அரசியல் வானில் ஒளிரும் கம்பளத்து நட்சத்திரம் - மதுரை-திரு.B.ஈஸ்வரன்.
திரு.B.ஈஸ்வரன் அவர்கள் 22.06.1981-இல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள உச்சபட்டி எனும் கிராமத்தில் திரு.பாலுச்சாமி நாயக்கர் – திருமதி.பிச்சையம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். உயர்நிலைப் பள்ளி வரை கல்வி பயின்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.E.வரதலட்சுமி என்ற மனைவியும் E.ஹரீஷ் என்ற மகனும் E.ப்ரியதர்ஷினி,E.விஜயலட்சுமி மற்றும் E. சந்தியா என்ற மூன்று மகள்களும் உள்ளனர்.
உயர்நிலைப்பள்ளி இறுதியாண்டுடன் கல்விக்கு விடைகொடுத்தவர் மதுரை தியாகராஜா நூற்பாலையில் பஞ்சாலைத் தொழிலாளியாக தன் வாழ்க்கையைத் துவங்கி, சுமார் 16 ஆண்டுகள் அத்தொழிற்சாலையில் பணியாற்றினார். பள்ளி மாணவனாக இருந்த காலத்திலிருந்தே கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தீவிர ரசிகராக இருந்தவர், நூற்பாலையில் பணியாற்றிக்கொண்டே கேப்டன் மன்றத்தை துவங்கி ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வந்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 2005-இல் தேமுதிக-வைத் துவங்கிய பொழுது அதில் இணைந்து தீவிரப்பணியாற்றினார். அவரின் துடிப்பான செயல்பாட்டால் திருமங்கலம் ஒன்றிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். மேலும் அக்கட்சியில் ஒன்றிய மாணவரணிச்செயலாளராகவும், இளைஞரணி செயலாளராகவும் நியமிக்கப்பட்ட பொழுதும் சிறப்பாக செயலாற்றியுள்ளார். தேமுதிக-வின் மாநாடுகளுக்கு பெருமளவில் மக்களை தன் சொந்த செலவில் அழைத்துச்சென்று கலந்துகொள்வதுடன், ஒவ்வொரு வருடமும் கேப்டன் பிறந்தநாளை கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்கி திருவிழாபோல் கொண்டாடி வந்துள்ளார். அரசியல் சேவை தவிர சமுதாய சேவையிலும் குறைவைக்காமல் செயல்படுபவர், த.வீ.க.பண்பாட்டுக்கழகத்தின் இளைஞரணி தலைவராக பணியாற்றி வருகிறார். 2006 மற்றும் 2011 உள்ளாட்சித் தேர்தல்களில் உறவினர்களை ஊராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் தலைவர் பதவிகளுக்கு களமிறக்கி தீவிரமாகப் பணியாற்றி வெற்றிபெற அரும்பாடுபட்டுள்ளார்.
2016-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டவர், 2012-களிலிருந்தே ரியல்எஸ்டேட் தொழில்களில் கவனம் செலுத்தி மாற்று வருவாய்க்கு ஏற்பாடு செய்து கொண்டார். பொதுமக்களுடன் எப்பொழுதும் தொடர்பிலேயே இருப்பவர், அவர்களின் அடிப்படைத் தேவைகளான ரேஷன்கார்டு, ஆதார் கார்டு, சமையல் எரிவாயு இணைப்பு, மருத்துவ உதவி, காப்பீட்டுத்திட்டம், காவல் நிலையப்பிரச்சினைகள் என எதுவாகிலும், சாதி-மத,இன-மொழி பாரபட்சமின்றி பொதுமக்களுக்கு பைசா செலவின்றி நிறைவேற்றிக் கொடுத்ததின் மூலம் மக்களின் நெஞ்சங்களில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2016-ஆம் ஆண்டு உள்ளாட்சித்தேர்தலின் பொழுது தன் நூற்பாலை வேலையைத் துறந்து,பொதுமக்கள் சேவைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணிக்க தயாரானவர், அத்தேர்தல் ரத்தான பொழுதும் சோர்ந்துவிடாமல் பொதுப்பணியாற்றி வந்துள்ளார்.
2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், சுமார் நான்காயிரத்துக்கும் அதிகமான வாக்காளர்களை உள்ளடக்கிய உச்சபட்டி ஊராட்சியில், சாதி-மத அடையாளங்களைக் கடந்து தொடர்ந்து பணியாற்றி வந்ததின் பலனாக, தனது தாயார் திருமதி.பிச்சையம்மாள் அவர்களை உச்சபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சுயோட்சை வேட்பாளராகக் களமிறக்கி வெற்றிபெறச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதாரண பஞ்சாலைத் தொழிலாளியாக பொதுவாழ்வில் நுழைந்து 20 ஆண்டுகாலம் காத்திருந்ததுடன், நண்பர்களுக்கு வாய்ப்புள்ள இடங்களில் அவர்களை களமிறக்கி, தீவிர பணியாற்றியதுடன், தொடர்பொதுமக்கள் சேவையிலும் ஈடுபட்டு வந்துள்ள திரு.ஈஸ்வரன் அவர்களுக்கு, பொருளாதார சூழல் பெரும்சுமையாகவே இருந்திருக்கக்கூடும். இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் களப்பணியில் திட்டமிட்டு பணியாற்றி வரும் திரு.ஈஸ்வரன் அவர்கள், தனக்குக்கிடைத்துள்ள இந்த புதிய பொறுப்பின் மூலம் சாதி-மத,மொழி-இன அடையாளங்களைக் கடந்து பாரபட்சமின்றி செயல்பட்டு நிச்சயம் பிரகாசிப்பார் என்பதில் ஐயமேதுமில்லை. வரும்காலங்களிலும் தனது சரியான திட்டமிடலைத் தொடர்வதுடன், சரியான அரசியலையும் தேர்ந்தெடுத்து, மென்மேலும் பல பதவிகளைப்பெற்று சமுதாயத்திற்கு பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.