ஒன்றியக்குழு உறுப்பினர் - R.R.நகர் - திரு. S.தமிழ்ச்செல்வன்.
திரு. S.தமிழ்ச்செல்வன் அவர்கள் 24.04.1967-இல் விருதுநகர் மாவட்டம், ஆர்.ஆர்.நகர் அருகேயுள்ள துலுக்கபட்டி கிராமத்தில் திரு.சங்கரப்ப நாயக்கர்-திருமதி.கோப்பம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். எஸ்.எஸ்.எல்.சி வரை பயின்றுள்ள திரு.தமிழ்செல்வன் அவர்களுக்கு திருமணமாகி திருமதி.T.பிரேமா என்ற மனைவியும் T. வெங்கடேஷ் B.E., என்ற மகனும், T.சுகன்யா என்ற மகளும் உள்ளனர்.
தந்தையார் திரு.சங்கரப்ப நாயக்கர் அவர்கள் ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தில் பணியாற்றிய காரணத்தால், தன் பள்ளிப்படிப்புக்குப் பின் அதேநிறுவனத்தில் தொழிலாளியாக இணைந்தார். தனது சிறுவயது முதலே அஇஅதிமுக-வில் ஆதரவாளராக அடையாளப்படுத்திக் கொண்டவர், உரிய வயதில் அதிமுக-வில் உறுப்பினரானார் திரு.தமிழ்ச்செல்வன். அதற்குப்பின் துலுக்கபட்டி கிராமத்தில் கிளைக்கழக செயலாளராக பொறுப்பேற்று, சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்தவர், அதன் பின் ஊராட்சிக்கழக செயலாளராகப் பொறுப்பேற்று பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார். இப்பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றிய திரு.தமிழ்ச்செல்வன் அவர்கள், அரசின் திட்டங்களை அடித்தட்டு மக்களுக்கு கொண்டு சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ராம்கோ நிறுவனத்தில் தொழிலாளியாக இணைந்தவுடன், அண்ணா தொழிற்சங்கத்திலும் உறுப்பினராக இணைத்துக்கொண்டார். 2014-2019 வரை சுமார் ஐந்தாண்டுகாலம் தொழிற்சங்கத் தலைவராக பணியாற்றியுள்ளார் திரு.தமிழ்ச்செல்வன். இப்பதவிகாலத்தில் தொழிலாளர்களி நலனைப் பேணிக்காத்ததோடு மட்டுமில்லாமல் நிர்வாகத்தோடும் இணக்கமாக இருந்து தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய பலன்களை சுமூகமான முறையில் கிடைக்கச் செய்தார்.
2001-ஆன் ஆண்டு முதல் உள்ளாட்சித் தேர்தல்களில் களம் கண்டு வரும் திரு.தமிழ்செல்வன் அவர்கள், முதன் முதலில் 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் விருதுநகர் ஒன்றியம் 21-ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் அதிமுக வேட்பாளராகக் களமிறங்கி தோல்வியை சந்தித்தார். மீண்டும் 2006-ஆம் ஆண்டு தேர்தலில் அதே வார்டில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார். ஒன்றியக்குழு உறுப்பினராக அப்பகுதியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை நிறைவேற்றியுள்ளார் திரு.தமிழ்செல்வன் அவர்கள். இருந்தும் 2011-ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். தோல்விகளைக்கண்டு அசராமல் தொடர்ந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்தவர், 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் அதே 21-ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் களமிறங்கி வெற்றி வாகை சூடினார்.
அரசியலில் வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்தாலும், சுணக்கமின்றி அரசியலில் தொடர்ந்து பயணித்து வரும் திரு.தமிழ்செல்வன் அவர்களுக்கு, இந்த வெற்றிக்குப்பின் கடும் சோதனை காத்திருந்தது. அரசியல் பயணம் தொடங்கிய காலம்தொட்டு இணைந்து பணியாற்றிவந்த அதிமுக கழகத்தில் உட்கட்சிப் பிரச்சினையால் குறிவைக்கப்படுவதாக உணர்ந்தவர், திமுகழகத்தில் வந்த அழைப்பை ஏற்று அக்கட்சியில் சமீபத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார் திரு.தமிழ்செல்வன் அவர்கள். எக்கட்சியில் எப்பொறுப்பிலிருந்தாலும் மக்கள் பணியே மகேசன் பணியாக செயலாற்றி வரும் திரு.தமிழ்செல்வன் அவர்கள், புதிய கட்சியில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு, வாய்ப்பளித்த மக்களுக்கு ஜாதி,மத, இன, மொழி கடந்து அனைவருக்கும் பாடுபட்டு சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.