ஊராட்சி மன்றத் தலைவர் - நிலக்கோட்டை .திரு.A.அன்பழகன்

திரு.A.அன்பழகன் அவர்கள் 02.05.1973 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், கொம்புக்காரன்பட்டி கிராமத்தில் திரு. செவத்தசாமி (எ) அழகர்சாமி – திருமதி. தனலெட்சுமி தம்பதியினருக்கு, விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். மேல்நிலைப்பள்ளி இறுதியாண்டுவரை படித்தவர், பூர்வீகத்தொழிலான விவசாயத்திலும், மலர்கள் வியாபாரத்திலும் தீவிர கவனம் செலுத்தினார். திருமதி. A.சண்முகப்பிரியா அவர்களை கரம்பிடித்தவருக்கு, A.ஸ்ரீராம் என்ற மகனும் A.அனுபிரபா, A.சௌமியா என்கிற இரு மகள்களும் உள்ளனர்.
படிப்படியாக வியாபாரத்தில் நிலைநிறுத்திக்கொண்டவர், மேலும் தொழில் சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கும் வகையில், நிலக்கோட்டை நகரில், ஸ்ரீராம் தங்க நகைக்கடை என்ற பெயரில் தங்க வணிகத்திலும் ஈடுபட்டுவருகிறார். நமது சமுதாயத்தில் கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என யாரை எடுத்துக்கொண்டாலும், பிரதானமாக ஈடுபடும் தொழிலைத்தாண்டி, சமூகம், சமுதாயம் சார்ந்த செயல்பாடுகளில் பெறும்பாலானவர்கள் ஈடுபடுவதில்லை. அதற்கு விதிவிலக்காக உள்ள ஒருசிலரில் திரு.அ.அன்பழகன் அவர்களும் ஒருவர் என்பது சிறப்பு. அந்தவகையில், விவசாயக்குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தொழில்துறையிலும் கால்பதித்து பல்வேறு தொழிகளை நடத்திவருபவர், நிலக்கோட்டை ரோட்டரி கிளப்பில் இணைந்து சமூகப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். திறமையானவர்களை சமுதாயம் அங்கீகரிப்பதில் தாமதிக்கலாம், ஆனால் பொதுநல அமைப்புகள் தாமதிக்குமா என்ன? தங்களுக்கு கிடைத்த பொக்கிஷமாக, ரோட்டரி கிளப்பின் முக்கிய நிர்வாகியாக நியமித்து அவரின் திறமைகளை சமூகத்திற்கு பயன்படுத்திக்கொண்டது. பொதுநலம் சார்ந்து சமூகப்பணியில் ஈடுபட்டிருந்தாலும், அரசியல் இவரை ஈர்க்கவில்லை.
திரு.அன்பழகன் அவர்களின் ரோட்டரி கிளப்பில் இணைந்து மேற்கொண்ட சமூகப்பணிகளை கண்ணுற்ற மக்கள், இவரின் சேவையை தங்கள் கிராமத்திற்கு பயன்படுத்திக்கொள்ள விரும்பி, கடந்த டிசம்பர்-2019-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், கூவனூத்து ஊராட்சி மன்றத் தேர்தலில் சுயோட்சையாக களமிறக்கி வெற்றிவாகை சூட்டினர். கூவனூத்து ஊராட்சியில், எக்கட்சியையும் சாராது சுயோட்சை வேட்பாளர் வெற்றிவாகை சூடியது, நாற்பதாண்டு கால வரலாற்றில் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சாதாரண விவசாயக்குடும்பத்தில் பிறந்த ஒருவர், நாற்பதுகளில் நகர்வதற்குள், பல்வேறு துறைகளில் தடம்பதித்து வெற்றிவாகை சூடுவது சமுதாய வரலாற்றில் கல்வெட்டுக்களில் பொறிக்கப்படவேண்டியது என்றால் மிகையல்ல. இளம் தலைவராக உருவாகிவரும் திரு.அன்பழகன் அவர்கள், இப்புதிய பொறுப்பின் மூலம் சாதி,மதம்,இனம்,மொழி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றி, மேலும் பல வெற்றிகளை பெற்று சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.