ஊராட்சி மன்றத் தலைவர் -.மதுரை. தோழர்.திரு.R.கண்ணன்.
தோழர்.திரு.R.கண்ணன் அவர்கள் 01.06.1971-இல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் கிராமத்தில் திரு.ராமசாமி-திருமதி.ஆவுடையம்மாள் தம்பதியினருக்கு விவசாயக் குடும்பத்தில் மகனாகப்பிறந்தார். உயர்நிலைப்பள்ளி வரை கல்வி பயின்றவர் பெற்றோர்களுக்கு உதவியாக விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு திருமணமாகி திருமதி.K.பாண்டியம்மாள் என்ற மனைவியும்,K.ராம்குமார் மற்றும் K.சதீஷ்குமார் என்ற இரு மகன்களும் உள்ளனர்.
திரு.கண்ணன் அவர்கள் தனது 19-ஆவது வயதில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கல்விக்கட்டணத்திற்கு எதிரான போராட்டத்தில் கவரப்பட்டு அதில் இணைந்து பணியாற்றத் துவங்கினார். பின்னர் மார்க்சிய சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். கம்யூனிஸ்ட் இயக்கத்தை தேர்ந்தெடுத்ததின் மூலம் மறைமுகமாக போராட்ட வாழ்க்கையை தேர்ந்தெடுத்தார் என்று தான் சொல்லவேண்டும். ஏனெனில் எளிய மக்களுக்கான போராட்டத்தை ஏதாவது ஒருமூலையில் கம்யூனிஸ்ட்கள் நடத்திக்கொண்டே இருப்பதை பொதுவாழ்வில் பயணிப்பவர்கள் அறிவார்கள். அந்த வகையில் கம்யூனிஸ்ட்வாதியான திரு.கண்ணன் அவர்கள் இரயில் கட்டண உயர்வு, கரும்பு விவசாயிகளுக்கான போராட்டங்கள், கல்விக் கட்டணக்கொள்ளைக்கு எதிரான போராட்டங்கள் மூலம் சிறைகளில் அடைபட்டுக்கிடந்துள்ளார். இதுதவிர தன்னுடைய 30 ஆண்டுகால கம்யூனிஸ்ட் வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்டமுறை கைதாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முழுநேர இயக்கவாதியாக பணியாற்றும் திரு.கண்ணன் அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். போராட்டப்பாதையை தேர்ந்தெடுத்து பயணிப்பதன் மூலம், அடிக்கடி கைதாகி சிறை செல்வதை வாடிக்கையாகக் கொண்டவருக்கு, வறுமையைப் போக்க மதுரையில் ஒரு சிறிய நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
நீண்டகாலம் பொதுவாழ்க்கையில் இருந்தாலும் தேர்தல் அரசியலில் பங்கெடுக்காமல் சுமார் 20 ஆண்டுகளை இயக்க அரசியலுக்காக அர்ப்பணித்துக்கொண்டவர், 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கப்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். கம்யூனிஸ்ட்களை தோல்விகள் என்ன செய்துவிடப்போகிறது, அதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து அரசியலில் பயணித்தவர், உள்ளூர் பிரச்சினைகளில் கவனம் செலுத்தினார். கிராமத்தின் பல்வேறு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக்கோரி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்க பலகட்டப் போராட்டாங்களை முன்னெடுத்து போராடி வந்தார். இந்நிலையில் 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் கப்பலூர் ஊராட்சி மன்றத்தலைவர் வேட்பாளராகக் களமிறங்கியவருக்கு சோதனை காத்துக்கொண்டிருந்தது. முற்றிலும் பணநாயகமாகிவிட்ட தேர்தல்களத்தில் ஆளும்கட்சியின் அதிகார பலம், பணபலம் ஆகியவற்றையும் சேர்ந்தே சந்திக்க வேண்டிவந்தது. ஆனால் ஒரு கம்யூனிஸ்ட் இயக்கவாதியாக அதையெல்லாம் முறியடிக்கும் வகையில் தனது தொடர் போராட்டங்கள், சேவைகள் மூலம் மக்களைப் பக்குவப்படுத்தி தேர்தல் களத்தை தனக்கு சாதகமாக்கி வைத்திருந்தார். அது தேர்தல் முடிவுகளிலும் வெளிப்பட்டது. ஆம், ஆளும் கட்சியினரின் பணபலம், அதிகாரபலத்தை களத்தில் மண்ணைக்கவ்வ செய்து மகத்தான வெற்றி பெற்றார்.
தோழர்.திரு.கண்ணன் அவர்கள் கம்யூனிஸ்ட்வாதியாக சாதி,மதம்,இனம், மொழி அடையாளங்களைத் துறந்து ஏழை-எளிய சாமானிய மக்களுக்கு ஆதராவாகவும், அதிகார சுரண்டலுக்கு எதிராகவும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு வாழ்பவர். ஆதலால் நாம் அவரை சாதிய அடையாளங்களுக்குள் வைக்கவோ, பார்க்கவோ, உரிமை கொண்டாடவே விரும்பவில்லை. ஆனால் கம்பளத்தார் சமுதாயம் தன் பங்கிற்கு ஒரு இயக்கவாதியை, போராளியை இந்த நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளது என்பதை உலகிற்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். திரு.கண்ணன் அவர்களின் போராட்ட வாழ்க்கை அரசியலில் களம்காண விரும்புபவர்கள் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். திரு.கண்ணன் அவர்கள் மேலும் தன் சேவையால் மக்கள் துயர் போக்கவேண்டும் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.