மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினார் - விருதுநகர் திரு.C.நாகராஜன்
திரு.C.நாகராஜன் அவர்கள் 25.03.1967-இல் விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகர் அருகேயுள்ள தடங்கம் கிராமத்தில் திரு.சின்னகோபால் நாயக்கர் - திருமதி.சீத்தம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர் மேல்நிலைப்பள்ளி வரை கல்வி பயின்றுள்ளார். இவருக்கு திருமணமாகி, திருமதி.N.லட்சுமி என்ற மனைவியும், N.சத்தியா மற்றும் N.சந்தியா என்ற இருமகள்களும் N.அஜித்குமார் என்ற மகனும் உள்ளனர்.
திரு.நாகராஜன் அவர்களின் தந்தையார் திரு.சின்னகோபால் நாயக்கர் அவர்கள், அஇஅதிமுக தொடங்கிய காலத்திலிருந்தே அக்கட்சியில் உறுப்பினராக இருந்தவர், 1969 முதல் 1979-வரையிலும் பின்னர் 1986 முதல் 1991 வரையிலும் வச்சக்காரபட்டி ஊராட்சி மன்றத் தலைவராக சுமார் 15 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ஆதலால் திரு.நாகராஜன் அவர்கள் இயல்பிலேயே அஇஅதிமுக குடும்பத்திலிருந்து வந்தவர். தனது மேல்நிலைக்கல்விக்குப் பின் விருதுநகர் பஞ்சாயத்து யூனியனில் 1986 முதல் 1991-வரை சிவில் காண்ட்ராக்டராக பணியாற்றியவர், அதற்குப்பின் ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தில் தொழிலாளியாக இணைந்தார். 1993-இல் அஇஅதிமுகவில் முறைப்படி இணைந்து உறுப்பினர் அட்டையை பெற்றவர், அன்று முதல் தடங்கம் கிளைக்கழக செயலாளராக உள்ளார். 1998-2000 வரை எம்ஜிஆர் இளைஞரணிச் பொருளாளராகப் பணியாற்றியுள்ளார்.
சுமார் 30 ஆண்டுகளாக ராம்கோ நிறுவனத்தின் ஊழியரான திரு.நாகராஜன் அவர்கள், அந்நிறுவனத்தில் இணைந்தது முதலே அண்ணா தொழிற்சங்கத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார். 2004-ஆம் ஆண்டு அண்ணா தொழிற்சங்கத்தின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், தொழிலாளர்களின் நலனைப்பேணிக்காப்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர். ஏழை-எளிய தொழிலாளர்களின் பணிப்பாதுக்காப்பு, அவர்களுக்குறிய சலுகைகள், மருத்துவ உதவிகள், போனஸ், ஊக்கத்தொகை போன்றவற்றை நிறுவனத்துடன் இணக்கமாகப்பேசி சலுகைகளை பெற்றுக்கொடுப்பதில் திறம்பட செயல்பட்டு நிறுவனத்திற்கும்-தொழிலாளர்களுக்கும் பாலமாக, சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார் திரு.நாகராஜன். இதுதவிர 2013 முதல் 2018 ஆம் ஆண்டுவரை தம்மநாயக்கன்பட்டி கூட்டுறவு சங்கத் தலைவராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகநீண்ட அரசியல் பாரம்பரியமும், தொழிற்சங்கவாதியுமான திரு.நாகராஜன் அவர்கள் மூன்றுமுறை ஊ.ம.தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மதிப்புமிக்க குடும்பத்தின் உறுப்பினராகவும், சுயதொழிலதிபராகவும், அதற்குப்பின் சாதாரண தொழிலாளியாகவும், தொழிற்சங்கத் தலைவராகவும், வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில், பல்வேறு பொறுப்புகளில், பல்வேறு தரப்பு மக்களுடன் பணியாற்றிய அனுபவமிக்கவர் திரு.நாகராஜன் அவர்கள். இவர் கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் விருதுநகர் மாவட்டம்,8 வார்டு மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தேர்தலில் அஇஅதிமுக சார்பில் களம் கண்டு, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே மகத்தான வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தேர்தலில் சமுதாயத்தின் சார்பில் வெற்றி பெற்றுள்ள ஒருசிலரில் திரு.நாகராஜன் அவர்களும் ஒருவர். எனவே இப்புதிய பொறுப்பில் திரு.நாகராஜன் அவர்கள் சாதி,மத,மொழி,இன அடையாளங்கள் தாண்டி பாரபட்சமின்றி அனைத்து தரப்பினருக்கும் சேவையாற்றி வாய்ப்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.