ஒன்றியக்குழு உறுப்பினர்-கமுதி- திருமதி-மஹாலட்சுமி ஜெயராஜ்
திருமதி.மகாலட்சுமி ஜெயராஜ் அவர்கள் 1979 ஆம் ஆண்டு இராமநாதபுரம் கமுதி அருகேயுள்ள மேலமாவிலங்கை கிராமத்தில் திரு.சக்கரை நாயக்கர்- திருமதி.சுப்புலட்சுமி தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். தொடக்கப்பள்ளி வரை படித்துள்ளவர், திரு.S.ஜெயராஜ் அவர்களை மணமுடித்துள்ளார். இத்தம்பதிக்கு J.ஜெயபிரகாஷ் என்ற மகனும், J.ஜெயபிரேமா மற்றும் J.ஜெயபிரபா என்ற இருமகள்களும் மகள்களும் உள்ளனர்.
திரு.ஜெயராஜ் அவர்கள் 1971-இல், இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கிளாம்பரம் கிராமத்தில் திரு.சிலுக்கையா-திருமதி.குருவம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். நடுநிலைப்பள்ளி வரை கல்வி பயின்றவர் பின் பெற்றோர்களுக்கு உதவியாக விவசாயப்பணிக்கு திரும்பினார். சிலகாலம் விவசாயப்பணியில் தொடர்ந்தவர் 1993-முதல் வாழைஇலை வியாபாரத்தில் ஈடுபட்டு, உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு விற்பனை செய்துவருகிறார்.
விவசாயப்பணியுடன், வியாபாரத்திலும் முழுக்கவனம் செலுத்தி வந்தவர், 2011-ஆம் ஆண்டு முதல் பொதுவாழ்விலும் ஈடுபட்டு வருகிறார். கமுதி வட்டார அரசியலில், திராவிட முன்னேற்றக் கழகம் ஆளும்கட்சியாக இருந்தபொழுதுகூட ஒன்றியப்பெருந்தலைவர் பதவியை கைப்பற்றியது இல்லை என்ற சூழலில், அப்பதவியைக்கைப்பற்றும் முனைப்பில், கட்சியினர் தவிர்த்து பொதுமக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற ஒருவரை 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தி வெற்றிபெற வியூகம் அமைத்தது. அதனடிப்படையில், அப்பகுதியில் பொதுநலன் சார்ந்து, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், அனைத்து தரப்பு மக்களின் சுக-துக்கங்களிலும் பங்கேற்று நன்மதிப்பைப் பெற்றவரான திரு.ஜெயராஜ் அவர்களைத் தேர்வு செய்து மாவட்டக் கழகத்திற்கு பரிந்துரை செய்தனர் உள்ளூர் கழக முன்னனியினர். தனது நலன் விரும்பிகள், வழிகாட்டிகள் ஆலோசனைகளின்படி திமுக-வில் இணைந்துகொண்டார் திரு.ஜெயராஜ் அவர்கள்.
உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள எந்தத் திட்டமிடலும், முன்னேற்பாடுகளும் செய்யப்படாத நிலையில், பணபலம், படைபலம், அதிகாரபலமிக்க ஆளும்கட்சியை எதிர்த்து, 2011-ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கமுதி ஒன்றியம் 6 வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் முதல்முறையாக தேர்தலில் களம் கண்டவர், ஒருசில வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினாலும், வட்டார அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். தோல்வியைப் பற்றி கவலைகொள்ளாமல் தொடர்ந்து அரசியல் களத்திலும், பொதுதளத்திலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் திரு.ஜெயராஜ் அவர்கள். அரசியல் தவிர சமுதாயப் பணியிலும் தீவிர பணியாற்றுபவர், உள்ளூர் தவிர சுற்றுவட்டாரப்பகுதிகளில் வாழும் சமுதாய மக்களின் நலன்களிலும் அக்கறை கொண்டு செயலாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மண்ணுக்கேற்ற தன்மையுடன், மிகத்துடிப்பாகவும், துணிச்சலாகவும் பொதுவாழ்வை எதிர்கொண்டு வரும் திரு.ஜெயராஜ் அவர்கள், கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுகழக வேட்பாளராக கமுதி ஒன்றியம் 7 வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் தனது துணைவியார் திருமதி.மகாலட்சுமி ஜெயராஜ் அவர்களை களமிறக்கி மகத்தான வெற்றிவாகை சூடினார். இந்த வெற்றியின் மூலம் கட்சி எதற்காக தன்னை கட்சியில் இணைத்ததோ, அதனை சுமார் பத்தாண்டுகள் காத்திருந்து நிறைவேற்றி, கமுதி ஒன்றியப் பெருந்தலைவர் பதவியை முதன்முறையாக திமுகழகம் கைப்பற்றிட உறுதுணையாக இருந்துள்ளார் திரு.ஜெயராஜ் அவர்கள். இப்புதிய பொறுப்பில் திருமதி.மகாலட்சுமி ஜெயராஜ் தம்பதியினர் சாதி,மத,மொழி,இன அடையாளங்கள் தாண்டி அனைத்து தரப்பினருக்கும் பாரபட்சமின்றி சேவையாற்றி, வாய்ப்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.