🔴 LIVE | முப்பெரும் விழா 2023


எண்பதிலும் இளைஞராக பணியாற்றியவர் - காரமடை - திரு.T.M.அரங்கசாமி

திரு.T.M.அரங்கசாமி அவர்கள் 05.07.1941-இல் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்  அருகேயுள்ள காரமடை கிராமத்தில் திரு.மாச நாயக்கர்  – திருமதி.மாகாளியம்மாள் தம்பதியினருக்கு விவசாய குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். உயர்நிலைப்பள்ளி வரை படித்தவருக்கு திருமதி.மணிமேகலை என்ற மனைவி உள்ளனர்.

திரு.T.M.அரங்கசாமி அவர்கள் 1980 ஆம் ஆண்டு தமிழ்நாடு இராஜகம்பள மகாஜன சங்கத்தின் மாவட்டத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது இறுதிகாலம் வரை த.வீ.க.பண்பாட்டுக் கழகத்தின்  மாநில துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியவர். ஆண்டு தோறும் ஜனவரியில் மாவீரன் கட்டபொம்மனின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய திரு.அரங்கசாமி அவர்கள், நீலகிரி மாவட்டம், வெலிங்டன் இராணுவ பயிற்சி மையத்தில் நிறுவப்பட்டுள்ள மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு , காரமடை சுற்றுவட்டாரத்திலிருந்து  500 க்கும் மேற்பட்ட சமுதாயத்தினரை அழைத்துச் சென்று,  மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, வெலிங்டன் செல்லும் வழியில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சிகளையும் பிறந்தநாளன்று நடத்தி வந்தார்.


சிறந்த சொற்பொழிவாளரான திரு.அரங்கசாமி அவர்கள் இராஜகம்பள மகாஜன சங்கம் மற்றும், பண்பாட்டுக்கழகத்தின் கூட்டங்கள் எங்கு நடைபெற்றாலும் தவறாமல் கலந்து கொள்ளும் வழக்கமுடையவர். விருதுநகரில் நடைபெற்ற பண்பாட்டுக்கழக மாநிலத்தலைவரின் மணிவிழா, தேனி மாவட்டத்தில் நடைபெற்ற பண்பாட்டு கழக கூட்டம் போன்றவற்றில் பங்கேற்று உறையாற்றியுள்ளார். கோவை அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனும் - மகாத்மா காந்தியும் என்ற தலைப்பில் கல்லூரி மாணவிகளிடையே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உறையாற்றியுள்ளார். திருச்செந்தூர் தொட்டியநாயக்கர் மடத்திலுள்ள  கட்டபொம்மன் வைரவேல் மற்றும் அணிகலன்களை திருச்செந்தூர் முருகன் சிலைக்கு சாற்றும் வாய்ப்பை பாஞ்சாலங்குறிச்சி ஆலயக்குழு ஒருமுறை திரு.அரங்கசாமி அவர்களுக்கு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோவை மாவட்டம், காரமடையில் உள்ள புகழ்பெற்ற அரங்கநாதர் திருக்கோவிலில் 1991-லிருந்து அறங்காவலராக இருந்து வந்தார். 

மூன்று வருடங்களுக்கு முன் காரமடை ஊர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், காரமடையில் T.M.R மணிமேகலை என்ற பெயரில் அறக்கட்டளையை நிறுவி ஏழை-எளிய குழந்தைகளுக்கு கல்வி, உணவு என பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள விண்ணப்பள்ளியில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்திற்கு பத்தியப்பட்ட நாராயணப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 6.50-ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து சமுதாயத்திற்கு மீட்டுக் கொடுத்தார். 


மாணவப்பருவத்திலிருந்தே திராவிட இயக்கத் தொண்டராக வளர்ந்தவர், 1955-இல் மாணவரணிச் செயலாளர் பொறுப்பு வகித்துள்ளார். அதன்பின் காரமடை வட்டக்கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், மிசா சட்டத்தில் கைதாகி பதினோரு மாதம் சிறைபட்டுக்கிடந்தார். தி.மு.கழகத்தில் இருந்தபொழுது இந்தி எதிர்ப்பு போராட்டம், இலங்கைத்தமிழர் பிரச்சினை என பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு 37-முறை சிறை சென்றுள்ளார் திரு.அரங்கசாமி அவர்கள். 1993-இல் திரு.வைகோ அவர்கள் மதிமுக-வைத் துவங்கியபொழுது அக்கட்சியில் இணைந்து செயல்பட்டவர், கட்சியின் போராட்டங்கள், நடைபயணங்கள், எழுச்சிப்பேரணிகளில் கலந்துகொண்டுள்ளார். மதிமுக-வின் காரமடை ஒன்றிய அவைத்தலைவராக வாழ்நாள் இறுதிவரை பணியாற்றிய திரு.அரங்கசாமி அவர்கள், 2011-ஆம் ஆண்டு நடைப்பெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார். வெற்றி தோல்விகள் குறித்து கவலைகொள்ளாமல் தொடர்ந்து கட்சிப்பணியிலும், பொதுமக்கள் பிரச்சினையிலும் தீவிரமாக  செயல்பட்டு, பொதுமக்களுக்கும், சமுதாய மக்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்துவந்தார்.

பொதுவாழ்விலும்,அரசியலிலும் நீண்ட அனுபவம் வாய்ந்தவரான திரு.அரங்கசாமி அவர்கள், எண்பது வயதைத் தொட்டுவிட்டபொழுதிலும் சளைக்காமல் இறுதிவாழ்நாள் வரை சமுதாயப்பணியாற்றி, சமுதாயப்பணியாற்றுபவர்களுக்கு உந்து சக்தியாகவும், வழிகாட்டியாகவும் இருந்தார். சமுதாயத்தில் ஓரளவு படித்தவர்களும், வளர்ந்து விட்டவர்களும், அரசுப்பணிகளில் அமர்ந்து விட்டவர்களும் சமுதாயத்திற்கு உதவும் எண்ணம் சிறிதுமில்லாமல் விலகியிருப்பது குறித்து தன் கவலையை அடிக்கடி வெளிப்படுத்தி வந்தவர், வாரிசுகள் ஏதுமில்லாத நிலையில் சமுதாய மக்களையே தனது வாரிசுகளாக நினைத்து தான் வாழ்ந்த எண்பது ஆண்டு வரை பணியாற்றியவர் திரு.அரங்கசாமி அவர்கள்.

இறுதிநாள்வரை ஆரோக்கியமாக இருந்தவர் கொரோனோ பெருந்தொற்று சமயத்தில் பாதிக்கப்பட்டு, சிலநாள் மருத்துவ சிகிச்சைக்குப்பின் 29.08.2020 அன்று சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரிடமும் அன்புபாராட்டும் இயல்பைக்கொண்டவராக இருந்த திரு.அரங்கசாமி அவர்கள், வாழ்நாளெல்லாம் சமுதாய சிந்தனையுடன் வாழ்ந்த பெருமகனார். சமுதாயத்திற்கு அவராற்றிய சேவைகள் காலம் கடந்தும் பேசப்படும் என்பதில் ஐயமில்லை.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved