நெடிய உருவம், பரந்த மனம் - நாமக்கல் திரு.ரங்கம நாயக்கர்
திரு.ரங்கம நாயக்கர் அவர்கள் 26.08.1941-இல் நாமக்கல் மாவட்டம், இராமநாயக்கன்பட்டி கிராமத்தில் திரு.பொம்ம நாயக்கர் – திருமதி.பொம்மாயிஅம்மாள் தம்பதியினருக்கு விவசாய குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர் மேல்நிலைக்கல்விக்கு பின் Diploma in Cooperative துறையில் பட்டயம் பெற்றவர். இவருக்கு திருமதி.முத்தாயிஅம்மாள் என்ற மனைவியும் R.ஜெயலட்சுமி.M.com, R.பத்மாவதி B.Com., என்ற இருமகள்களும், R.கோவிந்தராஜ் M.E., என்ற மகனும் உள்ளனர்.
திரு.ரங்கம நாயக்கர் அவர்கள் 24.04.1964 ஆம் ஆண்டு சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் வங்கி ஆய்வாளர் (Bank Inspector) ஆக பணியைத்தொடங்கினார். ஒருசில வருடங்களில் அதே வங்கியில் மேலாளராக (Manager) பதவி உயர்வு பெற்று, 2000-ஆம் ஆண்டு பணி ஓய்வு பெரும்வரை சிறப்பாக பணியாற்றினார். வங்கிப்பணியில் இருந்தபொழுதே சமுதாயப்பணியிலும் ஈடுபட்டு வந்த திரு.ரங்கம நாயக்கர் அவர்கள், 1975-ஆம் ஆண்டு தமிழ்நாடு இராஜகம்பள மஹாஜன சங்கத்தில் உறுப்பினராக இணைந்து பணியாற்றி வந்தார். அதன்பின் 1998-ல் நாமக்கல் மாவட்ட, இராஜகம்பள மஹாஜன சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாமக்கல் மாவட்ட தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் துணை சாதியான எர்ரகொல்லாவிற்கு சான்றிதழ் பெறுவதில் கடும் சிரமம் இருந்தபடியால் பள்ளி, கல்லூர் மாணவ-மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்ட சூழலில், அரசுக்கு தொடர் மனு அளித்தும்,பல்வேறு கட்டப்போராட்டங்கள் நடத்தியும் அரசு செவிசாய்க்காத நிலையில், அன்றைய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த திரு.K.K.S.S. ராமச்சந்திரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, தமிழக முதல்வராக இருந்த டாக்டர் மு. கருணாநிதி அவர்களிடம் நேரடியாக முறையிடப்பட்டதைத் தொடர்ந்து, 2008-ல் எர்ரகொல்லா சமுதாயத்திற்கு MBC என்ற சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த முயற்சியில் சமுதாய தலைவர்களுடன் இணைந்து முன்னெடுத்தவர்களில் முதன்மையானவர் திரு.ரங்கம நாயக்கர் அவர்கள்.
சென்னையிலுள்ள இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என நிர்வாகிகள் தன்னை அணுகியபொழுது, நாமக்கல் மாவட்டம் முழுவதும் அச்சங்க நிர்வாகிகளை முக்கிய பிரமுகர்களிடம் அழைத்துச்சென்று ரூ.100000/- (ரூபாய் ஒரு லட்சம்) வரை நன்கொடை திரட்டி கொடுத்துள்ளார். இது சென்னை சங்கத்தின் முதல்தள கட்டுமானப்பணிக்கு பெரிய அளவில் உதவிகரமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வயது முதிர்ந்த காலத்திலும் 300-கி.மீ அதிகமான தூரம் பயணம்செய்து சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் வருடந்தோறும் நடைபெற்றுவரும் பிறந்தநாள் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில், நாமக்கல் மாவட்ட உறவுகளுடன் கலந்துக்கொண்டு, நிர்வாகத்திற்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கிவந்தவர் திரு.ரங்கம நாயக்கர். இவரின் சமுதாயப்பணியைப் பாராட்டி சிறந்த சமுதாய சேவகர் விருதை இச்சங்கம் வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாவட்டம், இராமநாயக்கன்பட்டிலுள்ள மாரியம்மன் கோவில், பெருமாள் கோவில்களில் நாற்பத்து மூன்று ஆண்டுகளாக தர்மகர்த்தவாக இருந்து வந்தவர் திரு.ரங்கம நாயக்கர் அவர்கள், மாரியம்மன் கோவிலுக்கு மூன்று முறை கும்பாபிஷேகம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து சமுதாயக்கூட்டங்களிலும், சங்கத்தின் நிகழ்ச்சிகளிலும், சமுதாயப்பணிகளிலும் ஈடுபட்டு வந்த திரு.ரங்கம நாயக்கர் அவர்கள் கடந்த (25.08.2020) அன்று தனது 79-ஆவது வயதில் திடீரென்று இயற்கை எய்தினார். திரு.ரங்கம நாயக்கர் அவர்கள் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும், அவராற்றிய சமுதாயப்பணிகளால் என்றென்றும் நினைவு கூறப்படுவார்.