🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சாதிக்க சாதி தடையில்லை நிரூபித்த திருமதி.புவனேஷ்வரி பாண்டியன்!

திருமதி.புவனேஸ்வரி பாண்டியன் அவர்கள் 12.07.1986-இல் மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள T.கல்லுப்பட்டி கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட திரு.K.ஜெயராமன்- திருமதி.மாரியம்மாள் தம்பதியினருக்கு மகளாகப்பிறந்தார்.  சென்னைக்கு குடிபெயர்ந்த குடும்பம், மதுரை ஸ்ரீ பாண்டி முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தாம்பரத்தில் ஹோட்டல் தொழில் செய்து வருகின்றனர். திருமதி.புவனேஸ்வரி அவர்கள் சென்னை  கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் இளங்கலை கணக்கியல் (B.Sc-Maths) பட்டப்படிப்பு முடித்துள்ளார். 


இவரது கணவர் திரு.பாண்டியன் அவர்கள் 15.04.1983-இல் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள கொல்லவீரம்பட்டி கிராமத்தை பூர்வீகமாக கொண்ட விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். ஐடிஐ மற்றும் இளங்கலை வரலாறு படித்துள்ள திரு.பாண்டியன்,மதுரை,கோவை மற்றும் புதுடெல்லியில் உள்ள  தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தோடு சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்திலும் 5 வருடங்கள் பணிபுரிந்துள்ளார். அதன்பிறகு நாடு திரும்பியவர் 2011-ஆம் ஆண்டு ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) என்கிற அரசு பொதுத்துறை நிறுவனத்தில் ஊழியராக இணைந்து பணியாற்றி வருகிறார்.

சிறந்த பேச்சாளரான திரு.பாண்டியன் பெல் நிறுவனத்தில் இயங்கிவரும் தொழிற்சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தொழிற்சங்க பணிகளில் தீவிரமாக செயல்படத் தொடங்கினார். தனது தனித்துவமான செயல்பாடுகளாலும், பேச்சாற்றாலாலும் பிரதான தொழிற்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர், செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகள் மிகக்குறுகிய காலத்தில் இவரைத் தேடி வந்தது. தற்பொழுது அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியை அலங்கரித்து சிறப்புடன் பணியாற்றி வருகிறார்.


திரு பாண்டியன் அவர்கள் தொழிற்சங்க பணிகளில் மட்டுமல்லாது நமது சமுதாய பணிகளிலும் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர். பெல் நிறுவனத்தில் சேர்ந்த கையோடு அதே ஆண்டு (2011) விடுதலைக்களம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர் இன்றுவரை தொடர்ந்து சமுதாய பணிகளிலும் குறைவின்றி தன் பங்களிப்பை அளித்து வருகிறார்.

அக்கட்சியின் சென்னை மண்டல தலைவராக பொறுப்பு வகிக்கும் திரு.பாண்டியன் அவர்கள் விடுதலைக்களம் நடத்திய தொட்டியம், மதுரை, விருதுநகர்,ஈரோடு, அந்தியூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற மாநாடுகளிலும், நாமக்கல், ராசிபுரம், விருப்பாட்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களிலும், சென்னையில் நடத்திய போராட்டத்திலும் கலந்துகொண்டு சமுதாய கடமையை நிறைவேற்றியுள்ளார்.

தொழிற்சங்கம் மற்றும் சமுதாய தளங்களில் சிறப்பான செயல்பாடுகளால் பிரதான கட்சிகளின் கவனத்தைப் பெற்ற திரு.பாண்டியன், திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியாக இருந்தநிலையில் தொழிற்சங்க நண்பர்களின் ஆலோசனையை ஏற்று 2020-இல் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். 


திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற பிரதான கட்சிகளில் கம்பளத்தார்கள் பரம்பரை பரம்பரையாக உறுப்பினராக இருந்தாலும் கிளைக்கழக செயலாளர், ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கே போராடி வருகையில், திரு.பாண்டியன் கழகத்தில் இணைந்த ஒருசில மாதங்களில், மாவட்டக் கழகத்தினரின் அன்பையும், மாவட்டச் செயலாளரும், தமிழக கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சருமான திரு.ஆர்.காந்தி அவர்களின் நன்மதிப்பைப் பெற்று கடந்த 2021-அக்டோபர்'06-இல் நடைபெற்ற 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில், கம்பளத்தார் சமுதாய வாக்குகளே இல்லை என்ற நிலையிலும், தனது துணைவியார் திருமதி.புவனேஸ்வரி அவர்களுக்கு வாலாஜா ஊராட்சி ஒன்றிய 5-வது வார்டு கவுன்சிலர் வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்று, தனது துணைவியாரை சுமார் 700 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிபெறச் செய்தார்.


"உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் 

மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து" 

என்கிற திருக்குறளுக்கு ஏற்ப திருமதி.புவனேஸ்வரி பாண்டியன் அவர்கள் தொடர்ந்து அரசியல் களத்தில் அடுத்தடுத்த வெற்றிகளை அடைய வேண்டுமெனவும், எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து தொடர்ந்து மக்கள் பணியை சிறப்புடன் செய்திட வேண்டுமெனவும் வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved