ஒன்றியக்குழு உறுப்பினர் - விளாத்திக்குளம். திரு.M.தனஞ்செயன்.M.Sc.
திரு.M.தனஞ்செயன்.M.Sc., அவர்கள் 1960 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் வட்டம், சேர்வைக்காரன்பட்டி கிராமத்தில், திரு.மூக்காண்டி நாயக்கர் - திருமதி.புஷ்பராஜமணி தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவருக்கு திருமணமாகி திருமதி.T.சுசிலா (இவரைப்பற்றி மேலும் விபரங்களுக்கு நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) என்ற மனைவியும், T.மகேஷ்வரசூரியன்.B.E., மற்றும் T.யுவகிருஷ்ணன் B.E., என்ற இருமகன்கள் உள்ளனர்.
தென்பாண்டிச்சீமையில், தொட்டிய நாயக்கர் இனத்தின் முகமாக இருந்து, இராஜகம்பள மஹாஜன சங்கத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவராக விளங்கிய திரு.சோலையப்ப நாயக்கரின் மகள் வழிப்பெயரனாவார் திரு.தனஞ்செயன் அவர்கள். இவரின் தந்தையார் திரு.மூக்காண்டி நாயக்கர் அவர்கள் முன்னோடி சமுதாய சேவகரும், தியாகியுமாக விளங்கியவர். இன்றுவரை கூட்டுக்குடும்ப பாரம்பரியத்தை கைவிடாது, தனது சிறிய தகப்பனார் திரு.பெருமாள் நாயக்கருடன் இணைந்து பேணிக்காத்து, அரசியல், சமுதாயப்பணிகளை திறம்பட மேற்கொண்டு வரும் திரு.தனஞ்செயன் அவர்கள், 1970 களில் சமுதாயத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்த முதுநிலை பட்டதாரிகளில் ஒருவர் என்பது கூடுதல் சிறப்பு. 1993-ல் அஇஅதிமுகவில் கிளைக் கழக செயலாளராக தன் அரசியல் பயணத்தை துவங்கிய திரு.தனஞ்செயன் அவர்கள், ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
2006 ஆம் ஆண்டு ஒன்றியக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதுடன் புதூர் ஒன்றிய துணைப்பெருந்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2010-2011 வரை புதூர் ஒன்றிய பெருந்தலைவராக (பொறுப்பு) சிறப்புற பணியாற்றி மக்களின் அபிமானத்தை பெற்றவர். சாத்வீக குணம், அடக்கம், எளிமை, அனைவரிடமும் அன்புபாராட்டல் ஆகிய பண்புநலன்களைக் கொண்ட திரு. தனஞ்செயன் அவர்களை மீண்டும் 2011 ஆம் ஆண்டு ஓன்றியக்குழு உறுப்பினராக அப்பகுதி மக்கள் தேர்ந்தெடுக்க, புதூர் ஒன்றிய பெருந்தலைவர் பதவி தேடிவந்து தனக்கு பெருமை சேர்த்துக்கொண்டது.
தலைமுறை தலைமுறையாக மக்கள் சேவையில் இருக்கும் இவரின் குடும்பத்தின் மீதான அன்பின் மிகுதியால்,அப்பகுதி மக்கள் கடந்த டிசம்பர்-2019-ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திரு.தனஞ்செயன் அவர்களையும், துணைவியார் திருமதி.சுசிலா தனஞ்செயன் அவர்களையும் ஒன்றியக்குழு உறுப்பினராக வெற்றிபெறச் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல, இம்முறை திருமதி.சுசிலா தனஞ்செயன் அவர்களையும் ஒன்றிய பெருந்தலைவர் அரியாசனத்தில் அமர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில், திருமதி.சுசிலா மட்டுமே கம்பளத்தார் சமுதாயத்தில் ஒன்றிய பெருந்தலைவராகவுள்ள ஒரே பெண்மணி என்பதும் தனித்துவமானது.இடைப்பட்ட காலத்தில் 2016-ல் நடக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போக, இவரின் திறமையை பொதுமக்கள் சேவைக்கு பயன்படுத்திக்கொள்ளும் வகையில் மாண்புமிகு அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரின் பரிந்துறையின்பேரில், தமிழக அரசு தூத்துக்குடி மாவட்ட, இந்து சமய அறநிலையத்துறை, இயக்குனர் பதவியை வழங்கி கௌரவித்தது.
