🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம்-கமுதி.திரு.S.முத்துக்கிளி.

திரு.S.முத்துக்கிளி அவர்கள் 13.08.1982-இல் இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள உடைகுளம் கிராமத்தில் திரு.சடையாண்டி நாயக்கர் –திருமதி.பெருமாளம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். நடுநிலைப்பள்ளி வரை கல்வி பயின்றுள்ளவர், பின்னர் பெற்றோர்களுக்கு ஆதரவாக விவசாயப்பணிக்கு திரும்பினார். இவருக்கு திருமணமாகி திருமதி.M.கவிதா என்ற மனைவியும் M.வான்மதி, M.வானுப்ரியா என்ற இரு மகள்களும், M.திருவாசகம் என்ற மகனும் உள்ளனர்.


திரு.முத்துக்கிளி அவர்கள் 1990-ஆம் ஆண்டில் தனது 18-ஆவது வயதில் பொதுவாழ்க்கைக்கு வந்தார். எந்தக் கட்சியிலும் இணையாமல், அக்கிராம மக்களுக்கு ஊழியனாக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள், பிரச்சினைகள் அனைத்திற்கும் முன்னின்று பணியாற்றி வந்தார். ஏழை-எளியோருக்கு ரேசன் கார்டு, முதியோர் உதவித்தொகை, கேஸ் இணைப்பு, சிலிண்டர் விநியோகம், குடிநீர் விநியோகம், காவல் நிலையங்களில் உதவுதல், உள்ளூர் திருவிழா, இலவச வீட்டுமனை, தெரு விளக்குகள் பராமரித்தல் என சுக-துக்கங்கள் அனைத்திலும், அவர்களின் குடும்பத்தில் ஒருத்தராக இருந்து செயலாற்றி வந்தார் திரு.முத்துக்கிளி அவர்கள். இது அனைத்தும் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் , யாரிடமும் எதற்காகவும் கையேந்தாமல், அரசியல் எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி மக்கள் நலனில் அக்கறை கொண்டு பணியாற்றி வந்தார். திரு.முத்துக்கிளி அவர்கள் பொதுமக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருந்த போதிலும் 1996,2001,2006,2011, ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற எந்த உள்ளாட்சி மன்றத் தேர்தல்களிலும் ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்குக்கூட போட்டியிடவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தனது நண்பர்கள் அழைப்பின்பேரில் 2002-இல் திமுக-வில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்ட போதிலும், வழக்கமாக தான் ஈடுபடும் பணிகளில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்தார். கட்சி அரசியலில் பெரிய ஈடுபாடு இல்லையென்றாலும், 2005-ஆன் ஆண்டு கேப்டன்.விஜயகாந்த் அவர்கள் தேமுதிக-வை துவக்கிய பொழுது மீண்டும் அதே நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க அக்கட்சியில் அடிப்படை உறுப்பினராக இணைந்தார் திரு.முத்துக்கிளி அவர்கள். அப்பொழுதும் கட்சிப்பணியில் தீவிரம் காட்டாமல், தன் வழக்கமான பொதுநல சேவையில் தொடர்ந்து பணியாற்றி வந்தார். ஆனால் இவரின் உழைப்பையும்,செல்வாக்கையும் கட்சிக்கு பயன்படுத்திக்கொள்ள விரும்பிய தேமுதிக திரு.முத்துக்கிளி அவர்களை கமுதி ஒன்றிய இளைஞரணிச் செயலாளராக நியமித்தது. அப்பொறுப்பேற்றவர் கட்சி நடத்திய மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆகியவற்றிற்கு தன் சொந்த செலவில் வேன்களில் மக்களை அழைத்துச் சென்று பங்கேற்றதுடன், ஒவ்வொரு வருடமும் கேப்டன் பிறந்தநாள் விழா தன் பகுதிகளில் சிறப்பாக நடத்தி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து சிறப்பாக பணியாற்றினார். 2011-இல் கட்சியின் கூட்டணி குறித்தான நிலைப்பாட்டில் ஏற்பட்ட அதிருப்தியில் தாய்க்கழகமான திமுக-விற்கு திரும்பினார்.

2011-இல் தாய்க்கழகமான திமுக-விற்கு திரும்பினாலும், கட்சியில் பொறுப்புகள் ஏதும் வழங்கப்படாத நிலையிலும், பதவிகளை பெரிதாக பொருட்படுத்தாதவர் திரு.முத்துக்கிளி அவர்கள். ஆகையால் தேமுகவில் ஒன்றிய அளவில் பதவிவகித்து வந்த நிலையில் இங்கு சாதாரண தொண்டராகவே பணியாற்றுவதில் அவருக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை. பொதுவாழ்விற்கு அடியெடுத்து வைத்து 30 ஆண்டுகள் ஆன நிலையிலும் தேர்தல் அரசியலில் போட்டியிடாமல் தன் கடமையை மட்டுமே செய்து வந்தார். கடைசியில் 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுகழகத்தின் கட்டளையை ஏற்று கமுதி ஒன்றியம் 14-ஆவது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் வேட்பாளராக தன் துணைவியார் திருமதி.கவிதா முத்துக்கிளி அவர்களை களமிறக்கி மகத்தான வெற்றிவாகை சூடினார்.


எக்கட்சியிலும் சேராமல் தன் பொதுவாழ்க்கையை தொடங்கி, அதில் நீண்ட காலம் பயணித்த திரு.முத்துக்கிளி அவர்களின் சேவை மனப்பான்மை உண்மையில் போற்றுதலுக்குறியது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. எனவே இந்த புதிய பொறுப்பின் மூலம் தன் சேவையை இன்னும் அதிகப்படியானோருக்கு செய்திடுவார் என்பதில் ஐயமேதுமில்லை. திரு.முத்துக்கிளி தம்பதியினர் சாதி, மொழி,மதம், இன வேறுபாடுகள் கடந்து அனைவருக்கும் சிறப்பான முறையில் பணியாற்றி வாய்ப்பளித்த கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved