ஒன்றியக்குழு உறுப்பினர் - கமுதி - திருமதி.கவிதா முத்துக்கிளி
திருமதி.கவிதா முத்துக்கிளி அவர்கள் 1988-ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கீழவலசை கிராமத்தில் திரு.சுந்தரராஜ் நாயக்கர் –திருமதி.லட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். நடுநிலைப்பள்ளி வரை கல்வி பயின்றுள்ளவர், கமுதி அருகேயுள்ள உடைகுளம் திரு.முத்துக்கிளி அவர்களை மணமுடித்துள்ள இத்தம்பதியினருக்கு வான்மதி,வானுப்ரியா என்ற இரு மகள்களும் திருவாசகம் என்ற மகனும் உள்ளனர்.
இளம் வயதிலிருந்தே பொதுப்பணியை முழுநேரப்பணியாக ஏற்று செயல்பட்டு வரும் திரு.முத்துக்கிளி அவர்களை மணம் முடித்ததின் மூலம் குடும்பப்பொறுப்பு, விவசாயப்பணிகள், குழந்தை வளர்ப்பு மற்றும் கல்வி போன்ற பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல் இயல்பிலேயே திருமதி.கவிதா அவர்களின் தோள்களில் சுமத்துப்பட்டிருக்கும். இருந்தபோதிலும், அதை இன்முகத்துடன் தன் தோள்களில் தாங்கிக்கொண்டவர், திரு.முத்துக்கிளிக்கு தொடர்ந்து ஆதரவு நல்கி வந்தார். கட்சிப் பொறுப்போ, உள்ளாட்சி நிர்வாகப்பொறுப்போ ஏதும்வகிக்காத தன் கணவரை, எந்த ஆதாயமும் இல்லாமல் செயல்படும் கணவரை தொடர்ந்து அவர் விரும்பும் தளத்தில் இயங்க அனுமதிக்க பெரிய மனது இருக்க வேண்டும். அந்த மனமும், குணமும் திருமதி.கவிதா அவர்களுக்கு இருந்தது, திரு.முத்துக்கிளி அவர்களின் பாக்கியம் என்றுதான் சொல்லவேண்டும்.
திருமதி.கவிதா அவர்களின் இந்த பொறுமைக்கும், தியாகத்திற்கும் இயற்கை வழங்கிய அருட்கொடையாக, சுமார் 30-ஆண்டுகள் தேர்தல் அரசியல் விரதம் பூண்டு பயணித்து வரும் திரு.முத்துக்கிளி அவர்கள் 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கட்சியின் கட்டளையை ஏற்று முதல்முறையாக தேர்தலில் களம் காண சம்மதித்தார். அந்த வாய்ப்பு மகளிருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் கிடைத்தபடியால் மிக அதிக தியாகத்தைச் செய்தவரான திருமதி.கவிதா அவர்களுக்கு கிட்டியது. எதிர்கட்சியாக போட்டியிட வேண்டிய சூழலிலும் ஆளும் கட்சியின் அதிகார பலம், பணபலத்தை எதிர்கொண்டு கமுதி ஒன்றியம் 14-ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் திமுகழகம் சார்பில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றுள்ளார் திருமதி.கவிதா முத்துக்கிளி அவர்கள்.
எக்கட்சியிலும் சேராமல் தன் பொதுவாழ்க்கையை தொடங்கி, அதில் நீண்ட காலம் பயணித்த திரு.முத்துக்கிளி அவர்களின் விருப்பத்தின்படியே தொடர்ந்து இயங்க ஆதரவளித்து, குடுமப்பப் பொறுப்புகளை தன் தோளில் சுமந்துகொண்ட திருமதி.கவிதாவின் குணம் போற்றுதலுக்குறியது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அந்த குணத்திற்கும், மனதிற்கும் ஏற்றாற்போல் இந்த புதிய பொறுப்பினைப் பெற்றுள்ள திருமதி.கவிதா முத்துக்கிளி தம்பதியினர் சாதி, மொழி,மதம், இன வேறுபாடுகள் கடந்து அனைவருக்கும் சிறப்பான முறையில் பணியாற்றி வாய்ப்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்