🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அள்ளித்தந்த வானம் - பொள்ளாச்சி அமரர்.திரு.S.முருகானந்தம்.

திரு.S.முருகானந்தம் அவர்கள் 09.07.1962-இல் கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள மண்ணூர் கிராமத்தில் திரு.சுப்பிரமணிய நாயக்கர்-திருமதி.பத்மாவதி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். திரு.முருகானந்தம் அவர்களுக்கு திருமதி. மரகதாம்பிகை என்ற மனைவியும் M.ரதீஷ்வரன் B.E., மற்றும் M.புவனேஷ்வரன் என்ற இரு மகன்களும் உள்ளனர்.


பெருநிலகிழார் குடும்பமாக, காங்கிரஸ் பாரம்பரியத்தில் இருந்து வந்தவர் திரு.முருகானந்தம் அவர்கள். பொள்ளாச்சி பகுதியில் பெருநிலக்கிழார், செல்வந்தர்களை “பண்ணாடி” என்று அழைக்கும் வழக்கமுண்டு. அதன்படி இவரின் குடும்பத்தை “பண்ணாடி வீடு” என்று அழைப்பர். இளமைக்காலத்தில் கிரிக்கெட் விளையாட்டிலும், காளை வண்டி ஓட்டுவதிலும் அதிக ஆர்வமுள்ளவராக இருந்தார் திரு.முருகானந்தம் அவர்கள். சமுதாயத்தைச்சேர்ந்த ஏழைகுடிகளுக்கு தன் நிலத்தை குத்தகைக்கு வழங்கி, பலகுடும்பங்கள் முன்னேற அடித்தளமிட்டவர். குத்தகை என்பது விளைச்சலைப் பொறுத்து பெயரளவில் தான் இருந்ததே தவிர, நிர்பந்தம் ஏதுமில்லை. இவரின் பரந்துவிரிந்த 50- ஏக்கர் தென்னந்தோட்டம், அடித்தட்டு மக்கள் மற்றும் சிறுவிவசாயிகளின் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலங்களாக இருந்து அவர்களின் வாழ்க்கையைக் காத்தது என்றால் மிகையல்ல. இதுமட்டுமல்ல, வறட்சி காலங்களில் சுற்றியுள்ள விவசாயிகளுக்கு தன் கிணற்று நீரைப்பகிர்ந்து, அவர்கள் பிள்ளைபோல் வளர்த்த தென்னையைக் காப்பாற்ற தோள்கொடுத்தவர். மேலும், இருக்க இடமின்றி, பிழைக்க வழியின்றி வந்தவர்களுக்கு வேடந்தாங்கலாக இருந்தது இவரின் தோட்டத்துச்சாளைகள். அவர்களுக்கு இருக்க மட்டுமே இடம் கொடுத்தவரல்ல, தோட்டத்து சாளைகளில் குடிநீர், சமைக்க விறகு, தேங்காய், மின்சாரம் என அனைத்தையும் இலவசமாகக் கொடுத்தார். இந்த வேடந்தாங்கலிலிருந்து புறப்பட்ட பலபேர் கல்வியாளகளாக, பொறியாளர்களாக, அரசு/வங்கி அதிகாரிகளாக, தொழிலதிபர்களாக உயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதுமட்டுமா? தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தனியாக “தென்னை மரத்தை” ஒதுக்கிய பொதுவுடமைவாதி. தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட தென்னை மரத்திலிருந்து இளநீர் பறித்துக்கொள்ளலாம், குடும்ப தேவைகளுக்கு தேங்காய் எடுத்துச்செல்லலாம் என்பதுபோன்ற எங்குமில்லாத சுதந்திரத்தை வழங்கினார். தென்னந்தோப்பில் விழுகின்ற தென்னங்கீற்று, தென்னை மட்டை இவற்றை வாழ்வாதாரமாக்கொண்டு வளர்ந்தவர்கள் பலர் உண்டு. இவர்களெல்லாம் இந்த “சின்னப்பண்ணாடி” தெய்வம் போன்றவர், மிகுந்த மரியாதைக்குறியவர். அவர்களுக்கு மட்டுமல்ல, இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை என்ற திரு.நாகூர் ஹனிபாவின் பாடலை அனைவரும் கேட்டிருப்போம். இறைவன் வாரி வழங்குவாரா, மாட்டாரா? எப்பொழுது கொடுப்பார்? என்பதெல்லாம் இறைவனே அறிவார். ஆம், சில ஆண்டுகள் முன்புவரை மண்ணூர் கிராமத்தில் ஒரு பழக்கம் பிரபலமாக இருந்தது. இங்கு கையேந்த வேண்டிய தேவையில்லை, வந்திருப்பவர் தனது தேவையைச் சொல்லத் தேவையில்லை, வழக்கமாக இவர் தோட்டத்திற்கு நடந்து செல்லும்பொழுது இட்டேறி முக்குகளில் தலை சொறிந்தபடி தேவையுள்ளோர் இணைந்து கொள்வர். ஒருசில நூறு அடிகளில் இட்டேறியின் அடுத்த முக்குகளை அடையும் முன் ஆசைப்பட்டதை பெற்றுக்கொண்டு, அடுத்தவர்களுக்கு வழிவிடுவர், அவ்வளவு நாகரீகம்!!!  வழக்கமாக அதிகாலை, முன்பகல், நண்பகல் என தினமும் மூன்று முறை, போக வர ஆறு முறை பயணிப்பவரை தனியாகச் சந்திப்பதற்குள் தண்ணி எடுக்க வேண்டியிருக்கும். பலாப்பழத்தை ஈ மொய்ப்பதுபோல் எந்த நேரமும் பார்வையாளர்கள் கூட்டம் தான். நின்றும் கூட கொடுக்கமாட்டார், நடந்து செல்லச்செல்லவே டிரவுசர் பாக்கெட்டிலிருந்து எடுத்து கொடுத்தபடி நகர்ந்துகொண்டே இருப்பார். யாருக்கும் இல்லையென்று சொன்னவரில்லை. சாதி, மதம், மொழி, உள்ளூர், வெளியூர் என்ற பாகுபாடு எதுவும் கிடையாது. 


மேலே குறிப்பிட்டதெல்லாம் முதல் ரகமென்றால், திருமணம்,மருத்துவச் செலவு, கல்விக் கட்டணம், மாடு வாங்க, போர்வெல் அமைக்க, வங்கிக் கடன் திருப்பி செலுத்த, என  கேட்பவர்கள் அடுத்த ரகம்.  இவர்களெல்லாம் தோட்டத்திற்கு சென்று விடுவார்கள். விளக்கம் அதிகம் தேவையில்லை, வயதில் பெரியவர்கள் “தம்பியத்தான்” பாத்துட்டு போகலாம்னு வந்தேன் என்பார்கள், வயதில் சின்னவர்கள் “சின்னப்பண்ணாடி” அவுகளத்தான்…./ சாமிய பாத்துட்டு போகலாம்னு… வந்தேன்னு ஒரு சின்ன இழுவை மட்டும் தான். என்ன? என்பது மட்டும் தான் இவர் பேசும் அதிகபட்சம். காரணத்தைச் சொல்லி தங்கள் தேவையையும் குறிப்பிடுவார்கள். பத்து வட்டி வாங்குபவரானாலும், வங்கியானாலும் எவ்வளவு அலைய வேண்டியிருக்கும். இந்த வங்கிக்கு எதுவும் தேவையில்லை. உடனடியாக பட்டுவாடா தான். கடன்/கைமாத்து என்பதெல்லாம் தற்காலிக சல்ஜாப்பு வார்த்தை தானே தவிர, திருப்பிக்கொடுத்தவர்கள் மிகக்குறைவு. அதை இவர் எதிர்பார்க்கவும் மாட்டார். மேலும் சாப்பாடு இல்லையா பண்ணாடி இருக்கார், செத்துபோயிட்டா சுடுகாடு கொண்டுபோய் சேத்திருவார் பண்ணாடி என்று மக்கள் நம்பிக்கை வைக்கும் அளவிற்கு, வெளியூரிலிருந்து ஒருவர் மண்ணூரில் இறந்துவிட்டாலும் உரிய முறையில் அடக்கம் செய்து, பணியாளர்களுக்கு என்ன கொடுக்கவேண்டுமோ அதைக்கொடுத்துவிடுவார். அந்தப்பணியை மேற்கொள்பவர்களும் ஏழை-பணக்காரன் என்ற பாகுபாடின்றி அடக்கம் செய்துவிட்டு, சம்மந்தப்பட்ட குடும்பத்தார் கூடக்குறைய கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு, கூடுதலாக தேவைப்பட்டால் இவரிடம் தனியாக பெற்றுக்கொள்வர்.

ஏதோ தனிப்பட்ட நபர்களுக்கு மட்டுமே உதவினார் என்றில்லை. ஒரு கிராமத்தின் சூழலையே மாற்றியவர் திரு.முருகானந்தம்.எல்லா கிராமங்களிலும் இருக்கும் நடைமுறைபோல மண்ணூர் கிராமத்திலும் ஊரை நிர்வாகிக்க ஊர் கொத்துக்காரர், ஊர்க்கவுண்டர், ஊர் மணியகாரர் என்ற அடுக்குகள் இருந்து வந்தது. பழமையான, சிதிலமடைந்த மாகாளி அம்மன் மற்றும் இராமர் கோவில்களை புதிதாக கட்டவேண்டும் என்று ஊர்கூடி முடிவு செய்தபொழுது, அதை செம்மையாக, காலதாமதமின்றி நிறைவேற்ற “ஊர் மணியகாரர்” பட்டம் திரு.முருகானந்தம் அவர்களைத் தேடிவந்தது. “பட்டம்” என்பதைக்காட்டிலும் கூடுதல் பொறுப்பு என்றுதான் சொல்ல வேண்டும். பல்வேறு சாதி மக்கள் வாழ்ந்தாலும்,மண்ணூர் கிராம மக்கள் என்னவோ காலங்காலமாக உறவுமுறை சொல்லி அழைக்கும் வழக்கம் தான் இருந்து வருகிறது. அதை மேலும் வலுவாக்கும் வகையில் ஊர் பெரியதனங்களும் மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு, சிறப்பான முறையிலும், விரைவாகவும் கோவில் கட்டி முடிக்கப்பட்டது. தொடங்கும்பொழுது எந்த மகிழ்ச்சியில் தொடங்கினார்களோ, அதே மகிழ்ச்சி கும்பாபிஷேகம் முடியும் வரை மட்டுமல்ல, இன்றுவரை தொடர்வதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர். தனிமனித ஆதிக்கமோ, சாதிய அடக்குமுறை, இன.மொழி, சாதி பாகுபாடு ஏதுமின்றி, அவரவர் உரிமைகளோடு வாழும் ஒரு இணக்கமான சூழலை உருவாக்கி வைத்துள்ளனர். இந்த சூழல் மண்ணூர் கிராமம் தனித்து இயங்கும் மையப்பகுதியாக சிறப்புபெற்றதால், பிற பகுதி மக்கள் இங்கு குடியேறுவதை விரும்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


