ஒன்றியக்குழு உறுப்பினர் - கமுதி - திரு.P.செல்வராஜ்
திரு.P.செல்வராஜ் அவர்கள் 1976-ஆம் ஆண்டு இராமநாதபுரம் கமுதி அருகேயுள்ள கீழராமநதி கிராமத்தில் திரு.பெரிய போஸ் – திருமதி.சின்னம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். எஸ்.எஸ்.எல்.சி வரை படித்துள்ளவர், பள்ளிப்படிப்பிற்குப் பின் பெற்றோர்களுக்கு உதவியாக விவசாயப்பணிக்கு திரும்பினார். இவருக்கு திருமணமாகி திருமதி.S.சங்கம்மாள் என்ற மனைவியும் S.பெருமாள், S.இராம்குமார்,S.சபரி என்ற மூன்று மகன்களும் உள்ளனர்.
விவசாயப்பணி திருப்தியளிக்காத நிலையில், சுயதொழிலில் விருப்பம் கொண்ட திரு.செல்வராஜ் அவர்கள், சொந்தமாக ஆட்டோ வாங்கி கமுதி நகரத்தில் வாடகைக்கு இயக்கி வந்தார். சுமார் 8 ஆண்டுகள் வரை அதைத் தொடர்ந்தவர், ஆட்டோ தொழிற்சங்கத்திலும் இணைந்து பணியாற்றினார். திரு.செல்வராஜ் அவர்களின் தந்தையார் திரு.பெரியபோஸ் அவர்கள் திராவிட இயக்கவாதியாக திமுக-வில் தீவிர உறுப்பினராக இருந்து, கட்சி நடத்தும் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், தேர்தல் பிரச்சாரப்பணிகளில் தீவிரமாக பங்கு கொண்டு வந்தவர். தந்தையின் வழியிலேயே இளமைக்காலம் முதல் திமுக-வில் அடிப்படை உறுப்பினராக இணைந்து, கட்சிப்பதவிகள் ஏதுமில்லாமலே தீவிரமாகப் பணியாற்றி வருகிறார் திரு.செல்வராஜு அவர்கள். பொதுமக்களுக்கு பாசக்கார ஆட்டோக்காரராகவும், ஏழைகளின் சொந்தக்காரனாகவும், பாட்ஷா படபாணியில் பொதுமக்களுக்கு இயல்பிலேயே உதவிடும் பண்புள்ளவர் திரு.செல்வராஜ் அவர்கள்.
பாரம்பரியமான திமுக-குடும்பமாக இருந்தபொழுதிலும், தேர்தல் அரசியலில் பயணிக்க வேண்டுமென்று ஒருநாளும் நினைத்தவரில்லை, அதையொட்டி பொதுநலன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டவருமல்ல திரு.செல்வராஜ் அவர்கள். கட்சிப் பணிகளில் தீவிர ஆர்வமுடையவர், மாவட்டக் கழகம் நினைப்பதை செயல்படுத்திக் காண்பிப்பவர். இரண்டு தலைமுறைகளாகக் கட்சிப் பொறுப்புகள் ஏதுமின்றி உழைக்கும் குடும்பத்தை உரிய வகையில் கௌரவிக்க வேண்டும் என்று திமுகழக மாவட்டச்செயலாளர் விரும்பியதின் பேரில், அவரின் வற்புறுத்தலை ஏற்று, கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுகழக வேட்பாளராக கமுதி ஒன்றியம் 3-ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட திரு.செல்வராஜ் அவர்களுக்கு, கட்சி சாதாரண தொண்டனின் உழைப்பை அங்கீகரித்து பெருமைப்படுத்த நினைத்ததுபோல், மக்களும் தங்களின் பாசக்கார ஆட்டோக்காரரின் உழைப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் பெருவாரியான வாக்குகளை அளித்து ஒன்றியக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுத்துள்ளனர். இயல்பிலேயே அனைவருக்கும் உதவிக்கரம் நீட்டும் திரு.செல்வராஜ் அவர்கள், இப்புதிய பொறுப்பின் மூலம் மேலும் தனது சேவையை விரிவுபடுத்துவார் என்பதில் சந்தேகமில்லை. தொடர் மக்கள் சேவையில் ஈடுபட்டு வாய்ப்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.