அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம் -திண்டுக்கல். திரு.P.அன்பரசு.
திரு.P.அன்பரசு அவர்கள் 04.02.1969-இல் திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அருகேயுள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் திரு.R.S.பழனிச்சாமி – திருமதி. பொம்மாயி அம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர் ஜவுளி தொழில்நுட்பவியலில் பட்டயப்படிப்பு (D.T.T)முடித்துள்ளார்.இவருக்கு திருமணமாகி திருமதி.A.சுந்தரி (இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீலநிறத்திலுள்ள பெயரை க்ளிக் செய்யவும்) என்ற மனைவியும், திரு. A.விஜய் பிரியதர்ஷன் என்ற மகனும், A.விஷ்வஹரிணி என்ற மகளும் உள்ளனர்.
1990-இல் தனது பட்டயப்படிப்பை கோவையில் முடித்தவர், திருப்பூரிலுள்ள சதர்ன் டெக்ஸ்டைல்ஸ் என்ற நிறுவனத்தில் ஒருசில ஆண்டுகள் பயிற்சி பெற்றார். பின்னர் நண்பர்களுடன் இணைந்து “Skymoon Garments” என்ற ஏற்றுமதி பின்னலாடை நிறுவனத்தை நடத்தி வந்தனர். பின்னர் ASM UNITS என்ற பெயரில் நிறுவனத்தையும் தொடங்கி நடத்தினார்.2006-07- ஆம் ஆண்டுவாக்கில் திருப்பூர் சாயப்பட்டறை கழிவுநீர் மற்றும் பின்னலாடைத்தொழிலில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளால், அத்துறையிலிருந்து தன்னை முற்றிலும் விடுவித்துக்கொண்டார். தனது 15-ஆண்டுகால திருப்பூர் வாழ்க்கைக்கு விடை கொடுத்தவர் மலையும்,மலைசார்ந்த பகுதியும், வானம் பார்த்த பூமியுமான திண்டுக்கல் அருகேயுள்ள சொந்த ஊருக்கு திரும்பினார்.
பலவருடங்களுக்கு முன், தந்தையார் திரு.பழனிச்சாமி அவர்களால் வாங்கப்பட்ட பாறை நிலம் விவசாயத்திற்கு பயனற்று தரிசாக நீண்டநாட்களாக இருந்து வந்தது. நவீன தொழில்நுட்ப கருவிகளின் வரவால் அது தற்பொழுது கனிமவளச் சுரங்க பூமியாக மாறியிருந்தது. அங்கு தனக்கான தொழில் வாய்ப்புகளை ஆராய்ந்தவர், 2006 –ஆண்டில் செந்தூர் கிரஷர் ஒர்க்ஸ் என்ற பெயரில் நிறுவனத்தை துவங்கினார். அதே காலகட்டத்தில் இந்தியா முழுவதும் ரியல்எஸ்டேட் துறை சூடிபிடித்திருந்தது. ஆதலால் செந்தூர் கிரஷர் ஒர்க்ஸிலிருந்து உற்பத்தியாகும் கட்டுமானத்திற்குத் தேவையான ஜல்லி, கிரஷர் பவுடருக்கு நல்ல கிராக்கி இருந்தது. திருப்பூர் சென்று திரும்பியவருக்கு தாய்மண் ஆதரவளித்து அணைத்துக்கொள்ள, ஒருசில ஆண்டுகளில் தொழில்துறையில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.
15-20 ஆண்டுகால இடைவெளியில் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் தன் வாழ்க்கையில் அனுபவித்திருந்தார் திரு.அன்பரசு அவர்கள். திருப்பூரில் ஒகோ என்று வாழ்ந்தவர்களையும், மீள முடியாமல் சரிந்தவர்களையும் சமகால வாழ்வில் கண்ணெதிரே கண்டார். பாரம்பரியமான குடும்பமாக, உள்ளூரில் அந்தஸ்துமிக்க குடும்பத்தில் பிறந்தவராதலால் இந்த மாற்றங்களை எளிதில் உள்வாங்கிக்கொள்ள முடிந்தது. பின்னலாடை தொழில் ஜாம்பவான்கள் பலருடைய வாழ்க்கையை புரட்டிப்போட்ட நிலையில், திரு.அன்பரசு அவர்கள் முற்றிலும் வீழ்ந்து விடாமல், சிராய்ப்புகளுடன் காப்பாற்றியது முன்னோர்கள் செய்தபாக்கியம். அது திரு.அன்பரசு அவர்களும் உணர்ந்திடாமல் இல்லை. ஆதலால் மேலும், மேலும் பொருளீட்ட வேண்டும், புதிய புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்று எண்ணாமல், தொழிலுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்திலும்,, செலவிடும் நேரத்திலும் சற்றும் குறைவின்றி, காலதாமதமின்றி பொதுநல சேவைகளுக்கும் அளிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார் திரு.அன்பரசு அவர்கள்.
