🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஒன்றியக்குழு உறுப்பினர்-கமுதி-திரு.S.உதயகுமார்

திரு.S.உதயகுமார் அவர்கள் 15.05.1984-இல் இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள T.குமராபுரம் கிராமத்தில் திரு.சேர்முகப்பாண்டியன் – திருமதி. பாக்கியலட்சுமி தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். நடுநிலைப்பள்ளி வரை கல்வி பயின்றவர், பின்னர் பெற்றோர்களுக்கு உதவியாக விவசாயப்பணிகளில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு திருமணமாகி திருமதி.U.ராதா என்ற மனைவியும், U.உமாபாரதி என்ற மகளும் உள்ளனர்.


கேப்டன் விஜயகாந்த் இரசிகர் மன்றத்திலிருந்து அரசியலுக்கு வந்தவரான திரு.உதயகுமார் அவர்கள், மன்றத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு செய்துள்ளார். கேப்டன் அவர்கள் 2005-ஆம் ஆண்டு தேமுதிக-வைத் துவங்கியபொழுது, அக்கட்சியில் அடிப்படை உறுப்பினராக இணைந்தவர், T.குமராபுரம் கிளைக்கழக செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். கட்சின் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், ஆர்ப்பாட்டம், மறியல், போராட்டங்கள் என கட்சி அறிவிக்கும் அனைத்திலும் தன் பகுதி மக்களை திரட்டி திரளாக பங்கேற்றவர் திரு.உதயகுமார் அவர்கள். இவரின் தீவிர செயல்பாடுகளால் கவரப்பட்ட கட்சி, தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கி கௌரவித்தது. கேப்டன் அவர்களின் பிறந்தநாள், கட்சி உதயமான தினம் போன்ற முக்கியமான தருணங்களில் அடித்தட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதுடன், ஏழை-எளிய மக்கள் எளிதில் அணுகி தங்கள் குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளும் வகையில் எளிய மக்களின் தோழராக இருப்பவர் திரு.உதய குமார் அவர்கள். இதுதவிர கிராமத்தில் நடைபெறும் அனைத்து சுக-துக்கங்களிலும் கலந்துகொண்டு அனைத்து தரப்பினருக்கும் ஆறுதலாகவும், உறுதுணையாகவும் இருப்பவர் திரு.உதயகுமார்.

தேமுதிக உதயமானவுடன் 2006-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு செய்திருந்த நிலையில் கட்சியின் அறிவிப்புக்கு கட்டுப்பட்டு போட்டியிலிருந்து விலகிக்கொண்டார். மீண்டும் 2011- ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கமுதி ஒன்றியம்16-ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு மிக சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார். தோல்வியால் துவண்டு விடாது, அயராது கட்சிப்பணியிலும், பொதுமக்கள் சேவையிலும் ஈடுபட்டு வந்த திரு.உதயகுமார் அவர்கள், மீண்டும் கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு மகத்தான வெற்றிபெற்றார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒன்றியப் பெருந்தலைவருக்கான தேர்தலில் நடந்த பல்வேறு குளறுபடிகளுக்கும், நிர்ப்பந்தத்திற்கும் மத்தியில், எந்த உருட்டல் மிரட்டல்களுக்கு அஞ்சாமல்,பணம், பதவியைவிட சுயமரியாதையே முக்கியமாகக் கருதியவர், திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்களித்து வெற்றிபெற வைத்தார். இது அரசியல் வரலாற்றில் கமுதி ஒன்றியப் பெருந்தலைவர் பதவியை திமுகழகம் முதல்முறையாக கைப்பற்ற உதவியது.


சமுதாயத்தில் வளர்ந்து வரும் இளம் அரசியல்வாதியான திரு.உதயகுமார் அவர்கள், தன் பொதுவாழ்வின் பெரும்பகுதியை தேமுதிக-விற்காக அர்ப்பணித்துக்கொண்ட பொழுதும், குறைந்தபட்ச பலன்களைக்கூட அனுபவித்துக்கொண்டவரல்ல. ஆண்ட,ஆளும் கட்சிகளைத் தவிர்த்து சிறிய இயக்கங்களில் பயணிப்பவர்கள் மிகுந்த பொருட்செலவையும், சங்கடங்களையும் கடந்து, கொள்கையை உயர்த்திப்பிடிப்பவர்கள்  என்பது அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட நிலையிலும் தன்மானமே பெரிதென தரணிக்கு சொன்னது, மாவீரனின் வழித்தோன்றலில் வந்த இயல்பு. இதனையடுத்து, அரசியலில் அடுத்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் திரு.உதயகுமாரின் அரசியல் வாழ்வில் மிக முக்கியமானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. அந்த சோதனையைக் கடந்து செல்ல அவரின் பொதுவாழ்வு வழிகாட்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்தப் புதிய பொறுப்பின் மூலம் திரு.உதயகுமார் அவர்கள் சாதி,மத,இன,மொழி கடந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் பணியாற்றி, கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved