ஒன்றியக்குழு உறுப்பினர்- சிவகாசி.திரு.K.சங்கையா.
திரு.K.சங்கையா அவர்கள் 1966-இல் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள வளையபட்டி கிராமத்தில் திரு.காவேரி நாயக்கர் – திருமதி. பேச்சியம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். தொடக்கப்பள்ளி அளவில் கல்வி பயின்றவர், பின்னர் பெற்றோர்களுக்கு உதவியாக விவசாயப்பணியில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு திருமணமாகி திருமதி.S.தங்கம் என்ற மனைவியும், S.நாகராஜன் என்ற மகனும் S.விஜயலட்சுமி மற்றும் S.கார்த்தீஸ்வரி என்ற இரு மகள்களும் உள்ளனர்.
தீவிர திராவிட இயக்கப்பற்றாளரான திரு.சங்கையா அவர்கள், டாக்டர்.கலைஞர் அவர்களின் மீதான தீவிரப்பற்றால், 1980-ஆம் ஆண்டு தனது 14-ஆவது வயது முதலே கழக நிகழ்ச்சிகளிலும், தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களிலும் கலந்து கொள்வார். 1990-ஆம் ஆண்டு முதல் சிவகாசி ஒன்றியம், பள்ளபட்டி ஊராட்சி மன்றம், மீனாட்சி காலணியின் கிளைக்கழக செயலாளராக, ஏறக்குறைய சுமார் 30 ஆண்டுகளாக பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 8-வருடங்களாக விருதுநகர் மாவட்ட விவசாய அணியில் துணைச்செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். தனது 40 ஆண்டுகால அரசியல் வரலாற்றில், கட்சி அறிவிக்கும் அனைத்து போராட்டங்களிலும் தவறாது கலந்து கொள்பவர், 2001-ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இதுவரை மதுரை மத்திய சிறையில் மூன்று முறையும், பாளையங்கோட்டை சிறையில் இரண்டு முறையும் நீண்டநாள் சிறைவாசியாக அடைக்கப்பட்டுள்ளார். இதுதவிர கட்சி அறிவிக்கும் பஸ் மறியல், இரயில் மறியல், மாவட்ட ஆட்சியர் அலுவலம், மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகைப்போராட்டம் என மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து நடக்கும் பல்வேறு போராட்டங்களில் நூற்றுக்கணக்கானமுறை கைதாகியுள்ளார் திரு.சங்கையா என்பது குறிப்பிடத்தக்கது.
1996-ஆம் ஆண்டு முதல் நடைபெறும் அனைத்து உள்ளாட்சி மன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வரும் திரு.சங்கையா அவர்கள், 1996-ஆம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பத்தாண்டுகள் பள்ளபட்டி ஊராட்சி மன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். அவர் ஊராட்சி மன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்த காலத்தில் அவ்வூராட்சியில் சிமெண்ட் காங்கிரீட் சாலைகள், உயர்மட்ட நீர்தேக்கத்தொட்டி, குடிநீர் குழாய், மயானக்கூரை, நமக்கு நாமே திட்டப்பணிகள், அண்ணா மறுமலர்ச்சித் திட்டப்பணிகள், தெரு விளக்குகள், பொதுக்கழிப்பிட வசதி, ஆழ்குழாய் கிணறு போன்ற பல்வேறு அடிப்படைத்திட்டங்களை ஊராட்சியின் மூலம் நிறைவேற்ற உறுதுணையாக இருந்துள்ளார். 2006 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில் சிவகாசி ஒன்றியம் 13-ஆவது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தலில் கழகத்தின் சார்பில் பணித்தபொழுது, கட்சியின் கட்டளையை ஏற்றுக்கொண்டு போட்டியிட்டவர், இருமுறையும் மிகச்சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இருமுறை தொடர்தோல்விகளை சந்தித்தவர், 2006-லிருந்து சுமார் 14 வருடங்கள் உள்ளாட்சிப் பதவிகளில் ஏதுமில்லாதபொழுதும், இயக்கப்பணிகளிலும், சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல் பணிகளிலும், பொதுமக்கள் சேவையிலும் தொடர்ந்து தீவிரமாக களப்பணியாற்றி வந்தார் திரு.சங்கையா அவர்கள்.
இதன் பலனாக கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஏற்கனவே இருமுறை போட்டியிட்டு தோல்வியுற்ற சிவகாசி ஒன்றியம் 13-ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் திரு.சங்கையா அவர்கள். அரசியலில் நீண்டகால அனுபவமும், கட்சியில் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றி வரும் திரு.சங்கையா அவர்கள், கடுமையான தொடர் முயற்சிக்குப்பின் இந்த வாய்ப்பினை பெற்றவர், சாதி,மதம்,இனம்,மொழிக்கு அப்பாற்பட்டு, அனைவருக்கும் பாரபட்சமின்றி பணியாற்றி, வாய்ப்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.