அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம் - விருதுநகர்- திரு.R.கிருஷ்ணகுமார்.
திரு.R.கிருஷ்ணகுமார் அவர்கள் 05.05.1980-இல் விருதுநகரில் உள்ள முத்துராமன்பட்டியில் திரு.இராமசாமி நாயக்கர்-திருமதி.பாண்டியம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். உயர்நிலைப்பள்ளி வரை கல்வி பயின்றவர், பின் பெற்றோர்களுக்கு உதவியாக விவசாயப்பணியில் ஈடுபட்டார்.
ஒருசில ஆண்டுகள் விவசாயப்பணியில் தொடர்ந்தவர், போதிய வருமானத்தை ஈட்டித்தராத விவசாயத்தில், குடும்பத்துடன் எல்லோரும் பணியாற்றுவது வீண் என்று தெளிவு பெற்றவர், சொந்தமாக தொழில் செய்ய உத்தேசித்தார். அந்த நிலையில் கையிலிருந்த சொற்ப பணத்துடன், கடன் பெற்று 1998-இல் சொந்தமாக ஆட்டோ வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தார். ஒருசில வருடங்கள் ஆட்டோ ஓட்டும் தொழிலில் தொடர்ந்தவர், 2000-இல் ஆட்டோவிலிருந்து காருக்கு மாறியவர், சொந்தமாக கார் வாங்கி வாடைக்கு ஓட்டத்துவங்கினார் திரு.கிருஷ்ணகுமார் அவர்கள். சுமார் நான்காண்டுகள் அந்த தொழிலில் தொடர்ந்தவர், இத்தொழிலோடு கூடுதலாக, 2005-ஆம் ஆண்டு முதல் சிறிய அளவில் இலங்கைக்கு மின்னனு சாதனங்களை ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டார். இதன் காரணமாக பலமுறை இலங்கைப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறுப்பிடத்தக்கது. 2007-ஆம் ஆண்டு வரை சுமார் இரண்டாண்டுகாலம் ஏற்றுமதித்தொழிலில் ஈடுபட்டவர், இலங்கையில் சீனாப்பொருட்கள் குவியத்துவங்கியவுடன் அத்தொழிலை கைவிட்டார். அதற்குப்பின் பிளக்ஸ் ப்ரிண்டிங் துறையில் கால்பதித்தவர், மகா பிளக்ஸ் என்ற பெயரில் விருதுநகரில் நிறுவனத்தை துவங்கி அதை சிறப்புடன் நடத்திக்கொண்டு வருகிறார். தன் தேடுதலை அதோடு நிறுத்திக்கொள்ளாத திரு.கிருஷ்ணகுமார் அவர்கள், தொடர்ந்து புதுப்புது முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். அதன் தொடர்ச்சியாக மகா டிவி என்ற பெயரில் விருதுநகரில் உள்ளூர் தொலைக்காட்சி சேனலைத் துவங்கினார். இதன்மூலம் தென்மாவட்டத்தில் சொந்தமாக டிவி சேனலை துவங்கிய முதல் கம்பளத்தார் என்ற பெருமையைப் பெற்றார். இதன் தொடர்ச்சியாக விருதுநகர் தவிர அருப்புக்கோட்டை பகுதியிலும் தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியவர், மகா ப்ளஸ் டிவி என்ற பெயரில் கூடுதல் சேனலையும் துவங்கி சிறப்புடன் நடத்தி வருகிறார்.
விவசாயத்தில் துவங்கி ஆட்டோ டிரைவராக தொழிலில் கால்பதித்து தன் தொழிலை சிறிது, சிறிதாக முன்னேறிக்கொண்டுவந்தவர், டிராவல்ஸ்துறையில் கிடைத்த அனுபவமும், அவருக்கு அன்றிருந்த அரசியல் ஞானத்தின் அடிப்படையில் 2005-ஆம் ஆண்டு கேப்டன்.விஜயகாந்த் அவர்கள் தேமுதிக-வைத் துவங்கிய பொழுது அதில் இணைத்துக்கொண்டு, தனது முதல் அரசியல் பயணத்தை தேமுதிகவில், விருதுநகர் மாவட்ட மாணவரணிச் செயலாளரகத் துவங்கினார். தொழில்துறையில் தன் அயராத உழைப்பால் குறுகிய காலத்தில் அடுத்த தொழில்கள் துவங்கும் அளவிற்கு தன்னை உயர்த்திக்கொண்டவர், அதேவேகத்தில் அரசியலிலும் பயணித்தார். இவரின் இயல்புக்கு கட்சி ஏற்றதாக இல்லாதபொழுது 2009-இல், தேமுதிக-வில் தனது நான்காண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் திரு.கிருஷ்ணகுமார் அவர்கள். தான் ஈடுபட்ட எந்தத் தொழிலிலும் தன் முத்திரை பதிக்கத் தவறாத திரு.கிருஷ்ணகுமார், ஒரு தொழிலிலிருந்து மற்றொரு தொழிலுக்கு மாறுகையில், முன்பு செய்ததைக்காட்டிலும் கூடுதல் வெற்றியைத் தான் பதிவு செய்துள்ளாரே தவிர, எதிலும் தோல்வியையோ, நஷ்டத்தையோ சந்திக்காதவர். அதுபோலவே, அரசியல்துறையிலும் கால்பதித்தவர், தேமுதிக-வில் நான்காண்டுகால அரசியல் அனுபவம் திரு.கிருஷ்ணகுமார் அவர்களுக்கு ஒருதெளிவான அரசியல் பார்வையைக் கற்றுக்கொடுத்தது. அந்தவகையில் 2009-இல் திமுக-வில் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்ட திரு.கிருஷ்ணகுமார் அவர்கள், பொறுப்புகள் இல்லையென்று ஏனோ தானோ என்று செயல்படாமல், மற்றவர்கள் திரும்பிப்பார்க்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டார். கட்சி நிகழ்சிகள், பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் எதுவாகிலும் தன் முத்திரை பதிக்கத்தவராதவர், விரைவில் மாவட்டக் கழக நிர்வாகிகளின் கவனத்தைக் கவர்ந்தார். கட்சி செயல்பாட்டில் தீவிரம் காட்டினாரே தவிர, கட்சிப் பொறுப்புகளைப் பெற வேண்டும் என்று தீவிரம் காட்டாதவர், கட்சி தன்னை அங்கீகரிக்கும் வரை பொறுமையோடும், மனஉறுதியோடும் காத்திருந்தார். அந்தக் காத்திருப்பு ஆறாண்டுகள் கழித்தே நிறைவேறியது. ஆம், திரு.கிருஷ்ணகுமார் அவர்களுக்கு, தான் நேசிக்கும் தலைவராக விரும்பி ஏற்றுக்கொண்ட, கழகத்தின் அன்றை இளைஞரணிச் செயலாளர்.தளபதி.திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 2015-ஆம் ஆண்டு நடத்திய நேர்காணல் மூலம், விருதுநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக நேரடியாக தேர்வு செய்யப்பட்டார், இதன்மூலம், கட்சியில் பெற்ற முதல் பொறுப்பே தலைவரின் நேரடித்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அதிஷ்டத்தைப் பெற்றார் திரு.கிருஷ்ணகுமார் அவர்கள்.
கட்சியில் பொறுப்புகள் ஏதும் இல்லாதபோதிலேயே பொறுப்புடன் செயல்பட்டவர், தளபதியாரே தன்னை தேர்ந்தெடுத்து பொறுப்பு வழங்கியபின் சும்மா இருப்பாரா? ஏழை-எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, மாவட்ட அளவில் பாசறைக்கூட்டங்கள், தலைமை அறிவிக்கும் நலத்திட்ட உதவிகள், என ஏராளமன பணிகளில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார். இது தவிர, பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், கட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு சொந்த செலவில் பிரமாண்ட பேனர்களை வைத்து அசத்தி வருகிறார் திரு.கிருஷ்ணகுமார். கட்சிப்பணிகளில் துடிப்புடன் பணியாற்றும் திரு.கிருஷ்ணகுமார் அவர்களுக்கு கட்சியும் உரிய அங்கீகாரம் அளித்து சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழுவிலும், உட்கட்சி அமைப்புத் தேர்தல்களிலும் பொறுப்பாளராக நியமித்து கௌரவத்தை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கம்பளத்தார் சமுதாயத்திலிருந்து திமுகழகத்தில் வளர்ந்து வரும் இளம் தலைவரான திரு.கிருஷ்ணகுமார் அவர்கள், திராவிட இயக்கங்கள் போன்ற விளிம்பு நிலை மக்களுக்காக, சமூக நீதியை நிலைநாட்டிட பாடுபட்டு வரும் கட்சியில் பயணிப்பவர்களை சமுதாயம் என்ற குறுகிய வட்டத்திற்குள் கொண்டுவருவது, சமுதாயத்திற்கு பெருமை சேர்க்காது என்றாலும், சமுதாயத்தின் பிரதிநிதியாக, ஏற்றுக்கொண்ட கட்சிக்கும், தலைமைக்கும் விசுவாசமாக, சாதி, மத, இன,மொழி துவேசமின்றி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் பணியாற்றி, சமுதாயத்திற்கு பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.