🔴 LIVE | முப்பெரும் விழா 2023


விழ விழ எழும் வீரமங்கை! நம்பிக்கை தரும் ஒளிக்கீற்று!

திருமதி.M.ஜெயந்தி தங்கவேல் அவர்கள், 17.09.1969-இல் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்திலுள்ள வடக்குப்பேட்டையில் அமரர் மல்ல நாயக்கர் - காளியம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். தந்தையார் மல்ல நாயக்கர், கர்நாடக மாநிலம் மைசூரிலுள்ள நஞ்சன்கோட்டில் தொழில் நிமிர்த்தமாக குடியேறிய காரணத்தால், ஆரம்பக்கல்வி முதல் நடுநிலைக்கல்வி வரை கன்னட மொழியிலேயே கல்வி பயின்றார். 1987-இல் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையைச் சேர்ந்த திரு.தங்கவேல் அவர்களை மணமுடித்த இத்தம்பதிக்கு T.கோவர்த்தனன் என்ற மகன் உள்ளார். 

திராவிட இயக்கக்கொள்கையிலும், பெரியாரிய சிந்தனைகளிலும் தீவிர ஈடுபாடுடைய திரு.தங்கவேல் அவர்கள் சிறுவதிலிருந்தே அரசியல் ஈடுபாடுடையவர். சத்தியமங்கலம் பேரூராட்சி 27 வார்டுகளை உள்ளடக்கிய நகராட்சியாக 1970-இல் தரம் உயர்த்தப்பட்டபிறகு, திருமணத்திற்கு முன்பே1986-இல் நடைபெற்ற முதல் உள்ளாட்சித் தேர்தலில் சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட 6-வது வார்டில் குடை சின்னத்தில் சுயோட்சை வேட்பாளராகக் களமிறங்கி சொற்ப வாக்குகளை வெற்றி வாய்ப்பைத் தவறவிட்டார்.

அதன்தொடர்ச்சியாக முழுநேர அரசியல்லில் ஈடுபாடு கொண்டவர், 1987-இல் எம்ஜிஆர் மறைவிற்குப்பிறகு  அதிமுக ஜானகி அணியில் இணைந்து கட்சி அரசியலில் ஈடுபடுத்திக்கொண்டார். 1989-இல் முதல் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்த ஜானகி அம்மையார் தலைமையிலான அதிமுக அணி படுதோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து ஜா-ஜெ அணிகள் இணைப்பு நடைபெற்றபொழுது, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து தனது அரசியலைத் தொடர்ந்தார் திரு.தங்கவேல். அரசியலில் அவருக்கிருந்த ஆளுமையின் காரணமாக திமுக-வில் இணைந்த கையோடு சத்தி நகரப்பொருளாளர் பதவியையும் கைப்பற்றினார்.

பத்தாண்டு இடைவெளிக்குப் பிறகு 1996-இல் மீண்டும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்  6-வது வார்டில் தனது துணைவியார் திருமதி.ஜெயந்தி அவர்களை திமுக வேட்பாளராக முதல்முறையாக களமிறக்கி வெற்றி பெறச்செய்தார். அதுமுதல் திருமதி.ஜெயந்தி அவர்களுக்கு உறுதுணையாக இருந்து மிகச்சிறந்திய அரசியல் தலைவராக வார்ப்பித்தார் திரு.தங்கவேல்.

நடுநிலைப்பள்ளி கல்வித் தகுதியோடும், கன்னடமொழியில் மட்டுமே எழுதப்படிக்கத் தெரிந்த பின்னனியோடும், நகரமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொண்ட திருமதி.ஜெயந்தி அவர்கள், மக்கள் பணியாற்ற தனக்கு எதுவும் தடையில்லை என்பதை குறுகிய காலத்திலேயே நிரூபித்தார். நகர மன்ற உறுப்பினர் பதவியோடு கட்சியிலும் நகர துணைச்செயலாளர் பதவியை ஏற்றுக்கொண்டு நிர்வாகம், கட்சி என இரண்டிலும் முத்திரை பதித்தார்.

கட்சியில் அடியெடுத்து வைத்த நாள்முதல் கட்சி நிகழ்ச்சிகள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மறியல் என்று எதையும் விட்டு வைக்காதவர், கட்சியின் மாநாடு மாநிலத்தின் எந்த மூலையில் நடைபெற்றாலும் தவறாமல் கலந்துகொண்டு வருபவர் திருமதி.ஜெயந்தி. 1996-இல் நகரமன்ற உறுப்பினராக இருந்தபொழுது அப்பாயின்மென்ட் கமிட்டியில் இருந்தபொழுது, அதுவரை தற்காலிக துப்புறவு பணியாளர்களாக இருந்த 60-க்கும் மேற்பட்டவர்களை நிரந்தர தொழிலாளர்களாக்கி, அவர்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றினார். அதேபோல் மக்களிடமும் நேரடி தொடர்பில் இருந்தவர், அவர்களின் தேவைகளை தன் தோள்களில் சுமந்து நிறைவேற்றித் தருபவர் என்று பெயர் பெற்றார்.

2001-இல் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சமுதாய வாக்குகள் மிகமிக சொற்பமாக உள்ள தனது வார்டில் ஆளும்கட்சியின் அசுர பலத்தை எதிர்கொண்டு இரண்டாவது முறையாக வெற்றிபெற, அதற்கு முந்தைய ஐந்தாண்டுகளில் நகரமன்ற உறுப்பினராக அவராற்றிய பணிகளே ஒற்றைக்காரணமாக இருந்தது. தொடர்ந்து பத்தாண்டுகள் நகரமன்ற உறுப்பினராக இருந்தவர், 2006-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவதுமுறையாக போட்டியிட கட்சி வாய்ப்பு வழங்கியபொழுது, தனது ஒரே மகளை இயற்கையிடம் பறிகொடுத்திருந்த சோகத்தில் இருந்ததால் தேர்தலில் களத்திலிருந்து ஒதுங்கி இருந்தார்.

மனைவி போட்டியிட மறுத்துவிட்ட நிலையில் தானே களமிறங்க விரும்பிய தங்கவேல் அவர்களுக்கு கட்சி வாய்ப்பு மறுக்கவே, 20 ஆண்டுகளுக்குப் பின் சுயோட்சை வேட்பாளராக மீண்டும் களமிறங்கி தோல்வியைத் தழுவினார். 2011-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது முறையாக களமிறங்கியபொழுதும் தோல்வியே பரிசாகக் கிடைத்தது. இதே காலகட்டத்தில் திருமதி.ஜெயந்தி அவர்கள் 2011-வரை வகித்து வந்த நகர துணைச்செயலாலர் பதவியில் தொடர்ந்தவர் 2011 முதல் 2016 வரை சத்தி நகர தொண்டரணி துணைச்செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டார். 

பத்தாண்டு இடைவெளிக்குப்பிறகு 2016-இல் திமுகழகம் திருமதி.ஜெயந்தி அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கி வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் கடைசி நேரத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய கட்சி சக்தி நகர மகளிரணி செயலாளர் பதவியையும் வழங்கி கௌரவித்தது. தொடர்ந்து கட்சிப்பணிகளில் ஓய்வின்றி உழைத்தவர் முக்கிய தலைவர்களின் அறிமுகத்தையும், அன்பையும், ஆதரவையும் பெற்று படிப்படியாக தன்னை வளர்த்துக்கொண்டே வந்தார்.

2021-இல் திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சி அமைத்தவுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எந்த நேரத்திலும் நடைபெறலாம் என்றிருந்த நிலையில்,  2021-அக்டோபர் 2-இல், அரசியல் வழிகாட்டியாகவும், சிறந்த வாழ்க்கைத் துணைவராகவும் இருந்த தங்கவேல் அவர்கள் காலமானது பேரிடியாய் அமைந்தது. 2006-இல் மகளை இழந்தபொழுது இருந்ததைக்காட்டிலும் பக்குமிக்க, பண்பட்ட அரசியல் தலைவராய் உயர்ந்திருந்த திருமதி.ஜெயந்தி அவர்கள், கணவரை இழந்த மூன்று மாதத்திற்குள் மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இம்முறை ஆளும்கட்சியான திமுக-வில் போட்டியிடும் வாய்ப்பை பெறுவது ஆண்களுக்கே குதிரைக்கொம்பாய் இருந்தநிலையில், தனக்காக கட்சியில் லாபி செய்ய குடும்ப உறவுகளோ, சொந்த பந்தங்களோ, சமுதாய அமைப்புகளோ இல்லாத நிலையில், தானே நேரடியாக களமிறங்கி போட்டியிடும் வாய்ப்பினைப்பெற்று, 20 ஆண்டுகளுக்குப்பின் வார்டு மறுசீரமைக்கப்பில் மாற்றியமைக்கப்பட்ட 7-வது வார்டில் மீண்டும் உதயசூரியன் சின்னத்தில் திமுக வேட்பாளராக களமிறங்கி பல தரப்பட்ட சோதனைகளை வென்று நகர மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கணவரை இழந்தபின் போர்க்களம் புகுந்த ஜான்சிராணியைப்போல், தனித்து தேர்தல் களம் கண்டு வெற்றிபெற்றுள்ள திருமதி.ஜெயந்தி தங்கவேல் போன்ற பெண் ஆளுமைகள் கம்பளத்தார் சமுதாயத்தில் இருப்பது பெருமைக்குறியது.

நகர மன்ற உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்ட திருமதி.ஜெயந்தி தங்கவேல் அவர்கள் சத்தி நகராட்சியின் "பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினரா"கவும் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அரசியலில் திருமதி.ஜெயந்தி தங்கவேல் அவர்களின் தொடர் செயல்பாடுகள் கம்பளத்து சமுதாயத்தில் நீண்டகாலம் நீடித்து வரும் அரசியல் வெற்றிடத்தை நிச்சயம் நிரப்பும் என்ற நம்பிக்கையை விதைக்கிறது. திருமதி.ஜெயந்தி தங்கவேல் முன்னெடுக்கும் அரசியல் முயற்சிகளுக்கு சமுதாயத்தை துணைநிறுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்ற உறுதியளித்து, உங்கள் முயற்சிகள் தொடரட்டும் என்று வேண்டி அன்புடன் வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved