🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சங்கம் வளர்த்த தங்கம் - சென்னை.திரு.S.ராமசாமி.

திரு.S.ராமசாமி அவர்கள் 15.07.1950-இல் விருதுநகர்  மாவட்டம், மெட்டுக்குண்டு   அருகேயுள்ள பொட்டல்பட்டி கிராமத்தில் திரு.சுப்பையா – திருமதி.சின்னக்கம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப்பிறந்தார். பொட்டல்பட்டி கிராமத்திற்கு அருகாமையிலுள்ள குல்லூர்சந்தை என்னும் கிராமத்தில் ஸ்ரீ வீரப்பா வித்யாலயா உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலை கல்வி வரை பயின்றார், பின் விருதுநகரில் அரசு தொழில்பயிற்சி கல்லூரியில் மெஷினிஸ்ட் துறையில் பட்டயம் பொற்றுள்ளார்.  இவருக்கு திருமணமாகி திருமதி.பாண்டியலட்சுமி என்ற மனைவியும் R.ராம்குமார், R.ரத்தினவேல் பாண்டியன் என்ற இரு மகன்களும், R.விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

தனது தொழில்பயிற்சி கல்லூரி படிப்பை முடித்த ஒருசில வருடங்களிலேயே சொந்த முயற்சியாலும், நண்பர்கள் உதவியாலும் 1970 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்து வேலை தேடி அலைந்து திரிந்து, பின் ஒரு சிறிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து 6 மாதங்கள் பணியாற்றினார். அதில் திருப்தியடையாதவர் தொடர் விடா முயற்சியால், 1970 ஆம் ஆண்டு புகழ்பெற்ற சென்னையிலுள்ள லூகாஸ் T.V.S நிறுவனத்தில் டெக்னீசியன் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவுடன், சென்னையில் குடியேறியவர், 2010-ஆம் ஆண்டு பணி ஓய்வு பெறும்வரை அந்நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தனது சொந்த ஊரிலுள்ள மக்களுக்கும், சமுதாயத்தவர்களுக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்.

1983-ல் சென்னை செங்குன்றத்தில் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முதன்முதலாக கலந்துகொண்டு, சமுதாயப்பணியில் அடியெடுத்து வைத்தார். அதன்பின் சென்னையிலுள்ள சமுதாய உறவுகள் இணைந்து மே-2005 இல் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தை துவங்கியபொழுது திரு.ராமசாமி அவர்களை பொருளாளராக நியமிக்கப்பட்டார். இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டவர், நிர்வாகிகளுடன் இணைந்து சென்னை மாநகரம் முழுவதுமுள்ள தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினரை தேடிச்சென்று உறுப்பினராக சேர்த்தனர். ஏறக்குறைய 500 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை இணைத்து மாத சந்தாவாக ரூ.25/- நிர்ணயம் செய்தபொழுது, சந்தா வசூல் செய்ய ஓயாமல் மாநகரம் முழுவதும் வலம்வந்தவர். ஏறக்குறைய அனைத்து உறுப்பினர்களின் விலாசங்களுக்கு நேரடியாக சென்று சந்தா வசூல் செய்தவர், சங்கத்தின் காலண்டரை உறுப்பினர்களின் வீடுதேடு சென்று வழங்கியவர் திரு.இராமசாமி அவர்கள். 500-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்தபொழுதிலும் நிரந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 200 முதல் 250 வரை மட்டுமே இருந்தது. மற்றவர்கள் சென்னையில் தற்காலிகமாக குடியேறி இடம்பெயர்ந்தவர்கள் அல்லது பணிமாறுதல் பெற்று சென்றவர்களாக இருந்தனர். அப்படி சராசரியாக 200-250 உறுப்பினர்களிடம் சந்தா வசூல் செய்து, சிறுக சிறுக சேமித்து, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்திற்கு என சொந்தமாக செங்குன்றம் அருகே 1800 சதுரடி நிலம் 2007-ஆம் ஆண்டு வாங்கப்பட்டது. இந்த நிகழ்வு சங்க நிர்வாகிகளுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது, மாதந்திரக்கூட்டத்தை தவராமல் நடத்திவந்த சங்கத்தினர், அடுத்த அடுத்த தங்களின் கனவுகளுக்கு வண்ணம்கொடுத்தனர். அவர்களின் கனவுக்கோட்டைக்கு 1800 சதுர அடி போதுமானதாக இருக்காது என்று முடிவு செய்தவர்கள், மீண்டும் சென்னையிலுள்ள சமுதாய மக்களிடம் நிதி திரட்டி அடுத்த ஒருசில வருடங்களில் 3600 சதுர அடி நிலம் வாங்க முடிவு செய்தவர்கள், 14.12.2009-ல் அதை வெற்றிகரமாக நிறைவேற்றினர். 

அதன்பின் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட ஆயுத்தமான நிலையில், அப்பணியில் முழுமையாக தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் திரு.இராமசாமி அவர்கள் கட்டிடப்பணிக்கு ஆட்களைத் திரட்டவும், மேற்பாவையிடவும் யாரும் முன்வரதா வேளையில், அப்பொறுப்புகளையும் தன் தோள்களில் சுமந்துகொண்டவர், மேற்பார்வைபணியில் மட்டுமல்லாது, கட்டிடப்பணியிலும் தானே ஈடுபட்டார். மேலும் சுற்றுப்பகுதியில் ஒட்டல்கள், போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் கட்டிடத்தொழிலாலர்களுக்கு தேவையான சாப்பாடு, போக்குவரத்து செலவை தன் சொந்தசெலவில் செய்துக்கொடுத்தார். நிதிபற்றாக்குறையால் அவ்வப்பொழுது கட்டிடப்பணிகள் தடைபட்டபொழுது, மீண்டும் மக்களிடம் சென்று மாதசந்தாவையும், நன்கொடையும் வசூல் செய்து கட்டிடப்பணியை நிறைவு செய்ய இரவு,பகல் பாராமல் வேலை செய்த பெருமகனார் திரு.இராமசாமி என்றால் மிகையல்ல. என்பது குறிப்பிடத்தக்கது. தன் உழைப்பை மட்டுமல்லாது கட்டிடத்திற்கு நுழைவு வாயில் உட்பட மூன்று கதவுகளை சங்க உறுப்பினர்ள் ஒருசிலருடன் இணைந்து அமைத்துக்கொடுத்து பொருளாதர ரீதியாகவும் தன்பங்களிப்பை செவ்வனே நிறைவேற்றினார். 

