ஊராட்சி மன்றத் தலைவர் - கடலாடி - திரு.S.லிங்கராஜ்
திரு.S.லிங்கராஜ் அவர்கள் 1964 -இல் இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே செஞ்சடைநாதபுரம் கிராமத்தில் திரு.சுப்பா நாயக்கர் – திருமதி.மீனாட்சியம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாகப் பிறந்தார், தொடக்கப்பள்ளி வரை பயின்றுள்ளவர் விவசாயப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். திரு.லிங்கராஜ் – திருமதி.இராமலட்சுமி தம்பதியினருக்கு L.சுப்புராஜ், L.மலைராஜ் என்ற இருமகன்களும், L.மல்லிகா, L.நாகராணி, L.அமுதராணி என்ற மூன்று மகள்களும் உள்ளனர்.
திரு,வைகோ அவர்களின் மேடைப்பேச்சுகளிலும், நாடாளுமன்ற பேச்சிலும் கவர்ப்பட்டு அரசியலுக்கு வந்தவரான திரு.லிங்கராஜ் அவர்கள், 1993-இல் வைகோ அவர்கள் மதிமுக-வைத் துவங்கியபொழுது அக்கட்சியில் இணைந்தார். இயக்கப்பணிகளில் தீவிரமாக செயல்பட்டவர் ஒன்றிய விவசாய அணிச்செயலாளராக 1993 முதல் 2006 வரை பணியாற்றி வந்துள்ளார். திரு.வைகோ அவர்கள் மேற்கொண்ட எழுச்சிப்பயணம் உட்பட பல்வேறு நடைபயணங்களிலும், மாநாடுகள் பொதுக்கூட்டங்களிலும் கலந்துகொண்டு வந்துள்ளார். மேலும், ம.தி.மு.கழகம் முன்னெடுத்த பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு பலமுறை கைதாகியுள்ளார். 2006-முதல் தி.மு.கழகத்தில் இணைந்து பணியாற்றி வரும் திரு.லிங்கராஜ் அவர்கள் 2011-முதல் ஊராட்சிக்கழக செயலாளராகவும், அதற்குப்பின் கிளைக்கழக செயலாளராகவும் பொறுப்பேற்று திறம்பட செயலாற்றி வருகிறார்.
2006 மற்றும் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கடலாடி ஒன்றியம் செஞ்சடைநாதபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் வேட்பாளராக தனது துணைவியார் திருமதி.இராமலட்சுமி லிங்கராஜ் அவர்களை களமிறக்கி மகத்தான வெற்றி பெறச்செய்துள்ளார். பத்தாண்டுகள் ஊராட்சி மன்றத்தலைவராக பணியாற்றிய காலத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களையும், மக்கள் நலத்திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளார். தார்சாலைகள், காங்கிரீட் சாலைகள், தெருவிளக்குகள், குடிநீர், சுகாதாரம் போன்ற அடிப்படைத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து நிறைவேற்றிக்கொடுத்துள்ளார். இதன் மூலம் குடிநீர் தட்டுப்பாடற்ற ஊராட்சியாக மாற்றியதுடன், ஏழை-எளியோருக்கு ஆடு,மாடுகள், பசுமை வீடுகள்,அங்கன்வாடி மையங்கள், ரேசன் கடை, மயானப்பாதை, எரிமேடை, பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர், குடிநீர் வழங்கள் போன்ற பல்வேறு பணிகளை செவ்வனே நிறைவேற்றியுள்ளனர் திரு.லிங்கராஜ் தம்பதியினர். மேலும்,அரசின் அனைத்து மக்கள் நலத் திட்டங்களின் சலுகைகளையும், பலன்களையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்த்துள்ளவர், உதவி,கோரிக்கை என்று தன்னை நாடிவரும் மக்களுக்கு தன்னாலான உதவிகளை செய்து கொடுத்துள்ளார். தவிர உள்ளூரில் அனைத்து முக்கிய நிகழ்விலும் மக்களின் சுக, துக்கங்களிலும் கலந்து கொண்டு மக்களோடு மக்களாக, மக்கள் எளிதில் அணுகும் அரசியல் தலைவராக இருந்து வருகிறார் திரு.லிங்கராஜ் அவர்கள்.
இந்நிலையில் கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் செஞ்சடைநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராக களமிறங்கி மகத்தான வெற்றி பெற்றார். கால்நூற்றாண்டுகளுக்கும் மேலாக அரசியலில் பயணித்து வரும் திரு.லிங்கராஜ் அவர்கள் இப்புதிய பொறுப்பின் மூலம் சாதி,மத,இன, மொழி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவையாற்றி, சார்ந்திருக்கும் கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.