொடர்பும், வாய்ப்புமுள்ள பெட்ரோலியத்துறை சார்ந்து ஒரு நிறுவனத்தை நிறுவியபொழுதிலும், ஒரு நிறுவனம் ஆரம்பகட்டத்தில் சந்திக்கும் இன்னல்களையும், இடர்பாடுகளையும், சறுக்கல்களையும் சந்திக்கும் மனவலிமை அவர்களிடம் இல்லாமல் இருந்தது. ஏனெனில் சர்வதேச அளவில் போட்டியாளர்கள், பெருநிறுவனங்கள் கோலேச்சும் பெட்ரோலியத்துறைக்கு, அலுவலகம், பொறியாளர்கள், ஊழியர்கள், உள்கட்டமைப்பு ஆகியவை சர்வதேச தரத்திற்கு இணையாக இருப்பதற்கு ஆரம்பகட்ட முதலீடுகள் அதிகம். ஆனால் இவர்களோ மாதசம்பளதாரர்களாக கை நிறைய சம்பளம் வாங்கியவர்கள், தனியாக தொழில் துவங்கியபொழுது நிறுவனத்திற்கு அள்ளி அள்ளி கொட்ட வேண்டியிருந்தது. இதை தாக்குப்பிடிக்க முடியாமல் 2010-இல் நண்பர்கள் ஐவரும் நிறுவனத்தை மூடிவிட முடிவு செய்தபொழுது, சாதாரண நடுத்தர விவசாயக்குடும்பத்தில் பிறந்து, பெரிய பொருளாதார பின்னனியோ, சமுதாய பின்புலமோ இல்லாதபொழுதும், அதேதுறையில் சாதிக்க வேண்டும் என்ற வேட்கை திரு.துரைசாமி அவர்களுக்கு இருந்தது. தன் திறமையில் முழுநம்பிக்கை கொண்டவர், இதை சவாலாக ஏற்றுக்கொண்டு, உடனடியாக அந்நிறுவனத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல், அதே ஆண்டு Petro6 Engineering & Constructions (Pvt) Ltd என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
வெற்றி ஒன்றே குறிக்கோளாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டவருக்கு வெற்றியின் வாயில்கள் மெல்லத் திறக்கத்துவங்கியது. ஆம், மூன்றே (2013-இல்) ஆண்டுகளில் Petro Engineering & Construction Pvt Ltd-இன் கிளையை சிங்கப்பூரில் துவங்குமளவிற்கு வளர்த்திருந்தார். அதன்பின், அதற்கடுத்தாண்டே 2014-ஆம் ஆண்டு மியான்மர் (பர்மா) தேசத்திற்கு விரிவுபடுத்தினார். மேலும் வியட்நாம், மியான்மர் நாட்டு நிறுவனங்களுடன் தன்னுடைய நிறுவனத்தையும் பங்குதாரராக இணைத்து Alpha ECC என்ற Engineering & Construction நிறுவனத்தை தொடங்கி “மியான்மர்” நாட்டில் நடத்தி வருகிறார். இந்நிறுவனங்கள் மூலம் 100-க்கும் மேற்பட்ட B.E.,/B.Tech., M.E.,/M.Tech., பொறியாளர்களை பணியமர்த்தியுள்ள திரு.துரைசாமி அவர்கள், இந்திய அரசுத்துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேசன் (ONGC), இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), வேதாந்தா நிறுவனத்தின் Cairn- Oil&Gas, Oil India, மியான்மர் நாட்டின் Petronas, TOTAL, PTTE, கொரியா நிறுவனமான Deawoo, தாய்லாந்து நாட்டின் Nippon Steel, வளைகுடா நாடுகளிலுள்ள Kuwait Oil Company (KOC), சவுதிஅரேபிய அரச குடும்பத்தினரின் ARAMCO மற்றும் மலேசிய நாட்டின் Sapura Energy ஆகிய பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களுடன் திரு.துரைசாமி அவர்களின் நிறுவனம் வர்த்தக ஒப்பந்தம் செய்து பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர சாப்ட்வேர் துறையிலும் கால்பதித்துள்ள திரு.துரைசாமி அவர்கள், சமீபத்தில் BAssure மென்பொருள் நிறுவனமொன்றில் பங்குதாரராக இணைந்துள்ளார்.
