ஊராட்சி மன்றத் தலைவர் - ஆண்டிபட்டி - திருமதி.ஜெகதா ஜெயக்குமார்
திருமதி.J.ஜெகதா அவர்கள் 1977- இல் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள P.அழகாபுரி கிராமத்தில் திரு.அன்னக்கொடி– திருமதி. இராஜாத்தி தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகளாகப் பிறந்தார். எஸ்.எஸ்.எல்.சி வரை பயின்றுள்ளவர், திரு.ஜெயக்குமார் அவர்களை மணமுடித்துள்ளார்.
திரு.V.ஜெயக்குமார் அவர்கள் 1968-இல் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகேயுள்ள P.அழகாபுரி கிராமத்தில் திரு.வேலாண்டி நாயக்கர் – திரு.புஸ்பம் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகனாப்பிறந்தார். எஸ்.எஸ்.எல்.சி வரை பயின்றுள்ளவர் விவசாயப்பணியினூடே கோழிப்பண்ணையும் நடத்தி வருகிறார். திரு.ஜெயக்குமார் – திருமதி.ஜெகதா தம்பதியினருக்கு J.விக்னேஷ்குமார் என்ற மகனும், J.கனிமொழி என்ற மகளும் உள்ளனர்.
1990-ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அரசியலில் காலடி எடுத்து வைத்தவர், ஆண்டிப்பட்டி ஒன்றியத் தலைவராக பணியாற்றியுள்ளார். அக்கால கட்டத்தில் நூற்றுக்குமேற்பட்ட கிராமங்களில் பா.ஜ.க-யின் கிளைகளை நிறுவி சாதனை படைத்தவர் திரு.ஜெயக்குமார் அவர்கள். 2004-ஆம் ஆண்டு அ.இ.அ.தி.மு.கழகத்தில் இணைந்தவர் அக்கட்சியின் கிளைக்கழக செயலாளராக பணியாற்றி வந்தார். 2006 முதல் 2016 வரை இராஜக்காள்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவராக பத்தாண்டுகள் பணியாற்றியவர், அவ்வூராட்சியின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி, தெருவிளக்குகள், சாலை வசதி, சுகாதார கழிப்பிட வசதி, மயானப்பாதை மற்றும் தகனமேடை, நிழல்கொடை, சாக்கடை வசதி, அங்கன்வாடி, பள்ளிக்கட்டிடம், சுற்றுச்சுவர் போன்ற பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். மேலும், ஏழை-எளியவர்களுக்கு பசுமை வீடுகள், தொகுப்பு வீடுகள், முதியோர் உதவித்தொகை, விவசாய மானியம், இலவச ஆடு என அனைத்து நலத்திட்டங்களையும் செம்மையாக நிறைவேற்றியுள்ளார். தவிர, உள்ளூர் மக்களுக்குத் தேவையான உதவிகளை மனமுவந்து செய்துகொடுப்பவர், அம்மக்களின் கோரிக்கைகளை நிர்வாகத்திடம் முன்வைத்து தீர்வுகாண உழைத்து வருகிறார். மேலும் மக்களின் சுக-துக்கங்களில் முன்னின்று பங்கெடுத்துக்கொள்பவர், உள்ளூர் நிகழ்வுகள், விஷேசங்கள் அனைத்திலும் முக்கியப்பொறுப்பேற்று நடத்திய வருகிறார் திரு. ஜெயக்குமார்அவர்கள்.செல்வி.ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப்பிறகு அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தில் இணைந்து அக்கட்சியின் ஆண்டிப்பட்டி ஒன்றியச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இராஜக்காள்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராக தனது துணைவியார் திருமதி.ஜெகதா அவர்களை களமிறக்கி வெற்றி பெறச்செய்துள்ளார். கால்நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக பொதுவாழ்வில் தீவிரமாக பணியாற்றி வரும் திரு.ஜெயக்குமார் – திருமதி.ஜெகதா தம்பதியினர் இப்புதிய பொறுப்பில் சாதி, மதம், இனம், மொழி கடந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக செயல்பட்டு சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டி அன்புடன் வாழ்த்துகிறோம்.