ஊராட்சி மன்றத் தலைவர் - விளாத்திகுளம் - திரு.A.ஈஸ்வரமூர்த்தி
திரு.A.ஈஸ்வரமூர்த்தி அவர்கள் 14.03.1980-இல் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம், K.சென்னராயபுரம் கிராமத்தில் திரு.அய்யரப்ப நாயக்கர் – திருமதி. வள்ளியம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் பிறந்தார். இவர் நடுநிலைப்பள்ளி வரை பயின்றுள்ளார், இவருக்கு திருமணமாகி திருமதி. E.முருகேஸ்வரி என்ற மனைவியும், E.மதுபாலா, E.நிர்மலா என்ற இரு மகள்களும் E.பிரவின்குமார் என்ற மகனும் உள்ளனர்.
இளம்வயதிலிருந்தே அரசியலில் அதிக ஆர்வமுள்ளவரான திரு.ஈஸ்வரமூர்த்தி அவர்கள், அதிமுக அடையாளத்துடன் வளர்ந்தவர். தனது 18-ஆவது வயதில் கழகத்தில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டவர், கிளைக்கழகச் செயலாளராகப் பொறுப்பேற்று, இன்றுவரை, ஏறக்குறைய கால்நூற்றாண்டு காலமாக அப்பதவியில் நீடித்து வருகிறார். பொதுமக்கள் சேவையில் முழுமையாக தன்னை அர்ப்பணித்துக்கொண்டு செயல்படுபவரான திரு.ஈஸ்வரமூர்த்தி அவர்கள், உள்ளூர் மக்களின் தேவைகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றிக்கொடுப்பதில் முனைப்புடன் செயல்படுபவர். தவிர உள்ளூர் நிகழ்வுகள் அனைத்திலும் முன்னின்று செயலாற்றுபவர், மக்களின் சுக-துக்கங்களில் பங்கெடுத்து அவர்களுக்கு ஆதரவாக இருப்பவர். கட்சியின் அனைத்து நிகழ்விலும் கலந்துகொள்பவர், கழக ஆட்சியில் நிறைவேற்றப்படும் நலத்திட்டங்களையும், உதவிகளையும் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் திறம்பட செயலாற்றுபவர்.
2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மிட்டாவடமலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். ஐந்து கிராமங்களை உள்ளடக்கிய மிட்டாவடமலாபுரம் ஊராட்சியில், கிராமங்களிலுள்ள அனைத்து சாலைகளையும் ஈரடுக்கு தார்சாலையாகவும், காங்கிரீட் சாலையாகவும் மாற்றியுள்ளார். ஊராட்சிக்குட்பட்ட மூன்று துவக்கப்பள்ளிகளுக்கும் சுற்றுச்சுவர் அமைத்து குடிநீர் வசதியை ஏற்படுத்திக்கொடுத்ததுடன், அனைத்து பள்ளிகளுக்கும் அங்கன்வாடி மையம் அமைத்துக்கொடுத்துள்ளார். மயானம் செல்லும் சாலைகளை சீர்படுத்தி எரிமேடை கட்டித்தந்துள்ளார். மேலும் கிராமத்திலுள்ள ஊரணிகளை தூர்வாரி ஆழப்படுத்தியதுடன், அதில் போர்வெல் அமைத்து, மின்மோட்டார் பொறுத்தி, சிண்டெக்ஸ் டேங்க்குகள் மூலம் சீரான குடிநீர் வினியோகத்தையும் செய்வதால், குடிநீர் தட்டுப்பாடற்ற கிராமமாக மாற்றியுள்ளார்.
விவசாயிகளுக்கு மானியவிலையில் பேட்டரியில் இயங்கும் பவர் ஸ்ப்ரேயர், தார்பாய், கடப்பாரை, மண்வெட்டி உள்ளடக்கிய தொகுப்பை பெற்றுக்கொடுத்துள்ளார். மானாவரி விவசாயத்தைப் பெறுக்குவதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட பண்ணைக்குட்டைகளை அமைத்துக்கொடுத்துள்ளவர், அதற்கு விவசாயிகள் பங்களிப்பாக வழங்கவேண்டிய 4% பங்குத்தொகையை வாங்காமல் அமைத்துக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏழைகளுக்கு பசுமை வீடு, இந்திரா நினைவு குடியிருப்பு போன்ற திட்டங்கள் மூலம் வீடுகட்டிக் கொடுத்துள்ளார். தவிர, கிராமப்புற ஏழைகளின் பொருளாதாரத்தைப் பெறுக்குவதற்காக வழங்கப்பட்ட இலவச ஆடு வழங்கும் திட்டத்தினை கிராமத்தில் சிறப்பான முறையில் செயல்படுத்தியுள்ளார் திரு.ஈஸ்வரமூர்த்தி.
தனது பதவிகாலத்தில் சிறுநீரக்கோளாரால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்றுவந்தநிலையிலும் சிறப்பான நிர்வாகத்தையும், சுமார் ஒருகோடிக்கும் அதிகமான நிதியிணைப்பெற்று வளர்ச்சித் திட்டங்களையும், கிராமத்தின் அடிப்படைத் திட்டங்களையும் நிறைவேற்றி சாதனை புரிந்தவரான திரு.ஈஸ்வரமூர்த்தி அவர்கள், வல்லநாடு கூட்டுக்குடி நீர் திட்டத்தினை செயல்படுத்தி ஊராட்சியின் குடிநீர் பஞ்சத்தை முற்றிலும் போக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளவரான திரு.ஈஸ்வரசாமி அவர்கள் 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாமல் தவிர்க்க விரும்பிய நிலையில், ஆதரவாளர்கள் மற்றும் நலம்விரும்பிகள் திரு.ஈஸ்வரமூர்த்திக்காக வேட்புமனுவைப்பெற்று தாக்கல் செய்து, வற்புறுத்தி போட்டியிடச் செய்துள்ளனர். எனவே 2019-இல் மீண்டும் மிட்டா வடமலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மக்களின் அபிமானத்தையும், அன்பையும் பெற்றவரான திரு.ஈஸ்வரசாமி அவர்கள், தொடர்ந்து அனைத்து மக்களுக்காகவும் பணியாற்றி சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.