ஊராட்சி மன்றத் தலைவர் - சிவகாசி - திருமதி.வீரநாகம்மாள் கிருஷ்ணசாமி
திருமதி.வீரநாகம்மாள் கிருஷ்ணசாமி அவர்கள் 1968-ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள கவுண்டம்பட்டி கிராமத்தில் திரு.மாரிமுத்து – திருமதி.சின்னத்தாயம்மாள் தம்பதியினருக்கு விவசாயக்குடும்பத்தில் மகளாகப்பிறந்தார். தொடக்கப்பள்ளி வரை பயின்றுள்ளவரான திருமதி. வீரநாகம்மாள் அவர்கள், அதே ஊரைச் சேர்ந்த தெய்வத்திரு.கிருஷ்ணசாமி அவர்களை மணமுடித்துள்ளார். இத்தம்பதியினருக்கு K.சீனிவாசன், K.ராஜீவ்காந்தி என்ற இருமகன்களும், K.நாகசுதா என்ற மகளும் உள்ளனர்.
மறைந்த திரு.கிருஷ்ணசாமி அவர்கள் காங்கிரஸ் பாரம்பரிய பின்னனி கொண்டவர். 1996, 2001 என தொடர்ச்சியாக இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவராக பத்தாண்டுகாலம் சிறப்பாக பணியாற்றிய திரு.கிருஷ்ணசாமி அவர்கள், 2011 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக மீண்டும் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கவுண்டம்பட்டி ஊராட்சியின் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சாக்கடை வசதி, மயான வசதி, அங்கன்வாடி, நியாயவிலைக்கடை போன்ற அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி, வளர்ச்சித் திட்டங்களை செம்மையாக செயல்படுத்தியவர் திரு.கிருஷ்ணசாமி அவர்கள். மேலும் முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை, சமையல் எரிவாயு, போன்ற அரசின் பல்வேறு மானியங்களை அடித்தட்டு மக்களுக்குப் பெற்றுக்கொடுத்து அவர்களின் மனங்களில் நீங்க இடம் பெற்றவர். சீரிய அர்ப்பணிப்புடன் கூடிய மக்கள் பணியால் தேர்தல் களம் கண்டபொழுதெல்லாம் மக்களால் வெற்றி மகுடம் சூட்டப்பட்ட திரு.கிருஷ்ணசாமி அவர்கள் மூன்றாவது முறையாக பதவி வகித்த காலத்தில் 2014-ஆம் ஆண்டு காலமானர் என்பது துரதிஷ்டவசமானது.
திரு.கிருஷ்ணசாமி அவர்களின் வழியில் பொதுமக்கள் சேவையில் குறைவில்லாமல் தொடர்ந்து வரும் அவர்களின் குடும்பத்திலிருந்து கடந்த 2019-டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கவுண்டம்பட்டி ஊரட்சி மன்ற தலைவர் வேட்பாளராக களமிறங்கிய துணைவியார். திருமதி.வீரநாகம்மாள் அவர்களை மக்கள் மகத்தான வெற்றி பெற வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கணவர் திரு.கிருஷ்ணசாமி அவர்களின் மக்கள் பணியை தொடர வந்துள்ள திருமதி.வீரநாகம்மாள் அவர்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சாதி, மதம் பாராமல் பணியாற்றி கணவரின் புகழுக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.