சமுதாய தலைவர்கள் - K.சண்முகபுரம் - திரு.K.S.குட்டி
திரு.K.S.குட்டி அவர்கள் 1951-இல் தூத்துக்குடி மாவட்டம், K.சண்முகபுரம் கிராமத்தில் திரு.செண்பக நாயக்கர் – திருமதி.மல்லம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவருக்கு திருமணமாகி திருமதி.K.தனலட்சுமி, K.வீரலட்சுமி என்ற இரண்டு மனைவிகளும் K.செண்பகராஜ், K.பென்னுத்துரை, K.முருகன், K.அய்யாச்சாமி என்ற நான்கு மகன்களும் K.செல்வி, K.மல்லிகா, K.ஜோதிதேவி, K.செண்பகவள்ளி என்ற நான்கு மகள்களும் உள்ளனர்.
இளம் வயதிலிருந்தே சமுதாய பணியில் ஈடுப்பட்டு வந்த திரு.குட்டி அவர்கள், 2002 ஆம் ஆண்டு கயத்தாறிலுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளையை தொடங்கி நிறுவனத்தலைவராக இருந்து. இதன் மூலம் கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு உயர்நிலைப்பள்ளியில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ-மாணவியருக்கு ஆண்டு தோறும் தங்க பதக்கம் வழங்கி கௌரவித்து வருவதுடன், மாணவ –மாணவியருக்கு இலவச நோட்டு,புத்தகம், கல்வி உதவித்தொகை வழங்கி வந்தார். இதுதவிர, ஆண்டு தோறும் மாவீரன் கட்டபொம்மன் நினைவுநாளன்று கயத்தாறிலுள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, வீரவிளையாட்டுகள் நடத்துவதுடன், அன்னதானமும் வழங்கி வந்தார்.
மேலும், மாவீரன் கட்டபொம்மன் நினைவுநாளன்று தொடர்ந்து 26 வருடங்களாக மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்கள் மாவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சியையும், அதனைத்தொடர்ந்து நடைபெறும் நினைவுநாள் பொதுக்கூட்டத்தையும் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தி வந்தவர் திரு.குட்டி அவர்கள். இதன் மூலம் கம்பளத்து சமுதாயத்தின் மீது அரசியல் கட்சியினரின் பார்வை திரும்புவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் திரு.குட்டி அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தை வீரபாண்டிய கட்டபொம்மன் மாவட்டமாக பெயர்சூட்டக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டம் வா.வு.சி மாவட்டமாகவும், திருநெல்வேலி மாவட்டம் கட்டபொம்மன் மாவட்டமாகவும் அறிவிக்கப்பட்டது. இதுதவிர கம்பளத்தார் சமுதாயத்திற்கு சாதி சான்றிதழ் பெறுவதில் இருந்த சிக்கல்களை போக்கி விரைந்து சான்றிதழ் வழங்கக்கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளார். மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனை பற்றி தொடர்ந்து சமூக வலைதளங்களில் இழிவுபடுத்தி வருபவர்களை கைது செய்யக்கோரி கோவில்பட்டியில் நடத்திய போராட்டத்திலும் பங்கேற்றுள்ள திரு.குட்டி அவர்கள், இது போன்ற பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று உள்ளார்.
கட்சி அரசியலில் அதிக ஈடுபாடுல்லாத திரு.குட்டி அவர்கள் மதிமுக பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களுடன் தனிப்பட்ட நட்பையும், நம்பிக்கையையும் பெற்றவர். தொடர்ந்து சமுதாய பணியில் தொய்வின்றி செயலாற்றிய திரு.குட்டி அவர்கள் இன்று (31.07.2021) இயற்கை எய்தினார். தொடர்ந்து சமுதாய பணியில் ஈடுபட்டு வந்த திரு.K.S.குட்டி அவர்களின் புகழ் காலம் உள்ளவரை நிலைத்திருக்கும்.