இவரின் பெயருக்கு ஏற்றாற்போல் “தனமும்-ஜெயமும்” இவருடனே ஒட்டிக்கொண்டது எப்படி சாத்தியமானது? என்பதை ஒரு உதாரணத்துடன் நினைவு கூறுகின்றார், சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மூத்த நிர்வாகி. எங்கள் சங்கத்திற்கென்று தமிழகம் முழுவதும் உறுப்பினர்கள் இல்லை, கிளைகள் கிடையாது. சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே உறுப்பினர் ஆகமுடியும், அதிகபட்சம் 200 உறுப்பினர்களைக் கொண்ட இச்சங்கம், தமிழகம் முழுவதுமுள்ள கம்பளத்து சமுதாயத்திலுள்ள முக்கிய பிரமுகர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து விழா நடத்துவது வழக்கம். அப்படி நடக்கும் விழாவிற்கு, சிறப்பு விருந்தினராக அழைக்கப்படும் அரசியல் பிரபலங்களிடம் முன்கூட்டியே தகவல் கொடுத்து, அவர்களின் பெயர்களை பத்திரிக்கைகளில் அச்சிட்டு, சமூகவலைதளங்கள் மூலம் உலகம் முழுவதும் கொண்டு சேர்த்து நடைபெறும் நிகழ்ச்சிக்கு வருவதாக ஒப்புக்கொண்ட பெரும்பாலானவர்கள் வராமல் போவதுண்டு. முன் கூட்டியே கலந்து கொள்ள முடியாத காரணத்தையும் சொல்லமாட்டார்கள், நிகழ்ச்சிக்கு பின்னரும் தங்கள் வருத்தத்தை தெரிவிக்கமாட்டார்கள். ஆனால் திரு.தனஞ்செயன் அவர்களுக்கு தகவல் கொடுத்து, அவர் வருவதாக ஒப்புக்கொண்டுவிட்டால், இவர்களால் தனக்கு என்ன பயன் என்று நினைக்காமல், தான் மட்டுமல்லாது, அவருடன் சமுதாயத்தை சேர்ந்த குறைந்தது நான்கு பேருடன் வந்து கலந்துகொள்வார். தன்னலம் கருதாது, சமுதாயத்துடன் இணைந்து செல்லும் இந்த பக்குவம் அரசியலுக்கு தேவையான மிக அடிப்படையான பண்பு. தன் தகுதியையும், குடும்ப பாரம்பரியத்தையும் என்றும் நினைவில் கொண்டு செயல்படும் திரு.தனஞ்செயனிடம் பதவிகள் வந்து ஒட்டிக்கொள்வது ஒன்றும் வியப்பில்லை என்று தன் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் அந்த மூத்த நிர்வாகி. மேலும், அரசியலில் இருப்பவர்களும்,அரசியலுக்கு புதிதாக வரும் கம்பளத்து இளைஞர்களும், திரு.தனஞ்செயன் அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இப்படி வட்ட, மாவட்ட எல்லைகளைத் தாண்டி, மாநிலம் முழுவதும் சமுதாயத்தினரிடம் நன்மதிப்பை பெற்றுள்ள திரு.தனஞ்செயன் அவர்கள், இப்புதிய பொறுப்பின் மூலம் சாதி, மதம், இன, மொழி அடையாளங்கள் கடந்து பாரபட்சமின்றி அனைவருக்கும் சேவையாற்றி வாய்ப்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.