கேரளாவைக் கலக்கும் கம்பளத்து தாமரை- ஒட்டன்சத்திரம் திரு.M.ஜெயக்குமார்
திரு. M.ஜெயக்குமார் அவர்கள் 05.04.1982-இல் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சத்திரப்பட்டியில் திரு.மோகன்ராஜ் - திருமதி.கலாமணி தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். சிறுவயதிலேயே தாயாரின் சொந்த ஊரான கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கஞ்சிக்கோடு அருகேயுள்ள புதுச்சேரியில் குடியேறியவர், அங்கு எஸ்.எஸ்.எல்.சி வரை கல்வி பயின்றார். இவருக்கு திருமணமாகி திருமதி.J.ஆனந்தி என்ற மனைவியும், J.தருண் என்ற மகனும், J.தாரிகா என்ற மகளும் உள்ளனர்.
பள்ளிப்படிப்பிற்குப்பின் பெற்றோர்களுக்கு உதவியாக விவசாயப்பணியில் ஈடுபட்டவர், பேக்கரி திண்பண்டங்கள் தயாரித்து சுற்றுவட்டார கடைகளுக்கு விற்பனை செய்து கொண்டுள்ளார். இதுதவிர, வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனமும், நிதிநிறுவனமும் தொடங்கி நடத்திவருகிறார்.
அரசியலிலும், பொதுநலசேவையிலும் அதிக ஈடுபாடு கொண்ட திரு.ஜெயக்குமார் அவர்கள், R.S.S அமைப்பில் இணைந்து தனது சமூக சேவையைத் துவங்கினார். அதன் பின் பிஜேபி-யில் இணைந்தவர், புதுச்சேரி பகுதின் துணைச்செயலாளர், துணைத்தலைவர் பொறுப்புகளை வகித்தவர், செயலாளர் பொறுப்பேற்று மூன்றாண்டுகள் பதவி வகித்தார். இதுதவிர 160-க்கும் மேற்பட்ட விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்ட விவசாயக் குழுக்களை உருவாக்கி அதன் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார் திரு.ஜெயக்குமார் அவர்கள். கடந்த 2019-இல் கேரளாவை கடும் புயல் தாக்கியபொழுது, தன்னார்வளர்களை இணைத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள், ஆடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் “ஜெயின் இன்டர்நேஷனல் கிளப்” என்ற தொண்டுநிறுவனத்தில் உறுப்பினராக இணைந்து பணியாற்றி வரும் திரு.ஜெயக்குமார் அவர்கள், இந்த தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் புற்றுநேயாளிகள், ஏழை-எளியவர்களுக்கு மருத்துவ வசதி செய்வதுடன், மருந்து,மாத்திரைகளையும் இலவசமாக பெற்றுத் தருகிறார். மேலும் இந்த அமைப்பின் மூலம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும், இலவச நோட்டு புத்தகங்களையும் பெற்றுத்தந்து அடித்தட்டு மக்களின் துயர் நீக்கப்பாடுபட்டு வருகிறார்.
அரசியல், பொதுநலன் தாண்டி, சமுதாயப்பணியிலும் தீவிரமாக ஈடுபாடுடைய திரு.ஜெயக்குமார் அவர்கள், கேரளாவில் வசிக்கும் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்ப்பட்ட கம்பளத்தார்களை ஒன்றிணைத்து “தொட்டிய நாயக்கர் சங்கம்” என்ற அமைப்பைத் துவங்கி, அதன் தலைவராக சுமார் ஐந்தாண்டுகளாக பொறுப்புவகித்து வருகிறார். வருடமொருமுறை அனைவரையும் இணைத்து பொங்கல் விழாவை சிறப்புடன் நடத்தி வருவதுடன்,சமுதாய மக்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் அரசியல் மற்றும் சமுதாயத் தலைவராக வளர்ந்து வரும் திரு.ஜெயக்குமார் அவர்கள், அரசியல் பிரமுகர்களுக்கு சிறந்த முன்உதாரணமாக விளங்குகிறார் என்றால் மிகையல்ல. தமிழகத்தில் பூர்வகுடிகளாக லட்சக்கணக்காண மக்கள் பல்லாண்டுகள் வாழ்ந்து வரும் கம்பளத்தார்களில், ஆளுமைமிக்கவர்களாக தங்களை வளர்த்துக்கொள்ள முடியாமல், சமுதாயத்திலுள்ள அடித்தட்டு மக்கள் மீதும், உறவுகள் மீதும் பழிசொல்லி தங்களை நியாயப்படுத்திக் கொள்பவர்கள் மத்தியில், சுமார் பத்தாயிரம் சமுதாய மக்களேயுள்ள கேரள மாநிலத்தில் அரசியல், சமுதாயம், தொழில் என அனைத்து துறைகளிலும் கால்பதித்து, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டுள்ள திரு.ஜெயக்குமார் அவர்கள் போற்றுதலுக்குறியவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கம்பளத்தார் சமுதாய மக்கள் பலலட்சம் பேர் வசிக்கும் தமிழகத்தில் அரசியல் ஆளுமைகள் உருவாகிறதோ இல்லையோ கேரளாவில் சாத்தியப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையளிக்கும் விதத்தில் திரு.ஜெயக்குமார் போன்றவர்களின் செயல்பாடுகள் இருப்பது சமுதாயத்திற்கு நம்பிக்கை அளிக்கிறது. திரு.ஜெயக்குமாரின் பணி தொடர தமிழக உறவுகள் சார்பில் அன்புடன் வாழ்த்துகிறோம்.