அரசியலில் அதிக ஆர்வமில்லாமல், அனைத்து தரப்பினருக்கும் பொதுவானவராக இருந்து வந்தாலும், நீண்ட காலத்திற்கு அதே நிலைப்பாட்டில் தொடர அரசியல் விட்டு வைக்கவில்லை. இவரின் பங்களிப்பின்றி எந்தக்கட்சி கூட்டமும் நடப்பதில்லை என்றிருந்த நிலையில், 1996-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலையடுத்து, ஆதரவு நிலை எடுக்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். 1991 மற்றும் 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதில் முக்கியப்பங்காற்றிய நிலையில், 2001-இல் அதிமுக அரசு அமைந்தபொழுது , தங்கள் இயக்கத்திற்கு வலுவான, மக்கள் செல்வாக்கு பெற்றவர் தேவை என்று விரும்பி, நண்பர்கள் மற்றும் அப்பகுதி அரசியல் தலைவர்களின் தொடர் வற்புறுத்தலின் காரணமாக, 2002-இல் அ.தி.மு.க-வில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக்கொண்டார். இதனைத்தொடர்ந்து ஊராட்சி செயலாளர், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர், வேளாண் கூட்டுறவு வங்கி இயக்குநர், தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க இயக்குநர் போன்ற பதவிகளை வழங்கி கட்சி கௌரவித்தது. கட்சியில் தனக்கிருந்த தனிப்பட்ட செல்வாக்கால் பலருக்கு அரசு வேலையும், பணியிட மாறுதல்களும், ஒரு ரூபாய் செலவின்றி வாங்கிக்கொடுத்தவர். அந்த அளவிற்கு அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். கட்சியின் மாநாடுகள், தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்கள் எதுவானாலும், சொந்த செலவில் மக்களை வாகனங்களில் அழைத்துச்செல்வார். இந்த சேவைகளையெல்லாம் அங்கீகரித்த கட்சி, கட்சியிலும், வாரியங்களிலும் பல்வேறு பதவிகளை வழங்க கட்சி முன்வந்தபொழுது அந்த வாய்ப்புகளை ஏற்க திரு.முருகானந்தம் அவர்கள் மறுத்துவிட்டது துரதிஷ்டவசமானது. 

தேர்தலில் போட்டியிடுவதை விரும்பாதவர், கட்சியின் மூத்த தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 2006 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில் மண்ணூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றார். 2019-இல் ஊராட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு தனது உறவினரைப் போட்டியிட வைத்து வெற்றிபெற வைத்தார். தனது பதவி காலத்தில் கிராமங்களுக்கு இணைப்புச்சாலை, பள்ளிக்கட்டிடம், நூலகம், பஞ்சாயத்து அலுவலகம், அங்கன்வாடி மையம், குடிநீர் வசதி, காங்கிரீட் சாலை, தெருவிளக்குகள், பசுமைவீடு, இலவச ஆடு-மாடு, விவசாயிகளுக்கு மானியம், விவசாயக்கடன், விவசாய சுற்றுலா என பல்வேறு பணிகளை மேற்கொண்டு, தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாற்றுவதற்கு அரும்பாடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர கட்சிப்பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர், தொடர்ந்து கட்சிக்கு அதிகப்படியான வாக்குகளை பெற்றுத்தந்து, சட்டமன்ற, நாடாளுமன்ற வேட்பாளர்களின் அன்பைப்பெற்றவர். 


ஊர் நிர்வாகம், அரசியல், பொதுவாழ்க்கை, நிர்வாகப்பதவி என எல்லாவற்றிலும் தனித்துவ முத்திரை பதித்து, அனைத்து மக்களுக்கும் ஆதரவாக வாழ்ந்தவர், தனது 58-ஆவது வயதில் கடந்த 2020-ஜூன் 3-ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவால் அள்ளித்தந்த வானம் தனது இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டது. அன்று மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் ஒருவர் இறந்ததாகவே நினைத்து கண்ணீர் விட்டனர். கொரானோ பேரிடரையும் பொருட்படுத்தாக மக்கள் ஆயிரக்கணக்கில் குவிந்து இறுதி அஞ்சலி செலுத்திய நிகழ்வே அவர்பெற்ற பெயருக்கும், புகழுக்கும் சாட்சி. அரசியலில் பல்வேறு பதவிகளைப் பெற்று, சமுதாயத்திற்கு ஆதரவாகவும், வழிகாட்டியாகவும் வாழ்ந்திருக்க வேண்டியவர், இளம்வயதில் இயற்கை எய்தியது சமுதாயத்திற்கு பேரிழப்பாகும். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved