ஊராட்சி மன்றத் தலைவர் - நிலக்கோட்டை -திரு.S.பாண்டி
திரு.பாண்டி அவர்கள் 12.06.1955- இல் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள தோப்புப்பட்டி கிராமத்தில் திரு. சுப்பா நாயக்கர் – திருமதி. சுப்பம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். நடுநிலைப்பள்ளி வரை கல்வி பயின்றவருக்கு, திருமணமாகி, திருமதி.P.எர்ரம்மாள் என்ற மனைவியும், P.குணசேகரன், P.ராஜசேகரன் என்ற இருமகன்களும் உள்ளனர்.
சுமார் 40 ஆண்டுகாலமாக அஇஅதிமுக-வில் உறுப்பினராக உள்ள திரு.பாண்டி அவர்கள், 1995-ஆம் ஆண்டு கிளைக்கழக செயலாளராக பொறுப்பேற்று, கால்நூற்றாண்டு காலமாக அப்பொறுப்பில் இருந்தார். மேலும் ஊராட்சிக் கழக செயலாளராக பொறுப்பேற்று சமீப நாட்கள் வரை அப்பொறுப்பில் தொடர்ந்தார். தீவிர களப்பணியாளரான திரு.பாண்டி அவர்கள், கட்சியின் அனைத்து நிகழ்விலும் கலந்து கொண்டு வருபவர், கட்சியின் பொதுக்கூட்டம், மாநாடுகளுக்கு பெருமளவு மக்களைத் திரட்டி கலந்து கொண்டு வருகிறார். மேலும் ஆளும் கட்சியின் முன்னனி நிர்வாகியாக அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அடித்தட்டு மக்களுக்கு கொண்டு சேர்த்துள்ளார். தேர்தல் காலத்தில் மட்டுமல்லாது எந்த நேரத்திலும் மக்களோடு மக்களாக, அனைவரும் எளிதில் தொடர்பு கொண்டு தங்கள் குறைகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளுமளவு எளிமையானவராக திரு.பாண்டி அவர்கள் பொதுவாழ்வில் பயணித்து வருகிறார்.
2006-உள்ளாட்சித் தேர்தலிலிருந்து தேர்தல் களம் கண்டு வரும் திரு.பாண்டி அவர்கள், முதல் முறையாக 2006-ஆம் ஆண்டு நிலக்கோட்டை ஒன்றிய 2-ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் வேட்பாளராக அதிமுக சார்பில் களமிறங்கி தோல்வியைத் தழுவினார். ஆளும்கட்சி வேட்பாளரை எதிர்த்து களம் கண்ட இத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைப்பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து தீவிரமாக களப்பணியாற்றி வந்த திரு.பாண்டி அவர்கள், மீண்டும் அதே வார்டில் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக சார்பில் களமிறங்கி, ஒன்றியக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பதவியில் சிறப்பாக செயல்பட்ட திரு.பாண்டி அவர்கள் ஒன்றியக்குழு உறுப்பினர் நிதியின் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். மீண்டும் கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கோடாங்கிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திரு.பாண்டி அவர்கள் மகத்தான வெற்றிபெற்றுள்ளார். மிக நீண்ட அரசியல் அனுபவமுள்ள திரு.பாண்டி அவர்கள், இப்புதிய பொறுப்பின் மூலம் சாதி,மத,இன,மொழி பாகுபாடின்றி அனைவருக்கும் சிறப்பாக பணியாற்றி, வாய்ப்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.