ஊராட்சி மன்றத் தலைவர்-பெருந்துறை-திருமதி.வளர்மதி ரங்கசாமி
திருமதி.வளர்மதி ரங்கசாமி அவர்கள் 1976-ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகேயுள்ள மாரநாயக்கனூர் கிராமத்தில் திரு.பொம்முராஜ் – திருமதி.குப்பம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். தொடக்கப்பள்ளி வரை கல்வி பயின்றவர், பெருந்துறை அருகேயுள்ள புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு.பங்காரு (எ) ரங்கசாமி அவர்களை மணமுடித்துள்ளார். இத்தம்பதியினருக்கு, R.வைஷ்ணவி.B.A, R.சசிபிரபா என்ற இரு மகள்களும் R.ஸ்ரீஹரிபிரகாஷ் என்ற மகனும் உள்ளனர்.
திரு.பங்காரு (எ) ரங்கசாமி அவர்கள் 1971-ல், திரு.பொம்மநாயக்கர் – திருமதி.சென்னியம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப்பிறந்தார். 7-ஆம் வகுப்பு வரை பயின்றவர், குன்னத்தூரிலுள்ள லேத் ஓர்க்ஷாப்பில் கூலித்தொழிலாளியாக சுமார் ஐந்து வருடங்கள் பணியாற்றினார். அதன் பின்னர் வீடுகளுக்கு ஒயரிங் செய்யும் எலக்ட்ரீசியன் பணியில் ஈடுபட்டவர், அதில் எட்டாண்டு காலம் பணியாற்றினார்.
தனது திருமணத்திற்குப்பின் மினிடோர் ஆட்டோ சொந்தமாக வாங்கி, திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்கத்தொடங்கினார். பின்னர் 2004 ஆம் ஆண்டு திருப்பூரில் குடியேறியவர் 2017 வரை அங்கு குடும்பத்துடன் வசித்து வந்தார். தனது தந்தையார் மறைவுக்குப்பின் விவசாயப்பணிகளை கவனிக்க வேண்டியிருந்ததால் சொந்த ஊருக்கு திரும்பியவர், தற்பொழுதும் டாடா ஏஸ் எனும் சரக்கு வாகனத்தை திருப்பூருக்கு இயக்கி வருகிறார்.
இளமைக்காலம் தொட்டே அதிமுக ஆதரவாளராக இருந்தவர், 1996-இல் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கல்லாகுளம் ஊராட்சி மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபின், அதிமுக-வில் இணைந்து கிளைக்கழக செயலாளரானார். ஊராட்சி மன்ற உறுப்பினராக 2001 வரை சிறப்பாக செயல்பட்டவர், அதற்குப்பின் தேர்தல்களில் போட்டியிடவில்லை. 1996-இல் அதிமுக கிளைக்கழக செயலாளராக பொறுப்பேற்றவர், 2019-இல் தனது துணைவியார் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி அப்பொறுப்பிலிருந்து விலகினார். திரு.ரங்கசாமி அவர்கள் கிளைக்கழக செயலாளராக இருந்த காலத்தில் அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை எளிய மக்களிடன் கொண்டு சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பூரில் குடியேறிய நிலையிலும் வாரமொருமுறை சொந்தகிராமம் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர், அனைத்து தரப்பு மக்களிடமும் அன்பு பாராட்டுவதுடன், அவர்களின் சுக-துக்கங்களிலும் பங்கெடுத்து வந்துள்ளார்.
கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் சொந்த ஊரில் குடியேறியவர், தொடர்ந்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியின் வேட்பாளருக்காக சிறப்பாக பணியாற்றியதுடன், தொடர்ந்து மக்கள் நலப்பணிகளிலும் ஈடுபட்டு வந்தார் திரு.ரங்கசாமி அவர்கள். இந்நிலையில் 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கல்லாகுளம் ஊராட்சி மன்றத் தேர்தலில் தனது துணைவியார் திருமதி.வளர்மதி அவர்களைக் களமிறக்கி சுமார் 70% வாக்குகளைப்பெற்று மகத்தான வெற்றி பெற்றுவாகை சூடியுள்ளார். வெளியூரிலிருந்து குடியேறிய ஒருசில ஆண்டுகளே ஆன நிலையிலும் 70% வாக்குகளைப்பெற்றது, மக்கள் இத்தம்பதியினர் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இந்த நம்பிக்கையைப் பாதுகாத்திடும் வகையில் இப்புதிய பொறுப்பில் சாதி, மதம், இனம்,மொழி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாகப் பணியாற்றி, வாய்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுகிறோம்.