🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம்-பொள்ளாச்சி.திரு.K.T.மோகன்ராஜ்

திரு.K.T.மோகன்ராஜ், அவர்கள் 1974 ஆம் வருடம், கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள குள்ளக்காபாளையம் கிராமத்தில், திரு.தங்கவேல் – திருமதி.சரோஜினி தம்பதிக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவருக்கு இரண்டு மூத்த சகோதரிகளும், ஒரு இளைய சகோதரரும், சகோதரியும் உள்ளனர். வரலாற்றுத்துறையில் இளங்கலை பட்டம் (B.A.,) பெற்றுள்ள திரு.கே.டி.மோகன்ராஜ் அவர்களுக்கு திருமதி.M.பிரியசிந்து என்ற மனைவியும், M.ஷாலினி.B.E., என்ற மகளும் உள்ளனர்.


விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட திரு.கே.டி.மோகன்ராஜ் பல்துறை வித்தகர் என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயம் தவிர ஜோதிடம், வாஸ்து, ஆன்மீகம், அரசியல், தொழில், என பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்தவர். சமுதாயத்தின்பால் இருந்த பற்றின் காரணமாக, சமுதாயபணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவருக்கு, 2006-ஆம் ஆண்டு விடுதலைக்களம் ஏற்பாட்டில், கோவை மாவட்டத்திலுள்ள சமுதாய பிரமுகர்கள் உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கான  பாராட்டுவிழா கூட்டம், திரு.கே.டி.மோகன்ராஜ் அவர்களின் பொதுவாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. சமுதாயத்திற்காக இவரின் அர்ப்பணிப்பும், உழைப்பும், அன்றைய விடுதலைக்களம் அமைப்பின் பொதுச்செயலாளராகவும், பாராட்டுவிழாக் கூட்டத்தின் ஏற்பாட்டாளராகவும் இருந்த ஈச்சனாரி திரு.க.மகாலிங்கம் மற்றும் ஈச்சனாரி திரு.சிவக்குமார் ஆகியோரின் கவனத்தை ஈர்த்தது. இவரது சேவையை விடுதலைக்களம் அமைப்பிற்கு பயன்படுத்திக்கொள்ள விரும்பிய தலைவர்கள், 2007-ல் திரு.கே.டி.மோகன்ராஜ் அவர்களை, விடுதலைக்களம் அமைப்பின் கோவை மாவட்ட தலைவராக நியமித்தனர்.

இவர் மாவட்ட தலைவராக பொறுப்பேற்றபின், கோவை மாவட்டத்தில் கம்பளத்தார் வசிக்கும் அனைத்து கிராமங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து விடுதலைக்களம் அமைப்பின் கிளைகளை ஏற்படுத்தினார். இதனால் மாவட்டத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட ஓராண்டுக்குள்ளாகவே 2008-ல், சமுதாயத்திலுள்ள முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் ஆதரவுடன், விடுதலைக்களம் சார்பில், மாபெரும் சமுதாய மாநாட்டை வெற்றிகரமாக பொள்ளாச்சியில் நடத்திக்காட்டினார். அனைத்து தரப்பு மக்களிடமும் நெருங்கிய நட்பும், பரந்துபட்ட தொடர்பும் கொண்டிருக்கும் திரு.கே.டி.மோகன்ராஜ் அவர்கள், அப்பகுதியிலுள்ள சமுதாய தலைவர்கள், இளைஞர்கள் ஆதரவுடன், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு, 2010-ஆம் ஆண்டு கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஈச்சனாரியில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும், அமைச்சர் பெருமக்களையும், சமுதாய தலைவர்களையும், அமைப்புகளின் தலைவர்களையும் ஒருங்கிணைத்து மாவீரன் சிலையை திறந்துவைத்ததில் பெரும்பங்காற்றினார். இது மேற்கு மண்டலத்தில், திருப்பூருக்கு அடுத்தபடியாக மாவீரன் கட்டபொம்மனுக்கு அமைக்கப்பட்ட ஒரே சிலை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மாவட்டத்தலைவராக பொறுப்பு வகித்த காலத்தில், தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினர் மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கான ஜாதிச்சான்றிதழ் பெறுவதில் இருந்த தடைகளை போராட்டங்கள் மூலம் தகர்த்தெரிந்தார்.


இவரின் சமுதாயப் பணியும், ஈடுபாடும் அரசியல் கட்சிகளின் பக்கம் கவனத்தைப் பெற்றது. பல்வேறு கட்சிகளிலிருந்து வந்த அழைப்பையும் நிராகரித்தவர், புரட்சிதலைவி அம்மாவின் ஆளுமையால் வசீகரிக்கப்பட்டவர், அஇஅதிமுக-வில் இணைத்துக்கொண்டு தன் அரசியல் பயணத்தை துவக்கினார். உள்ளூர் கட்சித்தலைவர்களின் அன்பையும், அபிமானத்தையும் பெற்றவர், 2011-ல் பொள்ளாச்சி கிழக்கு ஒன்றிய பொருளாளராக நியமிக்கப்பட்டார். அப்பொறுப்பில் திறம்பட செயல்பட்டதற்காக மண்டல தலைவராகும் வாய்ப்பு கிட்டியது. தவிர, குள்ளக்காபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றிக் கொண்டிருக்கிறார். கோவை மாவட்டத்தில், கம்பளத்தார் இல்ல சுக-துக்கங்கள் அனைத்திலும் தவறாது கலந்துகொள்பவர். பலகுடும்பங்களில் மணமக்களை இணைப்பதற்கு பாலமாக இருந்து, திருமணங்களை நடத்தி வைத்துள்ளார். திரு.கே.டி.மோகன்ராஜ் அவர்கள் தொடர்ந்து பொதுவாழ்விலும், சமுதாயப்பணியிலும் வெற்றியையும், புகழையும் குவித்து சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட அன்புடன் வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved