தரையில் தொடங்கி சிகரம் தொட்ட தங்கமகன் தூத்துக்குடி திரு.A.லட்சுமணன்.
திரு.A.லட்சுமணன் அவர்கள் 21.01.1956-ல் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள அணியாபரநல்லூர் கிராமத்தில் திரு.ஆண்டி நாயக்கர் – திருமதி.சொர்ணம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப்பிறந்தார். உயர்நிலைப்பள்ளி கல்வி வரை பயின்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.சண்முகலட்சுமி என்கிற மனைவியும் L.லலிதா, L.கவிதா, L.கனகா என மூன்று மகள்களும் உள்ளனர்.
திரு.ஆண்டி நாயக்கருக்கு இருதாரங்களும், 13 குழந்தைகளையும் கொண்ட பெரும் குடும்பத்தில் பிறந்த திரு.லட்சுமணன் அவர்கள், குடும்ப வறுமை காரணமாக 13 வயதிலேயே தூத்துக்குடி நகருக்கு வேலைக்கு செல்லவேண்டிய கட்டாயத்திற்குள்ளானார். அங்கு அடகுகடையொன்றில் கலெக்ஷன் பாயாக 50 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். இளம் பருவமென்றாலும், மிகுந்த முதிர்ச்சியுடன் பணியாற்றிய திரு.லட்சுமண் அவரகளின் பொறுப்புணர்ச்சி முதலாளிக்கு முழுதிருப்தியை தந்தது. இதனால் காலையில் வசூல் முடிந்தபிறகு மதிய உணவிற்குப்பிறகு வேலையின்றி நேரவிரயம் ஆவதை உணர்ந்த முதலாளி, பலசரக்கு கடையொன்றை தொடங்கி நடத்த தொடங்கினார். காலையில் அடகுகடை வசூல், மாலை பலசரக்கு கடை வியாபாரம் என்று இருவேறு அனுபவங்களுடன் 15-ஆண்டுகள் பணியாற்றினார். தனது சொந்த உழைப்பால் சிறுக சிறுக சேர்த்து 23 வயதில் திருமணம் செய்துகொள்ளும்பொழுது திரு.லட்சுமணன் அவர்களின் சம்பளம் 50 ரூபாயிலிருந்து 600 ரூபாயாக உயர்ந்திருந்தது. தனது மூத்த மகள் லலிதா பிறந்துவிட்ட சூழலில் சம்பள உயர்வு வேண்டி முதலாளியை அணுகியுள்ளார். ஆனால் இவரின் முதலாளிக்கு வேறு எண்ணம் இருந்தது. திறமையாகவும், பொறுப்பாகவும் வேலை செய்பவன், திருமணத்திற்குப் பிறகும் மாத சம்பளத்திற்கே வேலை செய்கிறானே, எப்படி முன்னேறுவான் என தன்னளவிலேயே நினைத்துக்கொண்டிருந்தவர், தனியாக தொழில் செய்யட்டுமே என்று நினைத்தாலும், நீண்டகாலம் வேலைசெய்தவரை தனியாக போகச்சொன்னாலும் மனது சங்கடப்படுமே என்று தயங்கிக்கொண்டிருந்தார். இந்த சூழலை சரியான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டவர்,சம்பள உயர்வு வேண்டி வந்த திரு.லட்சுமணனிடம், பெயரளவில் உயர்த்தினாலும் இங்கேயே இருந்து விடுவானோ என்ற பயத்தில், 600 ரூபாய்க்கு மேல் ஒருபைசா கூட உயர்த்த முடியாது என்று கராராக மறுத்துவிட்டார்.
அதன்பின் முதலாளி எதிபார்த்த மாதிரியே நடந்தது. 15 வருடம் உழைத்ததை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லையே என்று மிகுந்த ஏமாற்றமடைந்த திரு.லட்சுமணன் அவர்கள் உடனடியாக வேலையிலிருந்து நின்றுவிட்டார். ஆனால் கடமை,ஒழுக்கம், பொறுப்பு என நற்குணங்களைக் கொண்ட திரு.லட்சுமணனை காலம் அடுத்த உயரத்திற்கு கொண்டுசெல்ல காத்திருந்தது. வட்டிக்கடை வேலைதான் வாழ்க்கையென்று நினைத்தவருக்கு எப்படி பலசரக்கு கடை வேலை தானாக அமைந்ததோ, கடைசியில் அதுதான் இந்த இக்கட்டான நேரத்தில் கைகொடுத்தது. கோடி ரூபாய் கொட்டிக்கொடுத்தாலும் கிடைக்காத அனுபவ அறிவை பலசரக்குகடைதான் திரு.லட்சுமணனுக்கு கொடுத்தது. அந்த அனுபவத்தின் அடிப்படையில் ஐந்தாயிரம் ரூபாய் முதலீட்டில் சாலையோரத்தில் “பெட்டிக்கடை” ஒன்றை துவங்கினார். மூர்த்தி தான் சிறிது கீர்த்தி பெரிது என்பதுபோல், கடைதான் சிறிதாக இருந்ததே தவிர வியாபாரம் நம்பிக்கையளிக்கும் விதத்தில் இருந்தது. பெட்டிக்கடையின் வியாபாரத்தைக்கொண்டே தொழிலை விஸ்தரிக்க தொடங்கினார். கடைவைத்த ஒருசில ஆண்டுகளிலேயே அருகிலுள்ள கட்டிடத்தில் இருகடைகளை வாடைகைக்கு எடுத்து சரக்குகளை அதில் வைத்துக்கொண்டு, இரு பணியாளர்களையும் வேலைக்கு அமர்த்தி, பெட்டிக்கடை மூலமாகவே விற்பனை செய்து வந்தார்.
1988-வரை பலசரக்கு பெட்டிக்கடையை தொடர்ந்து நடத்தியவர், வாடைகைக்கு இருந்த கட்டிடத்தை விலைக்கு வாங்கி சொந்தமாக்கிக்கொண்டார். குடும்பசூழல் கருதி பலசரக்கு கடையிலிருந்து அடகுக்கடைக்கு மாறிவர், தங்கநகையின் பேரில் கடன் வழங்கும் அடகு கடை தொடங்கினார். இந்த தொழிலில் இருபதாண்டுகால அனுபவத்திற்குப்பின் 2012-இல் “AL Jewellers” என்ற பெயரில் நகைக்கடையை துவங்கி நடத்திவருகிறார். எட்டாண்டுகால கடுமையான உழைப்பிற்குப்பின் தமிழகம் முழுவதும் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள நகைக்கடையாக மாற்றியுள்ள திரு.லட்சுமணன் அவர்கள், சர்வதேச அளவில் தங்கக்கட்டிகள் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சோற்றுக்கே வழியில்லாமல் தூத்துக்குடி நகரை நோக்கி வந்ததாக எந்த கௌரமும், தயக்கமுமின்றி வெளிப்படையாக சொல்லும் திரு.லட்சுமணன் அவர்களின் வாழ்க்கையும், அவர் கடைபிடித்த பொறுமையும், இன்றைய இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய அம்சம். இராஜகம்பளத்தார் சமுதாயத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே தங்க வணிகத்தில் ஈடுபட்டு வருகின்ற சூழலில், சாமானியனாக வாழ்க்கையை துவங்கிய திரு.லட்சுமணன், அமைதியான முறையில் தங்க வர்த்தகத்தில் கம்பளத்தாரின் முகமாக விளங்குகிறார். தொழிலில் மட்டுமல்ல சமுதாயப்பணியிலும் அதிக அக்கரை கொண்டவரான திரு.லட்சுமணன் அவர்கள், சமுதாய அமைப்புகள் மேற்கொள்ளும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தன்னாலான உதவிகளை வழங்கி வருகிறார். சென்னை, வீ.க.பொ.நலச்சங்கம் நட்த்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஊக்கமளித்து வருபவர், அச்சங்க கட்டிட பணிக்கு ரூ.200000/- (ரூபாய் இரண்டு லட்சம்) வழங்கியவர்களுக்கான “கட்டபொம்மன் பர்பிள் கிளப்” உறுப்பினர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மிகுந்த நிதானமும், பரந்த மனப்பான்மையும் உடையவரான திரு.லட்சுமணன் அவர்கள் மங்காப் புகழும், நோயற்ற வாழ்வுடன் நீடுடி வாழ்ந்து சமுதாயத்திற்கு புகழ் சேர்த்திட அன்புடன் வேண்டி, வாழ்த்துகிறோம்.