பொதுநல சேவையாற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,அரிமா சங்கங்கள், அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் என பலவழிகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து ஈடுபட்டிருக்கலாம். அதற்கேற்றாற்போல், இவரின் குடும்பம் பாரம்பரிய திமுக ஆதரவு குடும்பமாகவே இருந்து வருகிறது. தவிர,திரு.அன்பரசு அவர்களும், நீண்ட காலமாக திமுகவில் அடிப்படை உறுப்பினராக உள்ளார். மேலும், இவரின் தாயார் திருமதி.பொம்மாயி அம்மாள் அவர்கள், ஏற்கனவே 1996-2001 வரை தொட்டப்புள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் என பலமான அரசியல் பின்புலமும் உண்டு.
அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்து தீவிர களப்பணியாற்றும் பட்சத்தில், நிச்சயம் குறிப்பிட்ட சில வருடங்களில் கட்சியில் பதவிகளையும், பொறுப்புகளையும் பெற்றிருக்க முடியும். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாத திரு.அன்பரசு அவர்களின் சிந்தனை வேறு மாதிரி இருந்தது. பொதுச்சேவையில் செலவிடப்படும் பணமும், நேரமும், குறிப்பிட்ட காலவரையரைக்குள் சமூகத்தில் தாக்கமும்,பலனும் ஏற்படவேண்டும் என்று விரும்பினார். அதனடிப்படையில் சமூகத்தின் தேவையென்ன, அதற்கு தன்னால் என்ன செய்திட முடியும், பொருளாதார ரீதியாக என்ன செலவாகும், தன்னால் எவ்வளவு நேரம் செலவிட முடியும் என்று தெளிவான திட்டத்தை வகுத்துக்கொண்டு பொதுவாழ்வில் காலடி எடுத்து வைத்தார் திரு.அன்பரசு அவர்கள்.
அந்த அடிப்படையில் 2009-10 ஆம் ஆண்டுகளில் கிராமப்புற, ஏழை-எளிய மாணவர்கள் அரசுப் போட்டித்தேர்வுகளில் கலந்துகொண்டு வெற்றிபெற, தகுதியும், திறமையும் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் பயிற்சி வகுப்புகளை நடத்தத் துவங்கினார். கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பரிசுகள் வழங்கி ஊக்குவித்து வருகிறார். இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க பயிற்சிகள் மற்றும் இயற்கை விவசாயம் செய்ய்ய விவசாயிகளை ஊக்குவித்தும் வருகிறார். மேலும் விவசாயிகள் நேரடியாக பார்த்து பயன்பெரும் வகையில் மாதிரிப்பண்ணையும் அமைத்துள்ளார். பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு துறைசார்ந்த நிபுணர்களை தன் சொந்த செலவில் கிராமத்திற்கே அழைத்து வந்து மாணவர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் ஆலோசனைகள் வழங்கிவருகிறார்.
அதாவது, எதோ ஒருதுறையில் மட்டும் கவனம் செலுத்தாமல், சுற்றுப்புற கிராமத்தின் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, மாணவர்கள் முதல் தொழில்துறையினர் வரை அனைவருக்கும், அவரவர் துறைசார்ந்த அறிவை, நிபுணத்துவத்தை, பல்வேறு துறைசார்ந்த அறிவுஜீவிகள், நிபுணர்களைக் கொண்டு ஆலோசனைகளை வழங்கிவருகிறார் திரு.அன்பரசு அவர்கள்.
பொதுநலசேவையை பலகோணங்களில் ஆராய்ந்து, மக்களுக்குத் தேவையானதை பூர்த்திசெய்து, அனைத்து தரப்பும் ஒருங்கிணைந்து வளர தனிப்பட்ட முறையில் பல முயற்சிகளை சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக செய்துவருகிறார் திரு.அன்பரசு அவர்கள். இதற்கிடையில் 2019-டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் மூலம் அதிகாரமும் இவரின் கையில் கொடுத்தால் இன்னும் கூடுதலாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று நம்பிய உள்ளூர் மக்களின் கோரிக்கையையும், தொடர் வற்புறுத்தல்களையும் புறக்கணிக்க முடியாமல், தனது துணைவியார் திருமதி.சுந்தரி அன்பரசு அவர்களை தொட்டப்புள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராக போட்டியிட வைத்தார். மக்களின் அமோக ஆதரவுடன் சுயோட்சையாக போட்டியிட்டு சுமார் 60% வீதமான வாக்குகளைப்பெற்று மகத்தான வெற்றி பெற்றுள்ளார் திருமதி.சுந்தரி (இவர் பற்றி மேலும் விபரங்களை அறிய நீலநிறத்திலுள்ள பெயரை க்ளிக் செய்யவும்) அவர்கள். பொதுவாழ்வில் இருந்த திரு.அன்பரசு அவர்களை அரசியல் பக்கம் நகர்த்தியுள்ள அம்மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், திரு.அன்பரசு அவர்கள் துணிந்து அரசியலில் களம் கண்டு அதிகாரங்களைப் பெறுவதின் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற முடியும் என்பது திண்ணம். இதை உறுதிப்படுத்தும் வகையில் திரு.அன்பரசு தம்பதியினர் .தற்பொழுது கிடைத்துள்ள இந்த வாய்ப்பின் மூலம் சிறந்த முன்மாதிரி ஊராட்சியாக மாற்றி, வாக்களித்த மக்களையும், சமுதாயத்தையும் பெருமைகொள்ளச் செய்ய வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.