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நிர்வாகப்பணியிலும், கட்டிடப்பணியிலும் முழிமையாக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு பணியாற்றியவர்,  2010-ல் தன் வாழ்வில் கடுமையான சோதனைகளை சந்தித்தார்.  அடுத்தடுத்த துன்பங்கள் சூழ்ந்தபொழுது அதை எதிர்கொண்டு வந்தவரின் மன உறுதியைக்குலைக்கும் வகையில் கண்பார்வை பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்தபின் ஒரு கண்ணை இழந்தார். அதுவரை சமுதாயப்பணியையும், குடும்பத்தையும்  இருகண்களாகப் பார்த்தவர், ஒருகண்ணில் மட்டுமே பார்க்க முடியும் என்றபொழுது குடும்பத்தைத் துறந்து சமுதாயப்பணியையே பார்த்தார் என்று சொல்லுமளவிற்கு சங்க நிர்வாகப்பணியிலோ, கட்டிடப்பணியிலோ சிறுதும் தொய்வின்றி ஈடுபட்டு மன நிறைவு கொண்டார் 

2005-முதல் 2017 வரை சங்கத்தின் பொருளாளராக இருந்து வழிநடத்தியவர், தான் கொஞ்சம், கொஞ்சமாக மெருகேற்றிய சங்கம் மேலும், மேலும் ஆலமரமாக வளர்ந்து சமுதாய மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற அடிப்படையில், இளைய சமுதாத்தினரிடன் பொறுப்புகளை ஒப்படைத்து தான் வகித்து வந்த பதவியிலிருந்து விலகினார். பதவி மட்டும் தான் விலகினாரேயன்றி இன்றும் அதே உத்வேகத்துடன், புதிய நிர்வாகிகளுக்கு வழிகாட்டியாக, சங்கத்தின் அனைத்து வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார். பொதுவாக தான் வகிக்கும் பொறுப்புகளில் தனது கடைசிகாலம் வரை ஒட்டிக்கொண்டிருக்கவேண்டும் என்ற மனநிலையிலுள்ள இன்றைய காலகட்டத்தில், தாங்கள் ஆரோக்கியமாக இருக்கும்பொழுதே இளைய சமுதாயத்திடம் பொறுப்புகளை ஒப்படைத்து, அவர்களுக்கு ஆலோசகராக இருந்து அவர்களுடன் இணைந்து வழிநடத்தும் பாங்கு,என அனைத்திலும் முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் திகழ்கின்றனர் என்றால் மிகையல்ல. தங்கள் முடிவை நியாயப்படுத்தும் வகையில், இச்சங்கம் இந்த மூன்றாண்டுகளில் கூடுதலாக 10000 சதுர அடி கட்டிடத்தை நிறைவு செய்ததுடன், தமிழகம் தாண்டி, உலமுழுவதுமுள்ள சமுதாய பிரபலங்களை அழைத்து வந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது அவர்களின் முடிவை நியாயப்படுத்தியுள்ளது. 

தொடர்ந்து சமுதாயப்பணியில் ஈடுபட்டு வரும் திரு.ராமசாமி அவர்களை ஊக்கப்படுத்தும் அவரின் துணைவியார் திருமதி.ஆர்.பாண்டியலட்சுமி அவர்களின் பங்களிப்பு மகத்தானது. திருமதி.பாண்டியலட்சுமி அவர்களின் தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில், அவருக்கு சங்கம் விருது வழங்கி பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. தனது பணிகளுக்கான அங்கீகாரம், மரியாதை, சங்கமும், சமுதாயமும் வழங்கியதில் முழுமனநிறைவுடனும் இருந்த பொழுதும் “சங்க கட்டிடம்” மீதமுள்ள சிறுசிறு பணிகளை விரைவில் நிறைவு செய்து சமுதாயத்திற்கு முழுமையாக அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார். இதை நிர்வாகம் கவனத்தில் கொண்டு விரைந்து பணியாற்ற வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கிறார் திரு.இராமசாமி அவர்கள். 

80-களில் பார்வையாளராக சமுதாயக்கூட்டங்களில் கலந்து கொண்டு, பின் ஒத்த கருத்துடைய சிந்தனையாளர்களை ஒருங்கிணைத்து, புதிய சங்கம் கண்டு, அச்சங்கத்தின் வளர்ச்சிக்கு முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட திரு.இராமசாமி அவர்களின் புகழ், இன்று சென்னையில் ஓங்கி வளர்ந்திருக்கும் கட்டிடம் உள்ளவரை அவரின் புகழ் நீடித்திருக்கும். அவரின் எண்ணங்கள் நிறைவேறும் காலம் அதிக தூரமிருக்கப்போவதில்லை, அவரின் சேவை என்றென்றும் தொடர வேண்டும் என வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved