அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம்- விளாத்திக்குளம்-திரு.எம்.செல்வராஜ்
திரு.M.செல்வராஜ்.B.Com.,அவர்கள் 05.04.1958-இல் தூத்துக்குடி மாவட்டம், புதூர் அருகேயுள்ள புதுச்சின்னையாபுரம் கிராமத்தில் திரு.முத்தையா நாயக்கர்- திருமதி.பாக்கியலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர் விருதுநகரில் உள்ள VHNSN கல்லூரியில் வணிகவியலில் (B.Com) இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி திருமதி.S.ராமஜெயலட்சுமி என்ற மனைவியும் S.பாரதிசுந்தரம், S.முத்துக்குமார் என்ற இரு மகன்களும், S.கவிநிலவு என்ற மகளும் உள்ளனர்.
மாணவப்பருவத்திலிருந்தே தீவிர அரசியலில் ஆர்வம் கொண்ட திரு.செல்வராஜ் அவர்கள், கல்லூரியில் தி.மு.க மாணவரணிச் செயலாளராக பதவி வகித்துள்ளார். கல்லூரி மாணவர் மன்றத்தின் சார்பில் நடைபெறும் கூட்டங்களுக்கு அன்று அரசியல் வட்டாரத்தில் இடி, மின்னல்,மழை என்று போற்றப்பட்ட திரு.க.சுப்பு, திரு.ரகுமான்கான், திரு.துரைமுருகன் போன்ற முன்னனி தலைவர்களை அழைத்துவந்து சிறப்புரை ஆற்றவைத்துள்ளார். அன்றிலிருந்து அதேவேகத்துடன் அரசியலில் பயணித்துவரும் திரு.செல்வராஜ் அவர்கள், தன் கல்லூரி வாழ்க்கைக்குப்பின் புதுச்சின்னையாபுரம் கிளைக்கழக செயலாளராக பொறுப்பேற்று 1981 முதல் 2013 வரை முப்பது வருடங்களுக்கும் மேலாக அப்பொறுப்பில் நீடித்து வந்தார். மேலும் 1986 முதல் ஒன்றிய இலக்கிய அணிச் செயலாளராகவும் பொறுப்புவகித்துள்ளார். 2014-ஆம் ஆண்டு முதல் கந்தசாமிபுரம் ஊராட்சிக்கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பின் மாவட்ட பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டார். முழு நேர அரசியல்வாதியான திரு.செல்வராஜ் அவர்கள் கட்சி நடத்திய நூற்றுக்கணக்கான போரட்டங்கள், மறியல்கள், ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றுள்ளார். இவரின் அயராத கட்சிப்பணியாலும், தீவிர விசுவாசத்தாலும் கவரப்பட்ட கட்சித் தலைமை தூத்துக்குடி மாவட்டம், புதூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் பதவியை வழங்கி கௌரவித்துள்ளது. திமு கழகத்தில் கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரே ஒரு ஒன்றியச் செயலாளர் திரு.செல்வராஜ் அவர்கள் என்பதும் 2018 முதல் அப்பொறுப்பில் தொடர்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மிக நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்காரரான திரு.செல்வராஜ் அவர்கள், 1996 முதல் 2001 வரை கந்தசாமிபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பு வகித்துள்ள திரு.செல்வராஜ் அவர்கள், பல்வேறு நலத்திட்டங்களையும், வளர்ச்சி திட்டங்களையும் ஊராட்சியில் செயல்படுத்தியுள்ளார். கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் புதூர் ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் திமுக வேட்பாளராகக் களமிறங்கி தோல்வியைத் தழுவினார். வெற்றி தோல்விகளைப் பொருட்படுத்தாத பக்குவமிக்க அரசியல் தலைவரான திரு.செல்வராஜ் அவர்கள் தொடர்ந்து பொதுவாழ்வில் பயணித்து, சாதி,மொழி,இன,மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் பணியாற்றி, வெற்றிகளைக் குவித்து, சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.