ஊராட்சி மன்றத் தலைவர் - நாமக்கல் - திரு.K.P.இராமசாமி
திரு.K.P.இராமசாமி அவர்கள் 14.05.1970-இல் நாமக்கல் மாவட்டம், நாமக்கல் அருகேயுள்ள வடக்குப்பட்டி கிராமத்தில் திரு.கே.பழனிசாமி – திருமதி. ரங்காயம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். உயர்நிலைப்பள்ளி வரை பயின்றவர், பெற்றோர்களுக்கு உதவியாக விவசாயப் பணியில் சிலகாலம் ஈடுபட்டார். இவருக்கு திருமணமாகி திருமதி.R.இந்திராணி என்ற மனைவியும், R.பாலகிருஷ்ணன் என்ற மகனும், R.ஸ்ரீமுகி என்ற மகளும் உள்ளனர்.
சிலகால விவசாயப்பணிக்குப்பின், லாரி ஒர்க்ஷாப் ஒன்றில் இணைந்த திரு.இராமசாமி அவர்கள் சுமார் இரண்டாண்டு காலம் மெக்கானிக்காகவும், சுமார் மூன்றாண்டுகள் லாரி கிளீனராகவும் பணியாற்றினார். 1989-இல் லாரி டிரைவரானவர், சுமார் ஆறு ஆண்டுகள் டிரைவராகத் தொடர்ந்தார். அதன்பின் நாமக்கல்லில் ஓம் ஸ்ரீ சரவணா டிரான்ஸ்போர்ட் & புக்கிங் ஏஜெண்ட் என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் மூலம் சொந்தமாக லாரிகளை இயக்குவதுடன், புக்கிங் ஏஜெண்டாகவும் இருந்து வருகிறார். மேலும் கோழி எருவு ஏஜெண்டாகவும் உள்ளார். நாமக்கல் மாவட்ட லாரி புக்கிங் ஏஜெண்ட் அசோசியேசனிலும், நாமக்கல் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்திலும் உறுப்பினராகவும் உள்ளார் திரு.இராமசாமி அவர்கள்.
1993- காலகட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்திற்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் பெருவதில் இருந்த சிக்கலை அடுத்து நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்த திரு.இராமசாமி அவர்கள், நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான சாதி சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து சுதந்திர தினத்தன்று கருப்புக்கொடி ஏற்றி கைதானவர்களை விடுவித்ததில் முக்கிய பங்காற்றினார். மேலும், அம்மாவட்ட சமுதாய மக்கள் சந்தித்த பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, ஒரு சமுதாய அமைப்பைத் தோற்றுவிக்க வேண்டுமென்ற கருத்தின் அடிப்படையில் “விடுதலைக்களம்” அமைப்பை துவங்கியதில் முக்கியப்பங்காற்றியவர் திரு.இராமசாமி அவர்கள். அதன் அடிப்படையில் துவங்கப்பட்ட விடுதலைக்களம் அமைப்பில் நாமக்கல் ஒன்றியச்செயலாளராக சுமார் இரண்டாண்டுகள் பதவிவகித்தார். இந்த காலகட்டத்தில் முக்கிய தலைவர்களுடன் இணைந்து தமிழகம் முழுவதும் பயணம் செய்து, சமுதாய மக்களைச் சந்தித்து, விடுதலைக்களம் அமைப்பை கிராமம் தோறும் கொண்டு சேர்க்கப்பாடுபட்டவர்களில் திரு.இராமசாமி அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1996-இல் திமுக-வில் இணைந்த திரு.இராமசாமி அவர்கள், கிளைக்கழக பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருசில ஆண்டுகளில் திமுக நாமக்கல் ஒன்றிய துணைச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.இராமசாமி அவர்கள், இன்றுவரை அப்பொறுப்பில் தொடர்ந்து வருகிறார். கழகம் நடத்தும் பல்வேறு போராட்டங்கள், மறியல்கள், ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டு பலமுறை கைதாகியுள்ள திரு.இராமசாமி அவர்கள், கழகத்தின் அனைத்து நிகழ்ச்சிகள்,மாநாடுகள், பொதுக்கூட்டங்களிலும் தவறாது கலந்துகொண்டு தீவிர கட்சிப்பணியாற்றி வருகிறார். 2008-ஆம் ஆண்டு “நாவாப்ரா” திட்டத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்துள்ளார்.
பொதுமக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்கும் திரு.இராமசாமி அவர்கள், அரசின் பல்வேறு நலத்திட்டங்களை உரிய பயனாளிகளிடம் கொண்டு சேர்த்துள்ளார். அதுதவிர பொதுமக்களின் கோரிக்கைகளையும், தேவைகளையும் அறிந்து உரிய முறையில் தீர்வு கண்டு வரும் திரு.இராமசாமி அவர்கள், 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், தனது துணைவியாரை ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராகக் களமிறக்கி, சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார். மீண்டும் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில, ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு திமுகழக வேட்பாளாரகக் களம் கண்ட திரு.இராமசாமி அவர்களுக்கு இம்முறையும் தோல்வியே மிஞ்சியது. தொடர் தோல்விகளால் துவண்டு விடாமல், தொடர்ந்து மக்கள் பணியிலும், கட்சிப்பணியிலும், தீவிரமாக ஈடுபட்டு வந்த திரு.இராமசாமி அவர்கள், 2016-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில், திண்டமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராக களமிறங்கி, தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் தேர்தல் இரத்தாகிவிடவே, மீண்டும் கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் களம் கண்டு, திண்டமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் பதினைந்தாண்டுகால காத்திருப்பிற்குப்பின் முதல் முறையாக வெற்றிக்கனியை சுவைத்துள்ள திரு.இராமசாமி அவர்கள். கால்நூற்றாண்டுகளுக்கும் மேலாக அரசியலில் பயணித்து வரும் திரு.இராமசாமி அவர்கள், இந்த புதிய பொறுப்பின் மூலம் அனைத்து தரப்பு மக்களுக்கும் சாதி,மத,மொழி,இன பாகுபாடின்றி சிறப்பாக செயலாற்றி சார்ந்திருக்கும் கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.