🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மாமன்ற வெற்றி நாயகர்! - வைகோ.பழனிச்சாமி

திரு.P.பழனிச்சாமி அவர்கள் 31.10.1965-இல் கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை அருகேயுள்ள கோடங்கிபட்டி கிராமத்தில் திரு.பொம்மா நாயக்கர் - திருமதி.பழனியம்மாள் தம்பதியினருக்கு மகனாகப்பிறந்தார். இவர் எஸ்.எஸ்.எல்.சி வரை படித்துள்ளார். திருமதி.ராஜேஷ்வரி, திருமதி.லோகாம்பாள் என்ற இரு மனைவிகளும், P.ஜீவிதா என்ற மகளும் P.கலைச்செல்வன், P.கலையரசன் என்று இரு மகன்களும் உள்ளனர்.


பள்ளிபடிப்பிற்குப்பின் பெற்றோர்களுக்கு உதவியாக விவசாயப்பணிகளில் ஈடுபட்ட வந்தவர், 1985-86 காலகட்டத்தில் அதிமுக-வில் இணைந்து அரசியலில் அடியெடுத்து வைத்தார். 1992-இல் அதிமுக-வில் நடைபெற்ற உட்கட்சித் தேர்தலில் தாந்தோன்றிமலை பேரூர் கழகச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்டவர், அன்றைய மாவட்ட அமைச்சருக்கு எதிராக நூற்றுக்கணக்கான கட்சியினரோடு தலைமைக்கழகத்தை முற்றுகையிட்ட போராட்டம் நடத்தியதின் முடிவில் அக்கட்சியிலிருந்து விலகினார். அதன்பின் 1993-இல் வைகோ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கியபொழுது இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களோடு அக்கட்சியில் இணைந்தார். 


மதிமுக-வில் தீவிரமாக பணியாற்றிதால் "வைகோ பழனிச்சாமி" என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் அளவிற்கு தீவிர விசுவாசியாகவும், பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தார். உள்ளாட்சி தேர்தல் களத்தில் 1996-இல் முதல்முறையாக தாந்தோன்றிமலை பேரூராட்சித் தலைவர் பதவிக்கு மதிமுக சார்பில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளில் வெற்றிவாய்ப்பை இழந்தார். மீண்டும் 2001-இல் அதே பதவிக்கு மீண்டும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தொடர் தோல்விகளைப் புறந்தள்ளிவிட்டு 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டிருந்த தாந்தோன்றிமலை நகராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டு தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தார். நீண்ட போராட்டத்திற்குப்பிறகு தேர்தல் களத்தை வென்றிருந்தவருக்கு மீண்டுமொரு சோதனை காத்திருந்தது. மதிமுக-வில் அப்போது மாவட்டச் செயலாளர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு, கட்சித் தலைமையோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக  மதிமுக-வில் இருந்து வெளியேறினார். 


அதன்பின் முழுநேர அரசியலுக்கு முழுக்குப்போட்ட திரு.பழனிச்சாமி ரியல் எஸ்டேட் துறையில் கால்பதித்தார். ஜீவிதா ரியல் எஸ்டேட் என்ற பெயரில் நில விற்பனை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். சில ஆண்டுகால ஓய்விற்குப்பின் மீண்டும் அரசியல் பயணத்தைத் தொடங்க விரும்பியவர், ஒருசில ஆண்டுகளுக்குப்பின் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டு தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.


முதல் இன்னிங்சைப்போல் இம்முறை நீண்ட சோதனைகள் காத்திருக்கவில்லை. கடந்த பிப்ரவரி'19-ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனது வாக்கு இருக்கும் கரூர் மாநகராட்சி 47-வது வார்டு திமுக கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அதிகாலை நடைபயிற்சியில் இருந்த திரு.பழனிச்சாமியை உடனடியாக வேட்புமனு தாக்கல் செய்ய திமுக மாவட்டத் தலைமை உத்தரவிட்டதைத் தொடர்ந்து, வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளன்று அவசர அவசரமாக தந்து வேட்புமனு தாக்கல் செய்தார். இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் கடுமையான சவாலை எதிர்கொண்டு இப்பகுதியில் இதுவரை திமுக வெற்றி பெற்ற வரலாறே இல்லை என்பதை மாற்றி முதல்முறையாக திமுக-வின் வெற்றியை உறுதி செய்தார் திரு.பழனிச்சாமி. அரசியலில் நீண்ட அனுபவமும், ஏற்ற இறக்கங்களையும் சந்தித்து பண்பட்ட அரசியல்வாதியாக மாறியிருக்கும் திரு.பழனிச்சாமி 40 லட்சம் மக்கள்தொகை கொண்ட கம்பளத்தாருக்கு கிடைத்துள்ள ஒருசில மாநகராட்சி உறுப்பினர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமுதாயத்திற்கு உச்சபட்சமாக கிடைத்துள்ள இந்த அரசியல் பதவியில் சிறப்பாக பணியாற்றி வரும்காலங்களிலும் வெற்றியை உறுதி செய்யும் வகையில் பணியாற்றிட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved