அரும்புவிடும் அரசியல் பெண் ஆளுமை!
சத்தியமங்கலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட திருவாளர்கள் மல்ல நாயக்கர் - காளியம்மாள் தம்பதியினர் வணிகம் காரணமாக சிலகாலம் கர்நாடக மாநிலம், மைசூர் அருகேயுள்ள நஞ்சங்கோட்டில் வசித்து வந்தனர். இத்தம்பதிகளுக்கு இரண்டாவது மகளாக 17.08.2975-இல் பிறந்தவர் திருமதி.M.தனலட்சுமி.
ஆரம்பக்கல்வி முதல் உயர்நிலைக்கல்வி வரை சத்தியமங்கலத்திலுள்ள ஜான் டி பிரிட்டோ பள்ளியில் பயின்ற திருமதி. தனலட்சுமி அவர்கள், மேல்நிலைக்கல்வியை சத்தியமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், தொலைதூரக்கல்வியில் இளங்கலை வரலாறும் பயின்றார். 1992-இல் பெருந்துறை அருகேயுள்ள குன்னத்தூரைச் சேர்ந்த B.Com பட்டதாரியான K.C. இராஜேந்திரனை மணந்துள்ள இத்தம்பதிக்கு K.R.சுரேஷ் பிரசாந்த் B.E., என்ற மகன் உள்ளார்.
இடதுசாரி இயக்க பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவரான K.C.இராஜேந்திரன் தீவிர திராவிட இயக்கப்பற்றாளர். சுமார் முப்பதாண்டுகளுக்கும் மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினராக இருந்து வருகிறார். இதன் காரணமாக ஒரே குடும்பத்தில் இடதுசாரி சித்தாந்தவாதிகளும், திராவிட இயக்க சித்தாந்தவாதிகளும் இணைந்து வாழும் சூழலில், நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தலை 1996-இல் ஆட்சிப்பொறுப்பில் இருந்த திமுக அரசு நடத்த முனைகிறது. இதில் மகளிருக்காக ஒதுக்கப்பட்ட குன்னத்தூர் பேரூராட்சி 7-வது வார்டில் போட்டியிட வேண்டிய சூழலில் அரசியலுக்கு இழுத்துவரப்படுகிறார் திருமதி.தனலட்சுமி. அப்போது இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராக களமிறங்கிய தனலட்சுமி தேர்தல் அரசியலில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார். பகுத்தறிவோடு தனித்து இயங்கும் வல்லமை, துணிச்சல் இவற்றிற்குப் பெயர்போனவரான தனலட்சுமி, பேரூராட்சி மன்ற உறுப்பினராக பணியாற்றக்கிடைத்த வாய்ப்பின் மூலமாக தனது ஆளுமையை வெளிப்படுத்துகிறார். இவரது வளர்ச்சியைக்கண்டு பொறுத்துக்கொள்ளமுடியாத அரசியல் வட்டாரம் 2001 உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்காக காத்திருக்கிறது. மீண்டும் 2002-இல் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக களமிறங்கிய தனலட்சுமியை ஆளும்கட்சி என்ற அசுரபலத்தோடு, அதிகாரவர்க்கத்தின் துணையோடு ஒருசில வாக்குகளில் எதிர்தரப்பு வீழ்த்துகிறது.
இடைப்பட்ட காலத்தில் குடும்பவாழ்வில் கவனம் செலுத்திய தனலட்சுமி தன் ஒரே மகனை பொறியாளாராக்கும் நோக்கில் தீவிர அரசியலில் இருந்து விலகியிருந்தார். சில கால இடைவெளிக்குப்பிறகு மீண்டும் அரசியல் களம் கண்டவர் இடதுசாரி அரசியலிலிருந்து திராவிட இயக்க அரசியலை முன்னெடுத்தார். 2016-இல் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில் கழகம் வாய்ப்பை மறுத்தபொழுது சுயோட்சை வேட்பாளராக போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
திராவிட இயக்க அரசியலில் இணைத்துக்கொண்ட 2016-2021 காலகட்டத்தில் ஆளும்கட்சியான அதிமுகவுக்கு எதிராக எதிர்க்கட்சி அரசியல் செய்யக்கிடைத்த வாய்ப்பில் களப்பணியில் தீவிரமாக செயல்பட்ட தனலட்சுமி மாவட்டக் கழக முன்னனி தலைவர்களின் அறிமுகத்தைப் பெற்றார். எதையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு போராடிப்பார்க்கும் இயல்பைப்பெற்றவரான தனலட்சுமி, தனியார்துறையில் பணியாற்றும் கணவரால் அரசியலில் ஈடுபடமுடியாத நிலையிலும், கட்சியிடும் கட்டளைகளை தனித்தே செயல்படுத்திக்காட்டினார். இதன்பலனாக 2019-இல் நடைபெற்ற பெருந்துறை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், கழக மகளிரணி சார்பாக பணியாற்றிய ஒரே பொறுப்பாளர் தனலட்சுமி என்ற பெயரை கட்சியினர் மத்தியில் பெற்றார்.
தனது அயராத உழைப்பால் குன்னத்தூர் பேரூராட்சியின் கழகத்தின் முக்கிய தளகர்த்தர்களில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார் தனலட்சுமி. இதனைத்தொடர்ந்து 2022 இல் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் குன்னத்தூர் பேரூராட்சி 9-வது வார்டில் திமுக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கி மகத்தான வெற்றி பெற்றார்.
தான் சார்ந்த சமுதாயத்தின் சார்பில் தான் ஒருவர் மட்டுமே பேரூராட்சிக்கு தேர்வாகியுள்ள நிலையில் பேரூராட்சி தலைவர் பதவிக்காக தனியொருத்தியாக இறுதிவரை போராடினார் தனலட்சுமி . கழகமே குடும்பமாக தலைமுறை தலைமுறையாக கட்சியில் இருக்கும் கம்பளத்தார் சமுதாய ஆண்களே உட்கட்சிப்போட்டியில் வெல்லமுடியாமல் தத்தளிக்கும் பொழுது, ஒற்றை பெண்ணாய் ஆணாதிக்க சமூகத்தில், ஆதிக்கம் மிகுந்த கட்சியில் உரிமையை போராடிப்பெரும் துணிச்சலை திருமதி.தனலட்சுமி பெற்றிருப்பது கம்பளத்தார் சமுதாயத்தின் அதிசயமே.
தெளிவான பேச்சும், சிந்தனையும் கொண்ட திருமதி.தனலட்சுமி பேரூராட்சி மன்ற உறுப்பினராக சிறப்பாக செயல்பட்டு அரசியலில் அடுத்தடுத்த படிநிலைகளில் ஜொலிப்பார் என்பதில் ஐயமில்லை. திருமதி.தனலட்சுமி அவர்களின் கனவுகள் நனவாக, தான் விரும்பும் உயரங்களைத்தொட அன்புடன் வாழ்த்துகிறோம்.