வர்த்தக நிமித்தமாக தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும், நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் தொடர் சுற்றுப்பயணத்திலுள்ள திரு.துரைசாமி அவர்கள் சிறந்த “கோல்ப்” விளையாட்டு வீரர் என்பது கூடுதல் சிறப்பு. சென்னை கிண்டியில் உள்ள ஜிம்கானா கிளப் உறுப்பினராக உள்ளவர், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று பலமுறை பதக்கங்களை வென்றவர், 2017-Sport Star Magazine நடத்திய அமெச்சூர் கோல்ப் டோர்னமென்ட் போட்டியில் முதல் பரிசை வென்றுள்ளார்.
தொழில்துறை, விளையாட்டுத்துறை மட்டுமல்லாமல், சமுதாயத்தினர் மீதும் அதிக பற்று கொண்டுள்ள திரு.துரைசாமி அவர்கள், தான் பிறந்த நாமக்கல் பகுதியில் சமுதாயத்தினர் கடைபிடிக்கும் சடங்கு-சம்பிரதாயங்களிலும், பழக்க வழக்கங்களிலும் அதிக நம்பிக்கையும், ஈடுபாடும் உடையவர். இதுதவிர சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் முதல்தள கட்டுமானப்பணி கடுமையான பொருளாதார தட்டுப்பாட்டால் நிறைவு செய்திட தடுமாறிய நிலையில், வாராது வந்த மாமணிபோல் 2014-ஆம் ஆண்டு ஒருமுறை சங்கத்திற்கு சென்றவர், உடனடியாக “ரூபாய் இரண்டு லட்சம்” வழங்கி கட்டிடப்பணியை நிறைவு செய்திட உறுதுணையாக இருந்தார். இராஜகமபளத்தார் வரலாற்றில் ஒரே தவணையில் சமுதாயப்பணிக்காக “ரூபாய் இரண்டு லட்சம்” வழங்கிய பெருமை திரு.துரைசாமி அவர்களையே சேரும். அதிலிருந்து அச்சங்கத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருபவர், இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் ஆலோசகர்களில் ஒருவராக, சங்கம் நடத்தும் கூட்டங்களில் கலந்துகொண்டு ஊக்கமளித்து வருகிறார். திரு.துரைசாமி அவர்களின் நன்கொடையை அடிப்படையாகக் கொண்டே “கட்டபொம்மன் பர்பிள் டிரஸ்ட்” துவங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வேதேச வர்த்தக தொடர்புகளுடன் நிறுவனத்தை நிறுவி சமுதாயத்திற்கு பெருமை சேர்த்திருந்தபொழுதிலும், எந்த படோபடமோ, மேட்டுமைத் தனமோயின்றி, மிகச்சாதாரண எளிய வாழ்க்கைமுறையை கடைபிடிக்கும் திரு.துரைசாமி அவர்கள், தன்னுடன் சேர்ந்து சமுதாயமும் வளர வேண்டும் என்ற அக்கரை கொண்டவர். இது நாமக்கல் மண்ணிற்கே உரித்தான பண்புநலன் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தனக்கு மட்டும் பெருமை சேற்காமல் பிறந்த மண்ணிற்கும் பெருமை சேர்த்தவராகிறார் திரு.துரைசாமி அவர்கள். பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த திரு.துரைசாமி அவர்களின் வாழ்க்கை, சாதிக்கத்துடிக்கும் சமுதாய இளைஞர்களுக்கு உந்துசக்தியாக இருக்கும் என்றால் மிகையல்ல. திரு.துரைசாமி அவர்கள், மேலும் பலபுதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிபெற்று, தொழில்துறையில் கம்பளத்தாரின் அடையாளமாக, வலுவான அடித்தளம் அமைக்க வேண்டி, அன்புடன் வாழ்த்துகிறோம்.